"எய்வோ" (AIWO) என்ற பெயரில் சென்னையில் உணவகங்கள் திறந்திருக்கிறார்கள். "எய்வோ" என்ற சீன (மண்டாரின்) பதத்திற்கு "உன்னையே நீ நேசி" என்று பொருளாம்.
பெயருக்கு ஏற்றவாறு, இந்த உணவகத்தில் கொழுப்புச் சத்தில்லாத, ஆலிவ் எண்ணெயில் சமைத்த உணவுப் பொருட்களையே பரிமாறுகிறார்கள். சர்க்கரை சேர்ப்பதில்லை. "கோக்", "பெப்ஸி" போன்ற பானங்கள் கேட்டால் "மூச்" என்கிறார்கள்! "Diet பெப்ஸி" கிடைக்கும்.
இந்த உணவகத்தின் இன்னொரு சிறப்பு அம்சம், அங்கு உணவு பரிமாறப் படும் விதம்.
அனைத்து உணவருந்துவோர் அமரும் மேஜைகளும் சமையல் கூடத்துடன் ஒரு தொடர் பட்டை (conveyor belt) மூலம் இணைக்கப் பட்டுள்ளன. ஜப்பானிய "சூஷி" (Sushi) உணவுக் கூடங்கள் இவ்வாறே அமைக்கப் பட்டிருக்கும்.
சிறு சிறு தட்டுகளில் எண் குறியிட்டுடன் சமையலறையிலிருந்து பதார்த்தங்களை உணவருந்தும் மேஜைகளை நோக்கித் தொடர் பட்டையில் செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். உணவுப் பதார்த்தத்தின் பெயரை அதன் குறியீட்டு எண்ணைக் கொண்டு மேஜையில் உள்ள பட்டியலை நோக்கி அறிந்து கொள்ளலாம். அனைத்தும் சைவம். நமக்கு வேண்டிய பதார்த்ததை நாமே பட்டையிலிருந்து எடுத்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
இங்கு அசைவ உணவும் தருகிறார்கள். ஆனால் அசைவ உணவு தொடர் பட்டையில் வராது. உணவகப் பணியாளரிடம் சொன்னால், தனியாகக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். கொழுப்புக் குறைந்த வெண்கறியால் (white meat) ஆன அசைவ உணவுகள் மட்டுமே கிடைக்கும். முட்டை சாப்பிடுபவர்களுக்குக் கூட் மஞ்சள் கருவை நீக்கி வெள்ளைக் கருவினால் ஆன பதார்த்தங்களே கிடைக்கும். பால், வெண்ணெய், நெய் போன்றவைகளால் செய்த பதார்த்தங்கள் கண்ணிலேயே காணவில்லை.
பதினாலு வகைப் பதார்த்தங்கள் கொண்ட தொடர் பட்டை சைவ உணவுக்கு ஒருவருக்கு ரூ 195/- வசூலிக்கிறார்கள். மேற்கூறிய முட்டை உணவும் இதில் அடக்கம். ஆனால் கேட்டால் மட்டுமே தருவார்கள். அசைவ உணவுக்கு விலை தனி. பதினாலு வகைப் பதார்த்தங்களில் நம்மூர் தந்தூரி வகைகளில் இருந்து, சீன, ஆங்கில வகை உணவுகள் வரை அடக்கம்.
சிறப்பாக, தனிப்பட்ட முறையில் கவனித்துச் சேவை செய்கிறார்கள். புதிய உணவகம். மற்றும், கூட்டம் குறைவாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலும், ஜீ.என். செட்டித் தெருவிலும் இந்த உணவகத்தின் கிளைகள் அமைந்துள்ளன. இதைத் தவிர, சிங்கப்பூரிலும் கிளைகள் உண்டாம்.
"ஸ்டெர்லிங்" நிறுவனங்களின் தலைவர் திரு. சிவசங்கரனின் தலைமையில்தான் இந்த உணவகங்களும் இயங்குகின்றனவாம்.
1 comment:
சாப்பிட்டு முடித்தவுடன் தட்டுகளை எடுத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தொடர் பட்டைகளைக் கண்டுள்ளேன். இங்கு சாப்பாடே அப்பட்டைகளில் மேசைக்கு வருவது வித்தியாசமாகத்தான் உள்ளது!
Post a Comment