Friday, March 04, 2005
70 மணி நேரத்தில் உலகம் சுற்றிய ஸ்டீவ் ·பாஸெட்
ரைட் (Wright) சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. ரைட் சகோதரர்களின் விசையால் இயங்கிய (powered) விமானம் 12 நொடிகளே ப்றந்தது. சுமார் நூறு அடிகளைக் கடந்தது. இதன் எடை சுமார் 270 கிலோ.
இன்று ஸ்டீவ் ஃபாஸெட் என்ற ஒரு அமெரிக்கர் தன்னந்தனியாக Global Flyer என்று பெயரிடப் பட்ட கரி இழையால் (carbon fibre) ஆன ஒற்றை ஜெட் விசை (engine) பொருத்தப் பட்ட ஒரு விமானத்தில் 70 மணி நேரம் தரையிறங்காமல் பறந்து புறப்பட்ட இடத்தை பத்திரமாகச் சென்றடைந்தார். புறப்படும் போது இந்த விமானத்தின் எடை சுமார் 10000 கிலோ.
முதல் முதலில் உலகத்தைச் சுற்றி விமானத்தில் தன்னந்தனியாக ஒரே மூச்சில் பறந்து சாதனை படைத்து விட்டார் ஸ்டீவ்.
மிதிவண்டி ஓட்டிப் பழக்கமுள்ளவர்களுக்கு எதிர் காற்றைப் பற்றித் தெரியும். எதிர் காற்றில் மிதிவண்டியை உந்த அதிக சக்தி செலவிட வேண்டும். அதே பின்னிருந்து தள்ளும் காற்றில் சிறிது "ஹாயாக" மிதிக்கலாம்.
விமானத்திற்கும் எதிர் காற்று, தள்ளு காற்று, குறுக்கே வீசும் காற்று எல்லாம் உண்டு. எதிர் காற்றிலும், குறுக்குக் காற்றிலும் பறக்கும் போது விமானம் இயல்புக்கு அதிக எரி பொருள் செலவு செய்யும்.
இந்த Global Flyer விமானத்தில் உலகைச் சுற்றிப் பறக்க ஏதுவாக 80 சதவிகிததிற்கும் மேற்பட்ட இடத்தில் எரிபொருள் நிரப்பப் பட்டிருந்தது.
விமானத்தின் எடையைக் மிகக் குறைவாக அமைத்தால், இருக்கும் எரிபொருளுக்குச் சற்று அதிக தூரம் பறக்கும். இதனால், ஸ்டீவ் விமானத்தில் அமரும் இடம் மிகக் குறுகலாக அப்படி இப்படித் திரும்பக் கூட முடியாத நிலையில் அமைக்கப் பட்டிருந்தது.
70 மணி நேரத்திற்கும் பால் மட்டுமே இவரது உணவு. தனியாக விமானம் ஓட்டுவதால் இமைக்கும் நேரம் கூடக் கண் அயர முடியாது.
ஒற்றை விசையுள்ள விமானத்தில் விசை நின்று போனால் ஆபத்து.
அவர் அமெரிக்காவின் கான்ஸாஸ் மாநிலத்திலுள்ள சாலினா விமான நிலையத்தில் கடந்த (இந்திய நேரப் படி) செவ்வாய்க் கிழமை காலை கிளம்பினார். கிளம்பிய சிறிது நேரத்தில், எதிர் பார்த்த அளவிற்கு மேல் எரி பொருள் செலவாயிருந்தது தெரிய வந்தது. திட்டமிட்ட படி போய்ச்சேருவோமா என்ற சந்தேகம் ஜப்பான் வரை கூடவே வந்தது. பிறகு பின் காற்று பலமாகத் தள்ளியதால் "தரையிறங்கத் தேவையில்லை" என்ற தைரியமான, ஆனால் ஆபத்தான முடிவெடுத்து, சாலினா விமான தளத்திலேயே இன்று பத்திரமாகத் தரையிறங்கி விட்டார்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment