Sunday, March 06, 2005

மதிப்புக் கூட்டு வரி - 2

மதிப்புக் கூட்டு வரி அமலாக்கத்தை சிலர் எதிர்த்தார்கள். அவர்களுள் மொத்த, மற்றும் சில்லறை வியாபாரிகளும், உற்பத்தியாளரும், வினியோகிப்போரும் அடங்குவர்.

ஆனால் அஸ்ஸோசாம் (ASSOCHAM) போன்ற அமைப்புகள், மதிப்புக் கூட்டு வரி முறையாகச் செயல் படுத்தப் பட்டால் அது ஒரு நல்ல மாற்று வரித் திட்டம் என்று கூறியுள்ளன.

அவை மதிப்புக் கூட்டு வரிக்கு ஆதரவாகத் தெரிவிக்கும் கருத்துகள்:
  • மதிப்புக் கூட்டு வரியில் விலைகள் குறைய வாய்ப்புகள் அதிகம். அப்படி விலை குறைவதால் பொருட்கள் நுகரப் படும் அளவு அதிகரிக்கும்
  • சந்தையில் ஆரோக்கியமான போட்டி அதிகரிக்கும்
  • இதர உபரி வரிகள் விலக்கிக் கொள்ளப் படும் போது வியாபாரிகள் வரி கணக்கு வைத்துக் கொள்வது சுலபமாக்கப் படும்
  • நியாயமான, சிரமமில்லாத ஒரு வரித் திட்டத்தை அரசு அமலாக்கும் போது விழைந்து வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்து அரசுக்கு வருவாய் பெருகும். அரசு நிதியாளும் பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மைச் சட்டம் (FRBM) வகுக்கும் நிதிப் பற்றாக்குறை இலக்குகளை எளிதில் எட்ட முடியும்
நடப்பு விற்பனை வரித் திட்டத்தின் மாற்றியமைக்கக் கூடிய (அல்லது வேண்டிய) அம்சங்கள்:
  • விற்பனையாகும் பொருள்களின் மீது வரி அளவுகள் ஒரே சீராக இல்லை. சில மாநிலங்களில் அதிகப் பட்சமாக வெவ்வேறு பொருட்கள் மீது பதினேழு வித்தியாசமான வரி அளவுகள் உள்ளன. இத்தனை வரி அளவுகளை நிர்வகிப்பது கடினம். மதிப்புக் கூட்டு வரியில் இரண்டே இரண்டு அளவுகள்தான் பரிந்துரைக்கப் பட்டுள்ளன்
  • நாம் முன்னமே பார்த்த வரிக்கு வரி விதிக்கும் நிலை உள்ளது. ஆனால், மதிப்புக் கூட்டு வரியில் இது கிடையாது. மதிப்பைப் கூட்டுபவர், மூலப் பொருட்கள் மேல் கட்டிய வரிக்கு வரிக் கழிவு பெறலாம். ஆகவே கூட்டப் பெற்ற மதிப்புக்கு மட்டும் வரி கட்டும் நிலை உருவாகிறது
  • சில மாநிலங்கள் உபரி வரியும், பொருட்கள் கை மாறும் அளவின் மேல் வரியும், மறு விற்பனை வரியும் விதிக்கின்றன. இப்படி மாநிலத்திற்கு மாநிலம் வரியமைப்பு மாறும் போது பொருட்களின் சந்தை உடைந்து தனித் தனி சந்தைகளாக இயங்கத் தொடங்குகின்றன
  • வரித்திட்டத்தில் உற்பத்திக்கு வேண்டிய உட்பொருட்கள் மேல் நடுநிலை இல்லாததால் உற்பத்தியாளர்கள் சில உட்பொருட்களைத் தள்ளி வைத்து சில உட்பொருட்களுக்கு முதன்மை அளிக்கிறார்கள். இதனால் விற்பனைப் பொருட்களைச் செய்வதில் தரம் ஒரு முதல் குறிக்கோளாக இல்லை
  • நுகர்வோரும் வரிச்சுமை அல்லது விலை கருதி சில பொருட்களை ஒதுக்கி விடும் போது, பொருளாதாரத்தில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உருவாகிறது
  • பொருளாதாரத்தில் தொழில்கள் ஒருங்கிணைப்பு வரியமைப்பை ஒட்டி அமைகிறது. எங்கே தொழிற்சாலை அமைப்பது? எந்தத் தொழில்களுக்கு வேண்டிய உட்பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் எடுக்கும் முடிவுகளுக்கள் வரியமைப்பை ஒட்டியே அமைகின்றன
  • சிக்கல் மிகுந்த வரி அமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது சிக்கலை இன்னும் அதிகப் படுத்தும்
மதிப்புக் கூட்டு வரித் திட்டத்தில் இவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்கச் சாத்தியக் கூறுகள் அதிகம்.

மதிப்புக் கூட்டு வரித் திட்டத்தில் வணிகர்களுக்கு எழுந்திருக்கும் அச்சங்கள்:
  • மாநில அரசுகள் இத்திட்டத்திற்கு மாறப் போகின்றனவா இல்லையா என்பதில் இன்னமும் ஒரு திண்மையான கருத்து இல்லை
  • வணிகர்கள் தாங்கள் கணக்கு வைத்துக் கொள்ளும் முறையை மாற்ற வேண்டும். எந்த வகையான புதுக் கணக்கு சரியாக இருக்கும், அரசால் ஏற்கப் படும் என்பதில் நிலவும் குழப்பம்
  • புது வரியமைப்புக்குப் பணியாளர்களைப் பழக்க பயிற்சி கொடுக்க வேண்டியுள்ளதால் செய்ய வேண்டியிருக்கும் அதிகச் செலவு
  • புதிய வரியமைப்பை அரசு இயந்திரம் அமல் படுத்த மேற்கொள்ளும் செயல்களால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படக் கூடும்
  • பல வணிகர்கள் கணக்கு வைப்பதற்கும், வாங்குவோருக்கு ரசீது கொடுப்பதற்கும் கணினியைப் பயன் படுத்துகிறார்கள். இதற்கு மென்பொருள் செய்ய ஏகச் செலவு செய்திருக்கிறார்கள். இப்போது மதிப்புக் கூட்டு வரித் திட்டத்திற்கு ஒத்து வரும் வகையில் மென்பொருட்களை மாற்றியமைக்க வேண்டும். இதனால் ஆகப் போகும் செலவு
  • இந்தப் புது வரி அமைப்பு தொடர்ந்து நிலைக்குமா? அல்லது பாதி வழியில் அரசால் கை விடப் பட்டு பழைய நிலைக்கு வந்து விடுவோமோ? என்ற எண்ணம்
  • அரசுகள் இன்னமும் வரி அளவுகள், வரி வசூல் செய்யப் போகும் முறைகள், தணிக்கை முறைகள் ஆகியவற்றை வணிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு தெரியப் படுத்தாமல் இருத்தல்
சமீபத்தில் மருந்துக் கடைக்காரர்கள் வரித்திட்டம் மாறப் போகும் காரணத்தால், மருந்துகள் கொள்முதலை வெகுவாகக் குறைத்து விட்டார்கள். இதனால் அவசியமான மருந்துகளுக்கு சந்தையில் தட்டுப்பாடு வரலாம் என்று பேப்பரில் படித்தேன். இத்தகைய தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பது அவசியம்.

No comments:

Blog Archive