Sunday, April 24, 2005

குளு கு(ள்)ளு மணாலி !!

பஞ்சாபின் சண்டிகர் நகரத்திலிருந்து சுமார் 330 கிலோமீட்டர் தூரம் வடக்கு நோக்கி மலைப் பாதைகளில் பயணித்தால் மலைவாச நகரமான மணாலியை அடையலாம்.

பஞ்சாப் எல்லையிலேயே மலைப் பயணம் துவங்கி விடுகிறது. மிச்சத் தூரம் முழுவதும் இமாசலப் பிரதேச மாநிலத்தில்தான். குள்ளு நகரம், மணாலிக்கு சுமார் 30 கிலோமீட்டர் முன்னதாகவே வந்து விடுகிறது. சுமார் 7 மணி நேர மலைப் பயணம் 2500 அடி முதல் 3500 அடிக்குள்ளேயே முடிந்து விடுவதால், மலையின் குளு குளு தட்பவெப்பம் குள்ளூ வரை கிடையாது. ஏனென்றால் இது ஏப்ரல் மாதம். சூரியனின் தாக்கம் அதிகரித்து விட்டது.

முக்கால்வாசி தூரம் பியாஸ் நதியின் கரையோரத்திலேயே பயணம். சில இடங்களில் சாலையின் அருகே ஏறக்குறைய சம தளத்தில் ஒடும் நதி, பல இடங்களில் அதல பாதாளத்தில் ஒடுகிறது. ஆரம்பத்தில் கரைபுரண்டோடும் நதியாகத் தெரியும் பியாஸ், குள்ளுவின் அருகில் ஒரு சிற்றோடை போல்தான் காட்சியளிக்கிறது.

குள்ளூவை நெருங்க நெருங்க சாலையோரமெங்கும் ஆப்பிள் தோட்டங்களைப் பார்க்கலாம். குள்ளுவைத் தாண்டி ஒரு பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி ஆலயம் உள்ளது. வெளித்தோற்றத்திற்கு மற்றைய கோவில் போன்று தோற்றமளிக்கும் இந்தக் கோவில், உள்ளே நுழைந்தால் ஒரு குகைக்குள் அமைக்கப் பட்டிருப்பது தெரிகிறது.


குள்ளூவிலிருந்து மணாலிக்குச் செல்லும் கடைசி முப்பத்திச் சொச்ச கிலோமீட்டர் தூரத்தில் ஏறக்குறைய 3200 அடி ஏறி விடுகிறோம். வழியிலேயே பனி படர்ந்த இமாலயச் சிகரங்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் அழகிய காட்சிகள். இதமான குளு குளு குள்ளுவைத் தாண்டி ஆரம்பித்து மணாலியை அடையும் போது நடுங்கும் குளிராக மாறுகிறது. இருந்தாலும் ஒரு சாதாரணக் கம்பளிச் சட்டையுடன் (sweater) சமாளிக்க முடியும். மணாலி ஒரு சிறிய சுற்றுலா நகரம். இங்கு சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள்தான் அதிகம்.

மணாலியை விட்டு சிறிது வெளியே சென்றால் ஒரு ராமர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் அருகே ஒரு சுடுநீர் ஊற்று இருக்கிறது. இந்த ஊற்றை குழாய் அமைத்து ஆண்களும் பெண்களும் தனியாகக் குளிக்க வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். உள்ளே உள்ளூர்வாசிகள்தான் ஆக்கிரமித்துக் கொண்டு வெதுவெதுப்பான சுடுநீர் குளியலைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

டிசம்பர், ஜனவரி மாதங்களில் மணாலி நகரத்தினுள்ளேயே பனி (இந்தியில் பர்·ப் (Burf)) படர்ந்திருக்குமாம், இப்போது இல்லை.

சுடுநீருற்றிலிருந்து சிறிது தூரம் மலைமேல் ஏறிச் சென்றால் ஸோலாங் வேலி (solang valley). இங்கிருந்து மட்டக் குதிரையில் சுமார் அரை மணி நேரம் மலையேறிச் சென்றால் பனி படர்ந்த மலைச்சரிவை அடையலாம். இங்கே சிவலிங்கம் உள்ள ஒரு கோவில் உள்ளது. இந்த லிங்கத்தின் மேல் ஒரு மலையருவி எந்த நேரமும் நீரைச் சொரிந்து கொண்டிருப்பது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்தக் கோவிலின் கீழ் அமர்நாத்தில் இருப்பதைப் போல பனியாலான லிங்கம் ஒரு குகைக்குள் இருப்பதாகக் கதை சொல்லித்தான் எங்களைக் குதிரையேற்றினார்கள். ஆனால் கோவிலுக்கு அருகில் செல்லச் செல்ல பனிக் கோவிலை பனி மூடிவிட்டது இப்போது உள்ளே போக முடியாது என்று கதையை மாற்றிக்கொண்டார்கள். அங்கே பனியால் ஆன சிவன் இருக்கிறாரா என்பது அங்கே உள்ள சிவனுக்கே வெளிச்சம்.

