இந்தப் புதிய வரியை நிதியமைச்சர் கொண்டுவரக் காரணம் - தப்புக் கணக்குக் காட்டி வருமான வரி ஏய்க்கும் ஏராளமான தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்தாம். இந்த நிறுவனங்களை மேலாண்மை செய்வோர், அவர்கள் நடத்தும் தொழில் லாபகரமாக நடக்கும் பட்சத்தில், ஈட்டும் லாபத்திற்கு சட்டப் படி அரசுக்குச் சேர வேண்டிய வரியைக் கட்டவேண்டும். அப்படிச் செய்யாமல், அவர்கள் தங்கள் இயக்கச் செலவுகளை உண்மைக்குப் புறம்பாக அதிகப் படுத்திக் காட்டி, லாபத்தை உண்மை நிலையை விட மிகக் குறைத்து மதிப்பிட்டு (நஷ்டக்) கணக்கு காண்பிப்பதன் மூலம் வரி கட்டுவதைத் தவிர்க்கிறார்கள்.
இப்படி செயற்கையாக சேர்க்கப் படக் கூடிய சில செலவுகள் எவை எவை?
- நிறுவனத்தின் பணியாளர்கள் மேற்கோள்ளும் இயக்கத்திற்கு உண்மையில் தேவையில்லாத வெளிநாட்டுப் பயணச் செலவுகள்.
- ஒரு நிறுவனத்திற்குத் தாய் நிறுவனம் வெளிநாட்டில் இருந்தால் அதன் தலைமைப் பொறுப்பில் இருப்போர் இந்தியா வரும் போது அவர்களைக் கவனித்துக் கொள்ளும் செலவுகள்
- விற்பனையை உக்கப் படுத்துகிறோம் என்ற பெயரில் செய்யும் அவசியமற்ற கேளிக்கைச் செலவுகள்
- பணியாளர்களை ஊக்கப் படுத்துகிறோம் என்ற பெயரில் தேவையற்ற ஆடம்பரங்கள்
- பணியாளர்களுக்கு அவர்கள் சொந்த ஆதாயத்திற்காக கொடுக்கப் படும் நிறுவனத்தின் இயக்கத்திற்குச் சிறிதும் பொருந்தாத சலுகைகள்
கூர்ந்து கவனித்தோமானால் மேற்கூறியவற்றில் சில வகைச் செலவுகளை வரி ஏய்க்காத நல்ல நிறுவனங்கள் கூட தங்களின் நிறுவனத்தின் இயக்கத்திற்காக அவசியம் செய்ய வேண்டியிருப்பது புரியும்.
உதாரணத்திற்கு, தகவல் தொழிலநுட்பச் சேவை நிறுவனங்கள், தங்கள் பணியாளர்கள் நிறுவனத்தின் சேவை நுகர்வோரைச் சந்திக்கும் பொருட்டு வெளி நாட்டுக்கு அனுப்ப வேண்டியது அந்தத் தொழிலுக்கு அவசியம். விற்பனையை பெருக்கக் கருத்தரங்கங்கள், பொருட்காட்சிகள், நுகர்வோர் சந்திப்புகள் போன்ற அவசியச் செலவுகள் பல நிறுவனங்களுக்கு உண்டு.
ஆக, புதிய விளிம்பு ஆதாயங்கள் மேல் வரி அமல் படுத்தப் படும் போது, இத்தகைய செலவுகள் ஒரு நிறுவனத்துக்குத் தேவையா இல்லையா என்று சிந்தித்து, எந்தெந்தச் செலவுகளை அனுமதிப்பது, எதை அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கும் அதிகாரம் வரி அதிகாரிகளுக்கு தானாக அமைகிறது. தெளிவில்லாத வரிச் சட்டத்தினால் சரியாகச் செயல்படும் நிறுவனங்களும் இப்போது அரசு அதிகாரிகளுக்குத் தங்கள் செலவுகளைத் தெளிவு படுத்தும், அல்லது அவர்கள் சிந்தித்துத் தாமாகப் பெறும் தவறான தெளிவை (wrong interpretation) வேண்டிய போது சரியான வகையில் தெளிவு செய்யவும் வேண்டிய அதிகச் சுமை ஏற்பட்டுள்ளது.
எந்த ஒரு அரசு விதியோ, சட்டமோ நல்லவர்களை தண்டிப்பதாகவும், கண்டிப்பதாகவும், சிரமப்படுத்துவதாகவும் அமையக் கூடாது. இந்தக் கொள்கை அடிப்படையில்தான், நிதியமைச்சர் ஆலோசனைக் குழுவை அமைத்தார். இந்தக் குழு, புதிய வரியின் அமலாக்கத்தில் வேண்டிய தெளிவைக் கொண்டுவருவதைக் குறிக்கோளாகக் கொண்டது. புதிய நிதியாண்டில் 45 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் இந்தப் புதிய வரியின் மேல் ஒரு தெளிவு ஏற்படவில்லை.
2 comments:
Fringe Benefit Tax = "விளிம்பு ஆதாயங்கள் மேல் வரி" என்பது நல்ல மொழி பெயர்ப்பு. நன்றி.
நந்தலாலா
ஊக்கத்திற்கு நன்றி திரு செல்வபெருமாள் அவர்களே. எனக்கும் தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட விருப்பம் அதிகம். - உதயகுமார்
Post a Comment