Sunday, April 03, 2005

தெற்கு ஆசியாவில் ஆயுத குவிப்புப் போட்டி ஆரம்பிக்குமா?

இந்தியாவும் பாகிஸ்தானுடம் இப்போது சண்டை நிறுத்தம் செய்து, இரு நாட்டின் சாதாரணக் குடிமக்கள் சுலபமாக எல்லை கடந்து மறு நாட்டிற்குச் சென்று நல்லுறவுகளை பலப் படுத்தும் வகையில் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிபர் முஷார·ப் கிரிக்கெட் போட்டியைப் பார்வையிட இந்தியா வர இருக்கிறார். மேலும் ஈரானில் இருந்து இந்தியாவிற்கு பாகிஸ்தான் வழியாக எரிவாயுக் குழாய் ஒன்றை அமைக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இத்தகைய சமாதான மற்றும் பொருளாதார நல்லுறவுகளை வளர்க்கும் முயற்சிகளுக்கு மத்தியில், அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்க ஏற்படுத்தியிருந்த தடையை விலக்கிக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்திருப்பது பலருக்குக் கவலையை வளர்த்திருக்கிறது. நமது பிரதமர், அமெரிக்க அதிபரிடம் தொலைபேசியில் தன் கவலையை வெளிப்படையாகத் தெரிவித்தார். எரிவாயுக் குழாய் அமைக்க இந்தியா பாகிஸ்தானுக்குக் கொடுக்கப் போகும் பணத்தில் அது போர்விமானங்களை வாங்கக் கூடும் என்று இந்தியாவில் எச்சரிக்கைக் குரல்கள் ஏற்கெனவே எழுந்த வண்ணம் இருந்தன என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கா பாகிஸ்தானுக்கான இந்தத் தடையை 1990 ஆம் வருடம் முதல் அமலில் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. பாகிஸ்தான் பணம் செலுத்தி (அமெரிக்கா, வாங்கிய பணத்தை மட்டும் வேறு வழியில் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கேள்வி) வாங்கிய சுமார் 28 விமானங்களை அமெரிக்க அரசு இந்தத் தடை மூலம் பாகிஸ்தானுக்கு வழங்காமல் இது வரை நிறுத்தி வைத்திருந்தது என்று செய்திகள் கூறுகின்றன. பாகிஸ்தானிய மக்களுக்கு இதனால் தங்கள் தலைவர்கள் மேல் அதிருப்தி ஏற்பட்டது. இந்தத் தடைகளால் பாகிஸ்தானின் விமானப் படை பலம் நாளடைவில் நலிவடைந்து கொண்டே வந்தது என்பதும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

பல வருடங்களாக போருக்கான தளவாடங்களை வாங்க சந்தைக்குப் போகாமல் இருந்த இந்தியா இந்த அறிவிப்புகள் வரும் முன்னர், போர் விமானங்கள் வாங்குவதற்காக ஒரு உலக அளவிலான ஒரு டெண்டரை (tender) அறிவித்து நிலுவையில் வைத்திருக்கிறது. கார்கில் போருக்குப் பிறகு இந்தியா தன் ராணுவ பலத்தைப் பெருக்கிக் கொள்ள முயற்சிகள் எடுத்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு F-16 ஐ வழங்கும் நோக்கத்தை அறிவித்த அதே நேரத்தில் இந்தியாவிற்கும் F-16 (அல்லது F-18) ரக விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. ஸ்வீடன் (JAS-39 Gripen ரக விமானம்), ·பிரான்ஸ் (Mirage), ரஷிய (புதிய ரக MIG விமானம்) போர்விமான உற்பத்தி நிறுவனங்கள் போட்டியிடும் இந்தியாவுடனான இந்த பெரிய வியாபார வாய்ப்பில் F-16 விமானமும் இப்போது இந்த அறிவிப்பினால் களத்தில் இருக்கிறது.

அமெரிக்கா இந்தியாவை F-16 விமானங்களை வாங்கும் தீர்மானத்திற்குத் தள்ளவே இப்படிச் சமயம் பார்த்து அறிவிப்புகளை வெளியிடுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இது "கழுதைக்கு காரட் (carrot) காட்டி விரும்பிய திசையில் ஓட வைப்பதற்குச் சமம்" என்ற விமரிசனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்கா இந்தியாவிற்கும் விமானங்களை அளிப்பதாகக் கூறியதும், இந்தியாவுடன் ராஜரீக ("அரச தந்திர உறவு" என்றும் சொல்லலாமோ?) உறவுகளை வளர்த்துக் கொண்டு இந்தியாவை உலக வல்லரசு நாடாக்க உதவத் தயார் என்று கூறியதும் பாகிஸ்தானியர்களுக்குக் கவலையைத் தரும். ஆனால் பாகிஸ்தனுக்குப் போர் விமானங்களை வழங்கும் தீர்மானம்தான் இந்தக் நிலைப்பாட்டுடன் ஒட்டாமல் இடிக்கிறது.

இரு நாடுகளுக்கும் தத்தம் தற்காப்புப் பலத்தைத் தேவையான அளவிற்குப் பெருக்கிக் கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது புரிகிறது. சம்பந்தப் பட்ட அனைத்து நாடுகளும் ஒரு முதிர்ந்த அணுகுமுறையுடனும் கொள்கையுடனும் நடந்து கொள்ளாவிட்டால், தற்காப்பு முயற்சிகள் எல்லை கடந்து தெற்கு ஆசிய நாடுகளின் ஆயுத குவிப்புப் போட்டியாக மாறும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது.


இதே நேரத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் ராணுவ பலத்தை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளை மற்ற தெற்கு ஆசிய அண்டை நாடுகளும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறந்து விடக் கூடாது. அந்நாடுகள் தத்தம் ராணுவ பலத்தைப் பற்றி என்ன தீர்மானிக்கப் போகின்றன?

சில குறிப்பிடத்தக்க மேல் விபரங்கள்:


  • F-16 விமானங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இந்தியாவுடன் ஒத்துழைக்கத் தயார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
  • F-16 ரக விமானங்கள் தரத்திலும் திறனிலும் சிறந்தவை என்றாலும், 30 வருடத்திற்கு முன் முதன் முறையாக வானில் பறந்தவை. இவற்றின் உற்பத்தியை நிறுத்துவது பற்றி அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. இதற்கு அடுத்த தலைமுறை விமானமான F-35 ரக விமானங்களை இப்போது அமெரிக்கா உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் இதன் விலை மிக அதிகம். இதனால்தான் இந்தியா பழைய தொழில் நுட்பத்தை வாங்கத் தலைப் படுகிறது.



  • அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் வல்லமை படைத்த F-16 ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதன் மூலம் பாகிஸ்தானை ஒரு அணு ஆயுத நாடாக இப்போது அமெரிக்கா அங்கீகரித்து விட்டது என்ற கருத்தும் எழுந்துள்ளது.
  • இந்தியாவின் வளரும் சக்தித் தேவையைத் தீர்க்க, இந்தியாவில் அணு உலைகளை அமைக்க அமெரிக்கா உதவத் தயார் என்றும் அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

No comments:

Blog Archive