Saturday, April 09, 2005

சீனப் பிரதமர் வென் ஜியாபாவொவின் இந்திய வருகை.

உலகின் 40% மக்கள் சீனாவிலும் இந்தியாவிலும் வாழ்கிறார்கள். இரு நாடுகளும் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கின்றன. கிடைக்கும் தகவல்களின் படி சீனா இந்தியாவை பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் சற்று முந்தியே இருக்கிறது எனலாம். உற்பத்தித் துறையில் சீனா முன்னணியில் இருந்தால், தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியா கொடி கட்டிப் பறக்கிறது.

ஆனால் சில முக்கியமான விஷயங்களில் இந்தியா சீனாவை விட ஒரு படி முன் இருக்கிறது.

பல ஆண்டுகளாக சீனா தன் நாணயமான ரென்மின்பியின் அமெரிக்க டாலருக்கெதிரான மதிப்பை ஒரே நிலையில் வைத்திருக்கிறது.

தனது ஏற்றுமதிப் பொருட்கள் அமெரிக்கச் சந்தையில் விலை குறைவாக இருக்க வேண்டி சீன அரசு இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

ஆனால் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டின் நாணயத்தின் மதிப்பை அதிகரிக்க வேண்டும். அந்த வகையில், சில வருடங்களாக வளர்ந்து வரும் சீனா, தன் நாணயத்தின் இன்றைய சரியான மதிப்பை விட மிகக் குறைத்து ரென்மின்பியின் மதிப்பைக் கட்டில் வைத்திருக்கிறது என்ற எண்ணம் மிகப் பரவலாக உள்ளது. இதனாலேயே அந்நிய முதலீடுகள் இன்று அதிக அளவில் சீனாவிற்குப் போகின்றன என்றும் சொல்லலாம். ஏன்? ஒரு நாள் சீனா தன் நாணயத்தை சரியாக மதிப்பிடத் தலைப்படும் போது, அங்கு செய்யப் பட்ட முதலீடுகளும் அன்று அதிக அளவில் மதிப்பிடப் படும் என்ற எதிர்பார்ப்பே அதற்குக் காரணம்.

அப்படி சீன அரசின் அந்நியச் செலாவணிக் கொள்கை மாறி ரென்மின்பியின் மதிப்பு திடீரென்று உயர்ந்தால், எதிர் விளைவுகளும் ஏற்படும். அதன் ஏற்றுமதிப் பொருட்கள் விலை உடனே அதிகரிக்கும். அதனால் சீனா விலையில் போட்டியிடும் திறனைச் சற்று இழக்கும். அது சீனாவின் ஏற்றுமதி அளவைப் பாதிக்கும். ஏற்றுமதி அளவு குறைந்தால் உற்பத்தி குறையும். சீனாவில் வேலை வாய்ப்புகள் குறையும். அந்நிய முதலீட்டாளர்கள் லாபமீட்டும் நோக்கத்தில் தங்கள் முதலீடுகளை வேறு லாபகரமான இடங்களுக்குப் பெயர்த்துச் செல்ல முயற்சிப்பார்கள். இவற்றால், திடீரென அந்நிய முதலீடுகள் நாட்டை விட்டுச் சடுதியில் சென்று விடும் அபாயம் சீனாவிற்கு இருக்கிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு இப்போதெல்லாம் அரசால் இப்படிச் செயற்கையாகக் கட்டுப் படுத்தப் படுவதில்லை. மத்திய வங்கி அவ்வப்போது சந்தையில் குறுக்கிட்டு ரூபாயின் மதிப்பு திடீரென்று ஒரேயடியாகக் குறையாமலோ அல்லது ஏறாமலோ பார்த்துக் கொள்வதோடு சரி. மற்ற படி சந்தைச் சக்திகள்தாம் ரூபாயின் மதிப்பை இன்று நிர்ணயம் செய்ய உதவுகின்றன.

இந்திய அரசின் அந்நியச் செலாவணிக் கொள்கை ஏற்கெனவே (அடைப்புக்குள் இருக்கும் பட்டியலைப் பார்க்கவும்) மாறிவிட்டதால், இந்தியா இத்தகைய அபாயத்தைக் கடந்து விட்டது என்றே சொல்லலாம்.இது இந்தியா செய்திருக்கும் சரியான காரியங்களில் ஒன்று.

