Saturday, April 02, 2005

மதிப்புக் கூட்டு வரி - 3

நேற்று இந்தியாவின் 20 மாநிலங்கள் திட்டமிட்ட படி மதிப்புக் கூட்டு வரி முறைக்கு மாறி விட்டன. மேகாலயா அடுத்த வாரம் தேதி குறித்திருக்கிறார்கள். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் திட்டவட்டமாக மதிப்புக் கூட்டு வரி முறைக்கு மாற மறுத்திருக்கிறார்கள்.

உட்பொருட்களின் மேல் செலுத்தும் வரியின் மேல் உற்பத்தியாளர்கள் கழிவு பெறும் அம்சம் மதிப்புக் கூட்டு வரி முறையில் உள்ளதால், உற்பத்தியாளர்களுக்கு நாளடைவில் மதிப்புக் கூட்டு வரி உற்பத்திச் செலவீனங்களைக் குறைக்கும். மதிப்புக் கூட்டு வரி முறை அமலில் உள்ள மாநிலங்கள் உற்பத்தியில் அதிக வளர்ச்சி பெறும்.

வர்த்தகர்களுக்கும் மத்திய அரசு அவர்களின் பணப்புழக்க அளவு பத்து லட்சம் ரூபாய்க்குக் கீழ் இருக்கும் வரையில் அவர்களுக்கு மதிப்புக் கூட்டு வரியிலிருந்து விலக்களித்தது.

தமிழக அரசு மதிப்புக் கூட்டு வரியை இப்போதைக்கு அமல் படுத்தப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் பல உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் அரசின் நிலை குறித்து கவலையடைந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இன்றைய தேதியிட்ட எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தமிழக அரசு மதிப்புக் கூட்டு வரியை அமல் படுத்தத் தயார் நிலையில் உள்ளது என்றும், ஜுலை முதல் தேதி, தமிழ்நாடும் மதிப்புக் கூட்டுவரிக்கு மாறக் கூடும் என்றும் செய்தி வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாடு தொழில் துறையிலும் ஏற்றுமதிகளிலும் முன்னேற்றம் அடைந்த மாநிலம். மதிப்புக் கூட்டு வரியின் நன்மைகள் கிடைக்காததால், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விலையில் போட்டியிடும் திறனை இழந்து விடக் கூடாது. அப்படி நடந்தால் உற்பத்தி வேறு மாநிலங்கள் பக்கம் போய்விடும். தொழில் வளர்ச்சியில் தேக்கம் வரும். மாநிலத்தின் ஏற்றுமதிகளும் வேறு பக்கம் நகர்ந்து விடக் கூடாது. இவை நடந்தால் சங்கிலித் தொடர் போல் பல சவால்களை தமிழகம் சந்திக்கக் கூடும்.

தாமதமாக இந்த முறையில் சேருவதால், மாநில அரசின் வரி வரவில் மதிப்புக் கூட்டு வரி மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்வதாக மத்திய அரசு அளித்த வாக்கில் மத்திய அரசின் நிலை என்னவாயிருக்கும்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மூன்று மாதங்கள் பின் தங்கி இந்த முறையில் தமிழகம் சேருவதால் நாம் மற்ற மாநிலங்களிடம் கற்றுக் கொண்டு அவர்களை விடச் சிறப்பாக ஆரம்பிக்கப் போகிறோமா? இதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Blog Archive