போன திங்கட்கிழமை ஏற்பட்ட பூகம்பம் முதல் (டிச 26) மையத்திலிருந்து 100 முதல் 150 கி.மீ தெற்கில் ஏற்பட்டதாகத் தெரிகிறது. கடல் தளத்திற்குக் 30 கி.மீ கீழே ஏற்பட்டது என்று கணித்திருக்கிறார்கள்.
ரிக்டர் அளவில் 8.5 என்று மதிப்பிடப் பட்ட இந்த பூகம்பம் சுனாமியை ஏற்படுத்தவில்லை. ஆனால் அறிஞர்களிடையே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் அடுத்தடுத்து பூகம்பங்கள் வரும் என்று கணித்திருந்த போதிலும், முதல் பூகம்பம் ஏற்பட்டு 100 நாட்களுக்குள் இரண்டாவதை எதிர்பார்க்கவில்லை.
இந்த பூகம்பம் கடல் தளத்தை கணிசமான அளவிற்கு செங்குத்தாக மாற்றாததால் பெரிய சுனாமி அலைகள் ஏற்படவில்லை. ஆஸ்திரேலியாவில் சிறிய அளவில் சுனாமி அலைகளைப் பார்த்தார்கள்.
சுனாமி எச்சரிக்கை அமைப்பு உருப் பெறத் துவங்கி விட்டது தெரிகிறது. உலகில் தற்போது உள்ள சுனாமி எச்சரிக்கை மையங்களுக்கு அரசு அவசரத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய அரசு அதிகாரிகளின் தகவல்களை அளித்ததினால்தான் நம் அரசு இயந்திரத்திற்கு பூகம்பம் நடந்த உடன் தகவல் கிடைத்து விட்டது.
இரவு பத்து மணிக்கு சற்று முன்னால் ஏற்பட்ட பூகம்பத்தைப் பற்றியும், சுனாமி ஆபத்தைப் பற்றியும் 10.30 மணியளவில் எனக்குத் தெரிந்தவர்கள் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் அறிவிக்கக் கேட்டிருக்கிறார்கள்.
அரசு இயந்திரங்கள் உடனே சிறப்புடன் செயல் பட்டு கடற்கரை வாழ் மக்களை எச்சரித்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு முடிந்தவரை இடம் மாற்றிவிட்டார்கள். இது பாரட்டத் தக்கது.
ஆனால் தகவல் வரும் வேகம் இன்னும் துரிதப் படுத்தப் பட வேண்டும் என்று தோன்றுகிறது. கடந்த முறை சுனாமி ஏற்பட்ட சமயத்தில் இருந்து பேரலைகள் இரண்டு மணி நேரத்திற்குள் இந்தியக் கடற்கரையை அடைந்து விட்டன. கடற்கரை வாழ் மக்களுக்கு செய்தி கிடைத்தவுடன் அவர்களுக்குத் தப்பிக்க சுமார் 45 நிமிடங்களே கிடைத்தன. இந்த அவகாசம் எவ்வளவு அதிகப் படுத்தப் படுகிறதோ அவ்வளவு நல்லது.
பேரழிவு ஏற்பட்டு 100 நாட்களுக்குள் இந்த எச்சரிக்கை வந்ததால் அனைவரும் மிதமிஞ்சிய விழிப்புடன் செயல் பட்டார்கள். இப்படி உண்மையில் ஆபத்து நிகழாமல் நான்கு எச்சரிக்கைகள் தொடர்ந்து வந்தால் இதே அளவு விழிப்புணர்ச்சி தொடருமா? அல்லது அலட்சியப் படுத்தத் தலைப்படுவோமா?
இதே நிகழ்வு இன்னும் 10 வருடம் கழித்து நடந்திருந்தால் இதே விழிப்புணர்ச்சி இருந்திருக்குமா?
இந்தியப் பெருங் கடல் தளத்தில் சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் பொருத்துவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எச்சரிக்கை கருவிகள் கடலடியில் நீரின் அழுத்தத்தினை தொடர்ந்து கண்காணிக்கும். தேவையான செய்திகளை கடல் மட்டத்தில் உள்ள மிதவைகளில் உள்ள வானொலி அல்லது செயற்கைக் கோள் அலைபரப்பிகள் (transmitter) மூலம் சுனாமி ஆய்வு மையங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். இவை சுமார் 3 செமி உயரமுள்ள அலைகளைக் கூட துல்லியமாகக் கண்டறியக் கூடியவை.
இந்த கடலடி உணர் கருவிகளை (sensor) நிறுவி இயக்க ஒவ்வோரு வருடத்திற்கும் சுமார் 190 கோடி இந்திய ரூபாய்கள் (இன்றைய மதிப்பில்) செலவாகும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment