ஒரு மனோதத்துவப் பேராசிரியர் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் வித்தியாசமாக பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதில் வல்லவர்.
ஒரு நாள் வகுப்புக்கு ஒரு கண்ணாடிக் குடுவையில் சிறிது தண்ணீருடன் வந்தார்.
குடுவையைக் கையில் தூக்கிப் பிடித்த படியே மாணவர்களைப் பார்த்து
"இந்தக் குடுவையில் உள்ள தண்னீரின் எடை எவ்வளவு இருக்கும் என்று அனுமானிக்க முடியுமா?" என்று கேட்டார்.
மாணவர்கள் உற்சாகமடைந்து "75 கிராம்!"... "நூறு கிராம்"... "நூற்றைம்பது!" என்று ஆளாளுக்குச் சத்தம் போட்டார்கள்.
"சரி போகட்டும். இதை நான் ஐந்து நிமிடங்கள் என் கையில் இப்படியே தூக்கி வைத்திருந்தால் என்ன ஆகும்" என்று பேராசிரியர் கேட்டார்.
"ஒன்றும் ஆகாது!" என்று மாணவர்கள் ஒன்றாய் குரல் எழுப்பினார்கள்.
"இப்படியே ஒரு மணி நேரம் கையில் வைத்திருந்தால்?". பேராசிரியர் மேலும் கேள்வி கேட்டார்.
"உங்கள் கை வலிக்க ஆரம்பித்து விடும்" என்று மாணவர்கள் சொன்னார்கள்.
பேராசிரியர் நிறுத்தவில்லை "சரி, ஒரு நாள் முழுவதும் இப்படியே வைத்திருந்தால்?" என்று மேலும் கேட்டார்.
அதற்கு மாணவர்கள் "உங்கள் கையில் உள்ள தசைகள் சோர்வடைந்து விடும்.... கை மரத்துப் போகும்,... வாதம் ஏற்படலாம்... உங்களை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல நேரிடலாம்" என்று பலவாறாகப் பதில் கூறினார்கள்.
"சரி. ஆனால் நடுவில் தண்ணீரின் எடை மாறியதா?" என்று கேட்டார் பேராசிரியர்.
மாணவர்கள் "இல்லை" என்று ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தார்கள்.
"பிறகு எதனால் இவ்வளவு உடல் உபாதை ஏற்பட்டது?" என்று ஆசிரியர் கேட்டார்.
மாணவர்களுக்குப் புதிராய் இருந்தது. "வெட்டியாக ஏன் குடுவையை கையில் பிடித்திருக்க வேண்டும்? அதனால் என்ன பயன்? அதனை உடனே கீழே வைத்து விட்டால் இத்தனை பிரச்சனைகளைத் தவிர்க்கலாமே?" என்று எதிர் கேள்விகள் கேட்டார்கள்.
"மிகச் சரியாகச் சொன்னீர்கள்! வாழ்வில் மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் இதைப் போலத்தான். சிறிது நேரம் மனதில் சுமந்து கொண்டு இருந்தால் பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தாது. நேரம் கடந்து அவற்றை மனதில் சுமந்து கொண்டு இருந்தால் மனது வலிக்க ஆரம்பிக்கும். அதை நாள் கடந்து வைத்திருந்தால் மிகுந்த மனச் சோர்வையும், தகைவையும் உண்டாக்கும். வாழ்வின் சவால்களையும் பிரச்சனைகளையும் பற்றி யோசிக்க வேண்டியது அவசியம். அதே போல் அவற்றை ஒவ்வொரு நாளின் இறுதியிலும், தூங்குவதற்கு முன் இறக்கி வைத்து விடுவது மிகவும் அவசியம். அப்படிச் செய்தால் தகைவு நம்மை அணுகாது. ஒவ்வொரு காலையும் புத்துணர்ச்சியுடனும், சக்தியுடன் விழித்தெழுந்து வாழ்வின் சவால்களை எளிதாகச் சந்திக்க முடியும்" என்று எடுத்துரைத்தார்.
மனத் தகைவைப் பற்றிய எனது முந்தைய பதிப்பின் தொடர் பதிப்பு இது.
இந்தக் குட்டிக் கதையை எனக்கு அனுப்பிய அலுவலக நண்பருக்கு நன்றியுடன்.
- உதயகுமார்
5 comments:
கதையும் நீதியும் சூப்பர்.
உங்கள் பாராட்டை என் நண்பருக்குக் கண்டிப்பாகச் சொல்லுகிறேன் அல்வாசிடி விஜய்!
நான் நீர் ஆவியாப் போறது அல்லாட்டி வேற விசயங்கள் எண்டு ஏதாவது விஞ்ஞான விளக்கம் வருமெண்டு நினைச்சேன். பிறகு பாத்தா நீதிக்கதை. நல்லாயிருக்கு. நண்பருக்கு என்ர பாராட்டையும் சேத்துச் சொல்லுங்கோ.
Very nice.In the begining I thought it is regarding a sycological matter.But anyway,Its thinkable and readable.
Post a Comment