நேற்றைய முன் தினம் தொலைக் காட்சியில் ஒரு செய்தித் துணுக்கைக் காட்டினார்கள். அதில் இந்தியத் தகவல் தொழில் நுட்பப் பொறியாளர்கள் தகைவு (stressful) மிகுந்த பணி செய்வதால் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஆறு இளம் பொறியாளர்கள் மன மற்றும் உடல் தகைவால் பெரிதும் பாதிக்கப் பட்டு இள வயதிலேயே இறந்து போனார்கள் என்று பட்டியலிட்டார்கள்.
பேட்டியளித்த ஒரு பொறியாளர் "வெளிநாட்டுப் பொறியாளர் 24 மணி நேரத்தில் செய்யும் ஒரு வேலையை 8 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று இந்தியப் பொறியாளர்கள் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்" என்று கூறினார். குறிப்பாக இந்தக் கருத்தில் எனக்கு ஒப்புதலில்லை.
இறந்து போன சக பொறியாளர்களின் நெருங்கிய சுற்றத்திற்கும், நாட்டிற்கும் அவர்கள் இறந்து போனது ஈடு செய்ய இயலாத பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இத்தகைய தகைவுள்ள பணிச் சூழல் இந்தியத் தகவல் தொழில் நுட்பப் பொறியாளர்களின் விதி என்று பல இளம் பொறியாளர்களே நினைக்கிறார்கள். விதியின் மேல் பழியைப் போடுவது நம் வழக்கம்தான் என்றாலும் விதியின் கையில் விட்டு விட்டால் எப்போதும் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது.
தகவல் தொழில் நுட்பத் துறை மிகப் புதியது. அதில் அனுபவம் பெற்று ஓய்வு பெற்ற பெரியவர்கள் நாட்டில் இல்லை. இருந்தால் அவர்கள் பணிச் சுமையைச் சமாளித்த அனுபவத்தைக் கொண்டு வீட்டில் உள்ள இளம் பொறியாளர்களுக்கு சிறந்த புத்திமதிகளும், ஆலோசனைகளும் வழங்கலாம்.
இந்த அனுபவம் என்ற பெரும் சொத்து இப்போதுதான் நாட்டில் சேர்க்கப் படுவதால், பெரும் பாலான இளம் பொறியாளர்கள் தம் பிரச்சினைகளுக்குத் தாமே தீர்வு காணும் நிலையில் இருக்கிறார்கள் என்பது உண்மை.
தகைவு ஏற்பட மூலகாரணங்கள் என்று எனக்குப் பட்டவை சில:
- பல இளைஞர்கள் "டேக் இட் ஈஸி பாலிசி"யை நம்பி நேரத்துடன் செய்ய வேண்டிய காரியங்களை கடைசி வரை தள்ளிப் போடுகிறார்கள். இப்படி செய்வதால் செய்ய வேண்டிய காரியத்தை முடிக்காத குற்ற உணர்வு அடிமனத்தில் தோன்றுகிறது. இந்த உணர்வு ஒரு மனிதனை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.
- அதே வேலையை முடிக்க வேண்டிய நேரமும் அவசர நிலையும் ஒரு நாள் ஏற்படும் போது, பயம், குற்ற உணர்வு, கவலை, ஏமாற்றம் என்ற உணர்ச்சிகள் ஒரே நேரத்தில் இந்த இளைஞர்களைத் தாக்கும். அப்படித் தாக்கும் போது உடல் நிலையும் மனநிலையும் பெரிதும் பாதிக்கக் கூடும். கொடுக்கப் பட்ட வேலையை நேரத்துடன் முடிக்கும் பணியாளர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். உடல், மனத் தகைவுகளெல்லாம் அவர்களை விட்டு அகன்றே இருக்கின்றன.
- கணினி என்பது சொன்னதை சொன்னபடி செய்யும் கருவி. அதை இயக்கப் பழகிக் கொள்வது எளிது. ஆனால் சக பணியாளர்கள் அப்படியல்ல. அவர்களிடம் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள நேரச் செலவும், முயற்சியும் தேவை. பணியில் முரண்பாடுகள் ஏற்படும் போது ச்க பணியாளர்களிடம் உள்ள நட்பும் செல்வாக்கும், அந்த முரண்பாடுகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள உதவும். அவசர நேரத்தில் உதவி கோரவும் இந்தச் செல்வாக்கும் நட்பும் உதவும்.ஆனால் இதை அறியாத பல் இளம் பொறியாளர்கள் மனித உறவுகளைப் பின் தள்ளி, பழக எளிதான, சொன்ன படி கேட்கும் கணினியுடன் உறவை வளர்த்துக் கொள்வதிலேயே நாட்டம் காண்பித்து பெருமளவு நேரத்தை கணினியுடனேயே செலவு செய்கிறார்கள். காலையில் இருக்கைக்கு வந்தால் அலுவலகத்தை விட்டு வெளியேறும் வரை கணினியுடன் மட்டுமே (அலுவலகக் கூட்டங்கள் - meeting - தவிர மற்ற நேரம்) நேரம் செலவிடுவர்.
- இத்தகைய நடவடிக்கைக்கு சில சமயம் அந்த இளைஞர்களின் தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணம். இந்தப் பழக்கம் நாளடைவில் மனத் தகைவிற்கு வழி வகுக்கிறது.
