ரிக்டர் அளவில் 9.0 புள்ளிகளைத் தொட்ட இந்த பூகம்பம், 12 நாடுகளைத் தாக்கி அங்குள்ள சுமார் இரண்டே கால் லட்சம் மக்களின் வாழ்வைப் பறித்து, பல லட்சக் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, மணிக்கு 800 கி. மீ வேகத்தில் உலகைச் சுற்றி வந்த ஆழிப் பேரலைகளை உருவாக்கியது.
கடந்த 40 வருடங்களில் உலகம் சந்தித்த பூகம்பங்களில் மிகச் சக்தி வாய்ந்தது இந்தப் பூகம்பம்.
சுமத்திராவின் வடமேற்குக் கடற்கரையிலிருந்து 100 கி. மீ மேற்கே, கடல் தரைக்கு 20 கி.மீ கீழே ஏற்பட்ட சக்தி வாய்ந்த உராய்வுகள்தான் இந்தப் பூகம்பத்திற்குக் காரணம் என்று கூறப் பட்டது.
வெளியே பார்ப்பதற்கு நிலப் பரப்பாகவும், நீர் பரப்பாகவும் காட்சியளிக்கும் உலகம், உள்ளே இன்னும் எரிமலைக் குழம்பாய்க் கொதித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். இந்தக் குழம்பின் மேல் ஒன்றை ஒன்று ஒட்டி உராய்ந்து கொண்டு பல தகடுகள் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தகடுகள் மேல்தான் பல கி.மீ உயரத்திற்குக் கடலின் தளமும், நாம் வாழும் நிலப் பரப்பும் அமைந்துள்ளது. இந்தத் தகடுகள் மிதக்கும் காரணத்தால் எப்பொழுதும் ஊர்ந்து கொண்டே இருப்பதால் ஒன்றின் மேல் இன்னொன்று அழுத்திக் கொண்டே இருக்கும்.
ஒரு வருடத்திற்கு சில மில்லிமீட்டர்கள் என்ற அளவிலேயே இந்தத் தகடுகள் எப்பொழுதும் நகரும். ஆனால், ஒரு தகட்டின் அசைவிற்குக் குறுக்கே இன்னொரு தகடு வரும் பொழுது முந்தைய தகடு பிந்தைய தகட்டின் மேல் ஏற்படுத்தும் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போகும்.
இந்தத் அழுத்தம் மிக அதிகமாகும் போது தகடுகளில் ஒன்று அழுத்தம் தாங்காமல் சட்டென்று தன் எதிர்க்கும் சக்தியை இழப்பதால் தகடுகள் மிகவேகமாக நகர்ந்து, அதிர்ந்து, பின் தன் இயல்பு நிலையை அடைவதைத்தான் நாம் பூகம்பமாக உணர்கிறோம்.
நாம் வசிக்கும் பகுதியின் கீழே நான்கு தகடுகள் உள்ளன. இந்தியா, இந்தியத் தகட்டின் மேலே அமர்ந்திருக்கிறது. தென்னிந்தியா இத் தகட்டுக்கு ஏறக்குறைய மத்தியில் அமர்ந்திருகிறது. இந்தியாவிற்குத் தெற்கே ஆஸ்திரேலியத் தகடும், கிழக்கே பர்மா தகடும், அதற்கும் கிழக்கே ஸண்டா தகடும் உள்ளன. இந்த பர்மா தகடு, இந்தியத் தகட்டுக்கும் ஸண்டா தகட்டுக்கும் இடையே உள்ளது. இது மேற்கு நோக்கி வருடத்திற்குப் பதிநான்கு மி.மீ நகர முயற்சிக்கிறது என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
பர்மாத் தகட்டின் மேல்தான் நமது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளன.