தொழிலாளர்களின் ஊதியங்கள் குறைவாக உள்ள தன் நாட்டில், முதலீட்டுப் பணமும் குறைந்த வட்டியில் கிடைத்தால் சீனத் தொழில்கள் உற்பத்தித் திறனும் போட்டித் திறனும் அதிகரிக்கும் என்ற ஆவலில், சீனா 2% (செயற்கையாக நிர்ணயம் செய்யப்பட்ட) வட்டி விகிதத்தில் அரசு வங்கிகள் மூலம் கடன்களை அள்ளித் தெளித்திருக்கிறது. அவற்றில் கால்வாசிக்கும் மேல் வாங்கியவர்களால் வங்கிகளுக்குத் திருப்பிக் கட்டப் படவில்லை. அந்த வங்கிகளின் நிதி நிலையும், அவற்றில் சேமிக்கும் மக்களின் மனநிலையும் எப்படி இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். சேமிப்பில் ஒரு நாட்டின் மக்கள் நம்பிக்கையை இழந்தால், அது அந்த நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரிய பேரிடியாகும் வாய்ப்புகள் மிக அதிகம்.

இந்தியா BASEL போன்ற கட்டுப்பாடுகளை நம் வங்கி அமைப்புக்குள் கொண்டுவந்து, வங்கிகளின் வராக் கடன்களை பெருமளவு குறைத்து, இந்திய வங்கி அமைப்பை பெருமளவிற்கு பலப் படுத்தியிருக்கிறது.

இது இந்தியா செய்திருக்கும் இன்னொரு உருப்படியான காரியம்.

இந்த மேற்கூறிய இரண்டு உருப்படியான காரியங்களைப் பற்றி இந்தியர்களான நாம் நிச்சயம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

இந்தியாவும் சீனாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை சில இருக்கின்றன. ஷாங்காய் போன்ற உலகத் தரம் வாய்ந்த மாநகரங்களை கட்டமைப்பதில் சீனா அமோக வெற்றி கண்டுள்ளது. அதே போல, ஏழ்மையை ஒழிக்கும் தன் முயற்சிகளிலும் அது பல வகைகளில் வெற்றி பெற்றிருப்பதாக அறிகிறோம். சீனாவின் இந்த வெற்றிகளில் இருந்து இந்தியா கற்றுக் கொள்ளக் கூடியவை ஏராளம்.

உலக நாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் மேல் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டு போவதற்கு ஒரு மிக முக்கிய காரணம் இந்தியாவின் ஜனநாயக நம்பிக்கையும், அந்த நம்பிக்கை இந்த நாட்டில் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வந்திருப்பதும்தான். இந்திய மாநிலங்கள் ஒரு குடியரசாக ஜனநாயக முறையில் இணைந்து செயல்பட்டு இந்தியச் சந்தையைத் திறம்படக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், சீனா தனது ஜனநாயகமல்லாத அரசமைப்புடன ஒரு பரந்த சந்தையை எப்படி தொடர்ந்து வெற்றிகரமாகக் கட்டுப் ப்டுத்தப் போகிறது? பொறுத்துதான் பார்க்க வேண்டும்!

அமெரிக்க அரசு வேறு சமீபத்தில் "இந்தியா வல்லரசு நாடாக மாற உதவிகள் செய்யத் தயார். இந்தியாவுடனான அரச தந்திர உறவுகளை வளர்த்துக் கொள்ள ஆவல்" என்று அறிவித்திருப்பது, சீனாவைக் கவலைப் படுத்த வாய்ப்பிருக்கிறது.

இன்று இத்தகைய பொருளாதார மற்றும் அரசியல் சூழலில் சீனப் பிரதமர் இந்தியா வந்திருக்கிறார். இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். இரு நாடுகளும் நட்புக் கரம் நீட்டி ஒன்றிடம் மற்றொன்று கற்றுக் கொண்டு, ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்று உறுதுணையாக நடக்க முயன்றால் இரு நாடுகளுக்கும் கிட்டக் கூடிய ஆதாயங்கள் ஏராளம். நடக்குமா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

1 comment:

ந. உதயகுமார் said...

Test. The original post disappeared.

Blog Archive