Saturday, March 12, 2005

தங்கமே தங்கம் ?!

கடந்த 60+ நாட்களில் தங்கத்தின் விலை கிடு கிடுவென்று உயர்ந்து பிறகு கீழே இறங்கி வந்திருக்கிறது.

இதே சமயம், தமிழ் நாட்டில், குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் வணிகம் செய்யும் தங்க நகை வியாபாரிகள் வழக்கத்தை விடப் பல மடங்கு தங்கம் வியாபாரம் செய்தார்கள் என்று பத்திரிக்கைகள் கூறுகின்றன.

கடந்த 60+ நாள் வியாபாரத்தை காசோலைகள் கொடுத்து வாங்குதல், பழைய தங்கம் கொடுத்துப் புதுத் தங்கம் வாங்குதல், காசு கொடுத்துப் புதுத் தங்கம் வாங்குதல் என்று பாகு படுத்தி ஆராயந்திருக்கிறார்கள். இதில் காசு கொடுத்துப் புதுத் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருந்ததாகக் கண்டிருக்கிறார்கள்.

தங்க நகை வியாபாரிகளும் கடந்த 60 நாட்களில் வந்த பணத்தில் பெரும் பகுதி புத்தம் புதியதாக இருந்ததாக உணர்ந்திருக்கிறார்கள். இந்தத் தகவலை வைத்து, புழக்கத்தில் வந்த புதிய பணம் அரசால் விநியோகிக்கப் பட்ட பணமாகத்தான் இருக்கும், வேறு வழியில்லை, என்று யூகிக்கிறார்கள்.

இந்தத் தகவல்களையெல்லாம் வைத்துப் பார்த்தால், அரசு சமீபத்தில் வினியோகித்த சுனாமி நிவாரணப் பணம்தான் இப்படி நிலை மாறியிருக்கிறது என்ற மிகப் பலமான யூகம் எழுந்திருக்கிறது.

நான் இந்தக் கருத்தைப் பற்றிப் பலரிடம் விவாதித்தேன். பெருவாரியானோர் இது ஒப்புக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்றுதான் கூறினர்.

சுனாமியால் வீடிழந்த குடும்பங்களுக்குப் பணத்தை பத்திரப் படுத்த வங்கிக் கணக்குகள், பூட்டி வைக்கப் பெட்டிகள், அறைகள் போன்றவை இல்லாத நிலையில், அவர்கள் பணத்தை நகையாக மாற்றி மோதிரமாகவோ, சங்கிலியாகவோ, தோடாகவோ தங்கள் மேல் அணிந்து கொள்வதைப் பத்திரமாக எண்ணுவது இயற்கை.

ஆகவே, தங்கள் சொந்தச் சிரமங்களையெல்லாம் ஒரு கணம் அறவே மறந்து ஒதுக்கி விட்டு சுனாமி நிவாரணம் அளித்த இந்திய நன்மக்கள், இச்செயலை தங்கள் மனித நேயச் செயலுக்கு எதிராக இழைக்கப் பட்ட துரோகமாகக் கருதக் கூடாதுதான்.

பொதுமக்கள் அளித்த உதவிப் பணம், பாதிக்கப் பட்டோர் கையிலும், காதிலும், கழுத்திலும் நகையாக இன்றைக்கு உலவிக் கொண்டிருக்கிறது. அது பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு இன்று ஒரு பத்திர உணர்வை அளிக்கிறது. கூடவே, கொடுதத பொருளைத் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அச்சமும் இணையாக வரப் போகிறது. "நிவாரணத்தில் வந்த நகையைப் போட்டு மினுக்குறா பார்!" போன்ற பொறாமை உணர்ச்சிகள் கிடைக்காத மற்றோரிடம் உண்டாவது இயற்கை. ஆனால், பாதிக்கப் பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயர இந்த நகைகள் பெரிதும் உதவப் போவதில்லை.

வேண்டிய குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அரசு கொடுக்கும் உணவு, எரிபொருள், தங்குமிடம், ஆடைகள் போன்ற உதவிப் பொருட்கள் இன்று பார்த்துக் கொள்கின்றன. இந்த உதவியை அரசால் எத்த்னை நாட்கள் தொடர்ந்து செய்ய முடியும்?

அரசால் கொடுக்கப் பட்ட நிவாரணப் பணத்தின் மதிப்பு நிவாரணம் பெற்றவர்கள் கையில் ஏற்கெனவே குறைந்து காணப் படுகிறது. ஏன்? அதிகவிலையில் விற்ற போது தங்கம் வாங்கி, சந்தையில் தங்கத்தின் விலை இன்று குறைந்து விட்ட நிலையில், கையில் இருக்கும் அனைத்துத் தங்கத்தையும் இன்று விற்றாலும், வாங்கிய போது செலவு செய்த பணத்தை விட மிகக் குறைந்த அளவே திரும்பக் கிடைக்கப் போகிறது. நிவாரணப் பணத்தின் ஒரு பகுதி தங்க வியாபாரிகளுக்கு லாபமாகப் போய் விட்டது.

இந்நிலையில், அரசின் உதவிகள் குறையும் போது, கையிலிருக்கும் தங்கம் திரும்பவும் காசாக மாறும். அப்படி மாறும் பொழுது எவ்வளவு நிவாரணம் அடகுக் கடை வட்டித் தொகையாகவும், நகை வியாபாரிகளுக்கு லாபமாகவும் மாறப் போகிறதோ? கறுப்புப் பணமாகவும் மாறும் வாய்ப்புகளும் அதிகம்.

சற்று யோசித்திருந்தால் இன்னும் வித்தியாசமாக, பாதிக்கப்பட்டோருக்கு அதிகப்பட்ச உதவிகளை உறுதிப் படுத்தும் வகையில் செய்திருக்கலாமோ?

No comments:

Blog Archive