பனிச் சரிவில் பனிச்சறுக்கு விளையாட்டுகள் விளையாடலாம். ஒவ்வொன்றுக்கும் அங்கே இருக்கும் கூட்டத்தின் ஆர்வத்தைப் பொருத்து கட்டணம் வசூலிக்கிறார்கள். கூட்டம் அதிகமாயிருந்த போது ஒரு முறை பனியில் சறுக்க 50 ரூபாயாக இருந்த கட்டணம், கூட்டம் குறைந்தவுடன் 20 ரூபாயாகக் குறைந்து விட்டது. பனிச் சரிவின் அருகிலேயே அடுப்பை மூட்டி தேனீர் செய்து விற்கிறார்கள். பனியில் நடக்கும் போது வழுக்குகிறது. ஆகவே வாடகைக்கு கம்பு (டண்டா) கொடுக்கிறார்கள். ஒரு கம்புக்கு வாடகை 5 ரூபாய்.

இன்னும் 3000 அடி மேலே சென்றால் ஸ்னோ பாயிண்ட் (snow point). சில பனி மூடிய சிகரங்களின் உச்சியை இங்கு அடைந்து விடுகிறோம். ஊட்டி, கொடைக்கானல் போலவே விடுமுறை நாட்களில் போக்கு வரத்து நெரிசல், பார்க்கிங் பிரச்சினை. இன்னும் மேலேறிச் சென்றால் ரோதாங் பாஸ் (Rotang Pass). பனிப்பொழிவு அதிகரித்து சாலைகள் பனியால் மூடி விட்டதால் நம்மை ராணுவம் ஸ்னோ பாயிண்ட்டுடன் நிறுத்தி விடுகிறது. பனி படர்ந்த இடங்களுக்குச் செல்ல சிறப்பு ஆடைகள், கையுறைகள், காலணிகள் தேவை. வழியெங்கும் வாடகைக்குக் கொடுக்கக் காத்திருக்கிறார்கள்

ஸ்னோ பாயிண்டில் பனிச்சறுக்கு விளையாட்டுகள் ஏராளம். பணம் பண்ணுவதில் குறியாக இருக்கும் வழிகாட்டிகளும், விளையாட்டுகளை நடத்துபவர்களும், சுற்றுலாப் பயணிகளுக்கு விளையாட்டுகளில் திருப்தி ஏற்படுகிறதா என்று கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

நேற்று மலைச் சிகரத்தின் மேல் பொழிந்த பனி செத்தை விழுந்து செம்மண் வண்ணத்தில் தெரிகிறது. திரும்பவும் அதன் மேல் பனித் தூற்றல் விழுந்தவுடன் அது பளிச் வெள்ளையாக மாறிவிடுவது அழகோ அழகு! மலைச் சிகரங்களைப் பார்த்தவுடன் எங்கே சமீபத்தில் பனிப் பொழிவு ஏற்பட்டிருக்கிறது என்று சட்டென்று சொல்லி விடலாம். மலைச்சிகரங்கள் மேல் பனிபொழிவதைப் பார்த்தால் அடர்ந்த வெண்மேகம் சூழ்ந்த சிகரம் போலத்தான் கண்ணுக்குத் தெரிகிறது.

மணாலியில் பளிச்சென்று உதிக்கும் சூரியனை மதியத்திற்குப் பிறகு காண்பது கடினமாக இருந்தது. மதியத்தில் தவறாமல் மணாலியில் மழையும், மேலே சிகரங்களில் பனியும் சில மணி நேரம் பொழிந்தது.

சாப்பாட்டிற்குக் கிடைக்கும் மக்கி ரொட்டியும், கீரை சப்ஜீயும் அருமை.

அழகான மணாலியும் பனி சூழ்ந்த இமாலயச் சிகரங்களும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன.

No comments:

Blog Archive