Friday, March 18, 2005

ஊர்ப் "பெரிசுகள்" தீர்ப்பு

பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் மாநிலத்தில், மீர்வாலா என்ற கிராமம். விவசாயத்தையே தொழிலாகக் கொண்டோர் பெரும்பாலோர் வசிக்கும் கிராமம் இது.

இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முக்தார் மாயி என்ற 30 வயதுப் பெண்மணி.

இவருக்கு 12 வயதுத் தம்பி இருக்கிறான். அவன் அப்பகுதியின் உயர்குடிப் பெண் ஒருத்தியுடன் சுற்றினான் என்று ஒரு நாள் குற்றம் சாட்டப் பட்டான்.

படிப்பு மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத கிராமத்தில் இத்தகைய வழக்குகளுக்கு நீதிமன்றங்களைத் தேட முடியுமா? பஞ்சாயத்தைக் கூட்டித்தான் விசாரிப்பார்கள்.

கிராமத்தைச் சேர்ந்த பெரிசுகள் அப்படிப் பஞ்சாயத்தைக் கூட்டி வழக்கை விசாரித்தனர். அவர்கள் கூறிய தீர்ப்பு என்ன தெரியுமா? நான்கு தன்னார்வ (!?) மிக்க இளைஞர்கள் முன்வந்து முக்தார் மாயியைப் பொதுவில் வைத்துக் 'கலக்க' வேண்டும்.

இந்தத் தீர்ப்பை நான்கு பேர் நிறைவேற்றினர். இது எப்படி இருக்கிறது தெரியுமா? கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கே ஒரு கொடுமை அவிழ்த்துப் போட்டு ஆடிக் கொண்டிருந்ததாம். அது போல இருக்கிறது.

இச்சம்பவங்கள் நடந்தது நம் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் அல்ல. சமீபத்தில், இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான்.

உலகத்தில் பழங்குடியினர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், பழங்குடித்தனமான யோசனைகளும், காட்டுமிராண்டித்தனமும் இன்னும் இத்தகைய பெரிசுகள் மற்றும் அவர் சந்ததிகளின் மரபணுக்களில் பத்திரமாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது.

முக்தார் மாயி நொறுங்கிப் போனார். தற்கொலை செய்து கொள்ளும் தூண்டுதலை மிகச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டு நீதி மன்றத்தை நாடினார்.

பெரிசுகள் கூறிய வகையிலேயே தீர்ப்புக் கூற வேண்டுமென்றால்: சம்பந்தப் பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அவரவருடையதைப் பொதுவில் இழுத்து வைத்து நறுக்கிவிட அல்லது தைத்து விட வேண்டும் என்று கூறியிருக்கலாம். (அட... தீர்ப்புக் கூறிய அல்லது எதிர்ப்புக் கூறாத நாக்கைச் சொன்னோம் சுவாமி!!)

ஆரம்ப நிலை நீதிமன்றம் வழக்கை விசாரித்து, சம்பத்தப் பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளித்தது. அரசு முக்தார் மாயிக்கு 8000+ அமெரிக்க டாலர்களை உதவித் தொகையாக அளித்தது. அந்தத தொகையை வைத்து முக்தார் மாயி ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்தி வந்தார்.

குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், இப்போது நான்கு பேர் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள். நீதிமன்றம் "ஆதாரம் போதவில்லை", "அரசுத் தரப்பில் விசாரணை முறையாகச் செய்யப் படவில்லை" என்று இப்போதைய முடிவுக்குக் காரணங்கள் கூறியுள்ளது.

பார்ப்பதற்குப் பயந்தவர் போல் தோற்றமளிக்கும் முக்தார், வேறு நாட்டிற்கு அகதியாக ஒடப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். நாட்டின் அதிபரிடம் நீதி கேட்டு முறையிட்டிருக்கிறார். பல பெண்கள் நல அமைப்புக்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளன.

டைம் பத்திரிக்கை முக்தார் மாயியை போன வருடம் ஆசியாவின் தைரிய நாயகியாகத் தேர்ந்தெடுத்தது.

No comments:

Blog Archive