- இதற்கு எதிர்மாறாகச் செயல் பட்டு எப்போதும் சக பணியாளர்களுடன் நட்பு பாராட்டி பணியைக் கோட்டை விட்டு தகைவுக்கு உள்ளாகும் கதைகளும் ஏராளம். பணியைத் திறம் படச் செய்வதிலும், சக பணியாளர்களுடன் நட்பையும் செல்வாக்கையும் வளர்த்துக் கொள்வதிலும் ஆரோக்கியமான சமன்பாடு வேண்டும்.
- காலையிலிருந்து மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்து கணினித் திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டு வேலை செய்வோர் ஏராளம். இது ஒரு மோசமான் பழக்கம். நாளடைவில் உடல் தகைவையும், மனத் தகைவையும் ஏற்படுத்தும்.
- பெரும்பாலான அலுவலகங்களில் குளிர் பானங்களும், உணவும் இலவசமாக அளிக்கிறார்கள். அதற்காக ஒழுங்கில்லாத உணவருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள் நாளடைவில் உடல் நலக் குறைவிற்கு உள்ளாகிறார்கள். உடற்பயிற்சியும், சரியான உணவுப் பழக்கமும் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவை.
- திறமையான மேலாளர்கள் இல்லையென்றால் இளம் பொறியாளர்கள் பாதிக்கப் படக் கூடும். சேவை நுகர்வோரிடம் (customer) திறம்படப் பேரம் பேசத் தெரியாததால் அளவுக்கு அதிகமான பணிச் சுமையைச் தன்னிடம் பணி செய்பவர் மேல் சுமத்துவதும், பணியின் போக்கை சீரான இடைவெளியில் ஆய்வு செய்து தக்க திருத்தங்களைக் கூறாத போக்கும், பணியில் அதிரடித் திருப்பங்களை அறிவிப்பதும், திறனில்லா மேலாளர்களின் இயல்பு. இவை இளம் பணியாளர்களிடம் மனத் தகைவையும் சோர்வையும் உருவாக்கும்.
- அயல் நாட்டினருடன் பணி செய்யும் போது அவர்கள் பேசும் மொழியைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாததால், அல்லது அவர்கள் கலாச்சாரம் புரியாமல் அவர்களுடன் சரிவர பழகத் தெரியாததால் தோன்றும் இயலாமையும் தகைவை உருவாக்கும்.
இவற்றுக்கெல்லாம் தீர்வு நம் தவறுகளை நாமே உணர்ந்து திருத்திக் கொள்வதிலும், பணிக்கு வேண்டிய பயிற்சிகளை சரியான நேரத்தில் ஏற்றுக் கொள்வதிலும், நம் வாழ்க்கை முறையை சரியான வகையில் மாற்றியமைத்துக் கொள்வதிலும்தான் இருக்கிறது. விதியை நம்பினால் ஒன்றுக்கும் உதவாது.
என் நண்பர் ஒருவர் மனத்தில் தறிகெட்டு ஒடும் ஆயிரக்கணக்கான எண்ணங்களே தகைவுக்குக் காரணம் என்று கூறி கீழேயுள்ள குட்டிக் கதையைக் கூறினார்.
ஒரு மத குருவிடம் அவரது சீடன் வந்து "குருவே என் மனத்தில் எண்ணங்கள் கட்டுப்படுத்த முடியாமல் ஒடுகின்றன. அதை என்னால் தாங்க முடியவில்லை. ஒரு வழி சொல்லுங்கள்" என்றார்.
குரு சீடனிடம் "எங்கே. உனது மனத்தை எனக்குக் காண்பி" என்று கேட்டார்.
சீடன் மிகவும் முயன்று பார்த்து விட்டு "மனத்தைக் குறித்து யோசித்தால் அதைக் காணமுடியவில்லையே" என்றான்.குரு சீடனிடம் "உன் மனத்தை அடக்க, மனதில் தோன்றும் எண்ணங்களை வகைப் படுத்தி தேவையில்லாதவற்றை விட்டு விடுவதுதான் வழி" என்று சொன்னார்.
தியான முறைகளிலும் இதைத்தான் கற்றுக் கொடுக்கிறார்கள்.
3 comments:
நீங்கள் குறிப்பிடும் செய்தியை தொலைக்காட்சியில் நானும் பார்த்தேன். ஆனால் சென்னைக்கு புதிதாக வந்த டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையின் முதல் பக்க செய்தி அது என்று பின்னர்தான் தெரிந்தது. எப்படியானாலும் தொலைக்காட்சி வடிவம் போதுமான களப்பணி இல்லாமல் இருந்ததாக எனக்கு தோன்றியது. எனினும் இந்த அளவு அந்த செய்தி உங்களை பாதித்திருக்கிறது என நினைக்கும்போது.... நல்லது. உங்கள் மனித உணர்வை மதிக்கிறேன். - சந்திரன்
தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்த போது அது வியாபார நோக்குடன் எடுக்கப் பட்டதாக எனக்குத் தோன்றியது. நானே ஒரு கணினி பொறியாளன் என்ற முறையில் எனக்கு இந்தத் துறையைப் பற்றிய நேரடி அனுபவம் உண்டு. அந்த அனுபவத்தினாலும், சக பணியாளர்களிடம் விவாதித்ததனாலும் எழுந்த கருத்துகள்தாம் நான் பகிர்ந்து கொண்டவை. நன்றி சந்திரன்.
நன்றி சரவணன்!
Post a Comment