அந்த நோக்கங்களில் ஒன்று, குறைந்த செலவு கட்டமைப்புகள் (cost structure) கொண்ட இந்தியாவில உரிமம் பெற்ற பொது மருந்துகளைத் தயாரிப்பதன் மூலம் அவற்றின் உற்பத்திச் செலவுகள் குறைய வழி செய்தல்.
இரண்டாவது, இந்தியாவிலேயே குறிப்பிட்ட (புற்று நோய், உடல் பாகங்களுக்கு ஏற்படும் நோய்கள், எய்ட்ஸ் போன்ற) நோய்களைத் தீர்க்கும் புதிய மருந்துகளைக் கண்டு பிடிக்க ஆய்வுக் கூடங்கள் அமைத்து அந்த ம்ருந்துகளுக்குக் காப்புரிமை (patent) பெறுதல்.
அமெரிக்காவில், இத்தகைய புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப் படும் போது, அவை முதல் கட்டமாக எலி, குரங்கு, கினி பன்றி போன்ற விலங்குகள் மேல் முடிந்த வரை பரிசோதிக்கப் படும். இந்தச் சோதனைகள் வெற்றி பெற்றால், அடுத்தக் கட்டமாக, விருப்பப் படும் மனிதர்கள் மேல் பரிசோதனை செய்யப் பட்டு, அந்த மருந்துகள் அவர்கள் மேல் சரியாக வேலை செய்கின்றன என்று அறியப் பட்ட பின்னரே, பொது விநியோகத்திற்காக உற்பத்தி செய்ய அனுமதிக்கப் படும். நோயால் அவதிப் படும் மனிதர்கள், புழக்கத்தில் இருக்கும் மருந்துகள் தங்கள் நோய்க் கொடுமையைத் தீர்க்காத போது, புதிய மருந்துகளாவது தங்கள் நோயைத் தீர்த்துவைத்து நீண்ட ஆரோக்கியமான ஆயுளை அளிக்கும் என்ற நப்பாசையில் இத்தகைய பரிசோதனைகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளத் தலைப் படுவர்.
இப்படித் தானாகப் பரிசோதனைகளுக்கு முன்வருபவர்களுக்கும் புதிய மருந்துகளால் ஏற்படக் கூடும் ஆபத்தான பக்க விளைவுகள் முதலில் எடுத்துக் கூறப்பட வேண்டும். இதில் உண்மை என்னவென்றால் பரிசோதனைகளைக் கடந்து பொது வினியோகத்திற்கு வந்த மருந்துகளே பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படுத்திய (, அல்லது கண்டுபிடிக்க முடியாத மிக மெதுவான) பக்கவிளைவுகளால் உபயோகித்தோரைக் கொன்ற கதைகள் ஏராளம். ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்தும் மருந்துகள் படிப் படியாக சிறுநீரகங்களை ஒழித்துக் கட்டியது போன்ற கதைகளைப் படித்திருக்கிறோம். ஆகவே இந்தப பரிசோதனைகள் ஆபத்தை விரும்பி விலைக்கு வாங்குவதற்குச் சமம்.
இந்த ஆபத்துகள் புரிய வைக்கப் பட்ட பின்னரே ஒருவர் மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப் படலாம். அதோடல்லாமல், பரிசோதனைக்கு உட்படுத்தப் படுபவர் உயிருக்குப் பக்க விளைவுகளால் ஏற்படக் கூடும் ஆபத்துகளுக்கும், இழப்புக்கும் காப்பீட்டு ஒப்பந்தங்களை (insurance) மருத்துவ ஆய்வுக் கூடம் தன் செலவில் செய்து தர வேண்டும். பரிசோதனைக்குட்படும் நோயாளிக்கு பரிசோதனைக் காலத்தில் சம்பளம் போல் பணம் வழங்கப் பட வேண்டும். இதற்கெல்லாம், அமெரிக்காவில் சட்டங்களும் சிறந்த கட்டுப்பாடுகளும் உள்ளன. இதையும் மீறி மனித நேயமில்லாமல் லாபமீட்டும் நோக்குடன் முறையற்ற பரிசோதனைகளைச் செய்யத் தலைப்படும் மருத்துவ நிறுவனங்களும், ஆய்வுக் கூடங்களும் இன்னும் உண்டு.
இந்தக் கட்டுப்பாடுகளும் சட்டங்களும் இல்லாத இந்தியாவில் புது மருந்து கண்டுபிடிக்கப் போகும் இந்திய நிறுவனங்கள் பரிசோதனைகளை முறையாக எப்படிச் செய்யப் போகின்றன? அவற்றை யார் மேற்பார்வை செய்து கட்டுக்குள் வைக்கப் போகின்றனர்? போதாத குறைக்கு இந்தியாவில் ஏழ்மை அதிகம். படிப்பறிவு குறைவு. வகை வகையான நோய்கள் அதிகம். அறியாமை அதிகம்.
இந்தியாவில ஏற்பட்டிருக்கும் இந்தப் பரிசோதனை வாய்ப்பை மோப்பம் பிடித்து, பரிசோதனை மற்றும் மருந்து கண்டுபிடிப்புச் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில், அயல்நாட்டு நிறுவனங்களும் இந்தியாவை நோக்கிப் படையெடுப்பதாகக் கேள்வி.
- மருந்துப் பரிசோதனைகளில் உட்படுத்தப் படுவோரை கினி பன்றிகளுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் பரிசோதனையின் போது ஆரோக்கியமான விலங்குகள் தெரிவு செய்யப் பட்டு அவற்றிற்கு முதலில் நோய் கிருமிகள் உட்செலுத்தப் பட்டு நோய் உண்டாக்கப் படுகின்றன. ஆரோக்கியமான மனிதர்கள் பரிசோதனைகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை (அயல் நாடுகளில்!). புழக்கத்தில் இருக்கும் மருந்துகளால் தீர்வு காணமுடியாது நோயால் பெரிதும் அவதிப் படும் மனிதர்களே பரிசோதனைக்கு அனுமதிக்கப் படுகிறார்கள்
- புதிய மருந்துகளால் இருக்கும் ஆபத்துகளைப் பார்த்த நாம், அவை சரியாக வேலை செய்யும் பட்சத்தில் அவற்றின் நோய் தீர்க்கும் பலன் இந்தியர்களுக்குக் கிடைக்கப் போவதையும், அவர்களில் வாழ்க்கைத் தரம் மேம்படப் போவதையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்
- அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப் படும் நோய்வாய்ப்பட்ட ஏழைகளுக்கு, இத்தகைய பரிசோதனைகள் மூலம் இலவசமாகக் கிடைக்கப் போகும் சிகிச்சை அவர்களுக்குப் பெரிதும் உதவக் கூடும்
- அயல்நாட்டவர் மேல் பரிசோதனை செய்யப் பட்டு சந்தைக்கு வந்த மருந்துகள் பலவற்றை நாம் இத்தனை நாள் உபயோகித்துப் பலன் பெற்று வந்திருக்கிறோம். இந்நிலையில் இந்தியர்கள் மேல் புதிய மருந்துப் பரிசோதனைகள் கூடாது என்ற வாதம் ஒருதலைப் பட்சமானதாகி விடும்.
No comments:
Post a Comment