டிசம்பர் 26, 2004 அன்று, மக்கள் கிருஸ்துமஸ் விழாவிற்கு அடுத்து வந்த ஒரு ஞாயிற்றுக்கிழமையை வழக்கம் போல் சந்திக்கத் தயாரகிக் கொண்டிருந்தனர் அப்பொழுது, பூமிக்குக் கீழே, அழுத்தம் மிகுந்து விட்ட நிலையில், பர்மாத் தகட்டின் சுமார் 400 கி.மீ நீளமுள்ள பகுதி திடீரென்று இந்தியத் தகட்டின் மேல் சுமார் 15 மீட்டர் ஏறி விட்டது. அப்படி ஏறிய போது அந்தப் பரப்பின் மேலிருந்த கடல் நீரும் திடீரென மேலே தூக்கப் பட்டது. அப்படித் தூக்கியதால் கிளம்பியது ஒரு பேரலை. அந்த அலை கிழ்க்கேயும் மேற்கேயும் நோக்க மணிக்கு சுமார் 800 கி.மீ வேகத்தில் நகர ஆரம்பித்தது.
உலகின் சில கடற்கரைப் பகுதிகள் ஏறக்குறைய செங்குத்தாக கடலில் இறங்குகின்றன. மற்ற கரைப் பகுதிகள் படிப் படியாகக் கடலுக்குள் சரிகின்றன. இப்படிச் சரிவாக இருக்கும் இடத்தில் பேரலை சரிவின் மேல் ஏறிச் செல்லத் தலைப்படுகிறது. அப்படிச் சரிவின் மீது ஏறும் போது அதன் வேகம் குறைகிறது. அதே சமயம் அதன் உயரம் அதிகரிக்கிறது. பல ஆயிரம் டன் எடையுள்ள நீர் பல நூறு அடிகள் மேலே தூக்கப் பட்டு கரையில் வந்து விழுகிறது. அப்படி விழும் போது நடந்த சீரழிவுகளைத்தான் கண்ணால் பார்த்தோம்.
செங்குத்தான கடற்கரைகளுக்கு இந்த அலைகளால் மிகுந்த தாக்கம் இல்லை.
இந்தப் பூகம்பத்தால் பூமி மிகவும் மாறிப் போயிருக்கிறது என்கிறார்கள் தாக்கத்தை மதிப்பிடும் ஆய்வாளர்கள்.
அந்தமான் தலைநகர் போர்ட் ப்ளேயர் மேற்கு நோக்கி 1 மீட்டர் நகர்ந்திருக்கிறதாம். அதன் முந்தைய உயரத்திலிருந்து 25 செ.மீ கீழே இறங்கி விட்டதாம். சுமத்திராவிற்கு மேற்கே கடற்பரப்பிற்குக் கீழே இருந்த பவழப் பாறைகள் கடலுக்கு மேல் தெரிகிறதாம். பண்டா ஆசே நகரம் பாதி கடலுக்குள் அமிழ்ந்து விட்டது என்று கூறுகிறார்கள். நிக்கோபாரில் ஒரு தீவு மூன்றாகப் பிரிந்து, இத் தீவுகளுக்கிடையே மீன்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கின்றனவாம்.
ஒரு தகடு இன்னொன்றின் மேல் ஏறியிருப்பதால், பூமியின் ஆரம் குறைந்து பூமி சற்று (வழக்கத்தை விட மூன்று மைக்ரோ மணித்துளைகள்) வேகமாகச் சுற்ற ஆரம்பித்திருக்கிறதாம்.
அழுத்தம் விலகி இப்போது தகடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதால் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் ஆழிப் பேரலை ஏற்படும் அளவிற்குப் பூகம்பம் வர வாய்ப்பில்லை என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இந்தத் தகவல்களில் இருந்து ஒன்றை நாம் கற்றுக் கொள்ளலாம். கடல் தளம் சரிவாகக் கடலுக்குள் இறங்கும் கடற்கரைகளில் உல்லாச விடுதிகள், மீனவர் வாழும் கிராமங்கள், கடற்கரை நகரங்கள் ஏற்படுவதைக் கட்டுப் படுத்தி மக்களை ஆபத்திலிருந்து காக்கலாம்.
No comments:
Post a Comment