Wednesday, March 02, 2005

வங்கிக் கணக்கில் எடுக்கும் 10000 ரூபாய்க்குப் 10 ரூபாய் வரி!

மதிப்பிற்குரிய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் சமீபத்திய இந்திய நிதி நிலை அறிக்கையில் வங்கிக் கணக்கில் இருந்து ஒரே நாளில் எடுக்கும் ஒவ்வொரு 10,000 ரூபாய்க்கும் 10 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்தார்.

இதற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பிய போது அவர் "இதை எதிர்ப்போர் 10 ரூபாய் வரியைப் பெரிதாகக் கருதுவதாகப் படவில்லை. அது விட்டுச் செல்லும் வரித் தடயத்தைப் பற்றித்தான் கவலைப் படுகிறார்கள்" என்று தெரிவித்தார். வங்கிக் கணக்குகளில் இருந்து பெருமளவில் எடுக்கப் படும் பணம் கணக்கில்லாமல் மறைந்து போகிறது என்றும் அறிவித்தார்.

இதை என் அறிவுக்கு எட்டிய முறையில் சிந்தித்த போது தோன்றிய கருத்துக்களை இங்கே பதித்துள்ளேன். தவறு இருந்தால், தெரிவித்தால் திருத்திக் கொள்கிறேன்.

நாம் உபயோகிக்கும் பணம் காகித வடிவிலும், காசுகள் வடிவிலும் உள்ளது. இந்தக் காகித்திற்கும், உலோகத்திற்கும், அது பணவடிவில் வர்ணிக்கும் மதிப்பு இயற்கையில் கிடையாது.

உதாரணத்திற்கு நூறு 20 காசுகளின் உலோக மதிப்பு 20 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும். 100 ரூபாய் நோட்டில் உள்ள காகிததின் மதிப்பு அதை வெளிநாட்டில் ஒரு கடையில் கொடுத்துப் பார்த்தால் தெரியும். சுருட்டி சோப்புக் குமிழி விட உபயோகிக்கத் தயங்க மாட்டார்கள்.

இப்படி இருக்க பணத்திற்கு மதிப்பு எப்படி வருகிறது? அரசு அச்சடித்து அங்கிகரிக்கும் பண வடிவிற்கோ, காசு வடிவிற்கோ அரசு அதில் குறியிட்டுள்ள மதிப்பை உத்தரவாதம் செய்கிறது. இந்த உத்தரவாதத்தை அரசு ரிசர்வ் வங்கி மற்றும் அதைச் சார்ந்த வங்கி அமைப்பின் மூலம் அமல் படுத்துகிறது.

எப்படி? அரசால் அச்சடிக்கப் பட்ட பணம் சந்தைக்கு வங்கிகள் மூலமாகத்தான் வருகிறது. வேறு வழிகள் இல்லை. அதே போல் வங்கி கொடுத்த நோட்டு சற்று கிழிந்து "வேற நோட்டு குடுபா!" என்று பெட்டிக் கடைக்காரர் கேட்கும் போது நாம் அதன் மதிப்பை உறுதி செய்ய ஓடத் தலைப்படும் இடம் நம் வங்கி நண்பனைத்தான்.

ஆக, வங்கிகளில் இருந்து எடுக்கப் படும் முக்காலே மூணுவாசிப் பணம், வங்கிக்குத்தான் வரவேண்டும்.

இது எப்படி? ஒரு உதாரணம் பார்ப்போம்.

ராமு தன் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு நாள் 200 ரூபாய் எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் பஸ்ஸ¤க்கு 5 ரூபாய் கொடுத்து வீட்டுக்குப் போகிறார். மிட்டாய் கடையில் 1/2 கிலோ அல்வா வாங்கிக் கொள்கிறார். வீட்டில் மகளுக்குப் புத்தகம் வாங்கப் பணம் கொடுக்கிறார். மனைவிக்கு அரிசி வாங்கக் காசு கொடுக்கிறார். மிச்சப் பணத்தைப் பர்சிலேயே வைத்துக் கொள்கிறார்.

மகள் அந்தப் பணத்தை புத்தகக் காரரிடம் கொடுத்துப் புத்தகம் வாங்குகிறார். மனைவி கடையில் அரிசி வாங்கிப் பானையில் கொட்டி வைத்து, மிச்சப் பணமிருந்தால் பானைக்குள்ளேயே ஒளித்து வைக்கிறார்.

பஸ் நடத்துனர் வசூலான பணத்தை நாளிறுதியில் பேருந்து நிறுவனத்தில் கட்டுகிறார். நிறுவனம் அதை அடுத்த நாள் அதன் வங்கிக் கணக்கில் கட்டுகிறது. ஆக 200 ரூபாயில் 5 ரூபாய் ஒருவருக்குப் பேருந்துச் சேவையை நுகர உதவிவிட்டு வங்கி அமைப்புக்கே பத்திரமாக வந்து விட்டது.

உதாரணத்தை எளிமைப் படுத்த, மிட்டாய் கடைக்காரரும், புத்தகக் கடைக் காரரும், அரிசிக் கடைக்காரரும் பத்திரம் கருதி கல்லாவில் தேவைக்கு மேல் பணம் வைத்துக்கொள்ளாமல், வியாபாரத்தில் வந்த பணத்தை தத்தம் வங்கிக் கணக்குகளில் முறையே அடுத்த ஓரிரு நாட்களில் கட்டி விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஆக ராமுவின் பர்சிலும், ராமு வீட்டு அரிசிப் பானையிலும் தங்கிய பணத்தைத் தவிர 200 ரூபாயில் மிச்சப் பணம் சேவைகளும் பொருள்களும் கை மாற உதவி செய்து விட்டு, பல கைகள் மாறி வங்கிக்கே வந்து சேர்ந்து விட்டன.

இதே ராமு 200 ரூபாய்க்கு பதில் 2000 ரூபாய் எடுத்து அதில் 180 ரூபாய் மட்டும் செலவழித்திருந்தால், 1820 ரூபாயைப் பர்சில் வைத்துக்கொண்டு சுற்றுவாரா? மாட்டார்! ஏனென்றால் பர்சிலோ வீட்டு பீரோவிலோ இருக்கும் பணத்திற்கு வட்டி கிடைக்காது. வங்கியில் வைத்திருந்தால் கிடைக்கும். ஆகவே உபரிப் பணத்தைக் கொண்டு வந்து வங்கியில் கட்டி விடுவார். திருட்டுப் போய்விடும் என்ற பயமும் மற்றொரு காரணம். இது இயல்பு நிலை.

இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியை சமீபத்தில் தாண்டியது. ஒரு கணக்கிற்கு, நாம் பர்ஸ், அரிசிப் பானை, கல்லாப் பெட்டி, இரும்புப் பணப் பெட்டி (அந்தக் காலத்து தமிழ் சினிமாவில் வரும்!!), மாணவர்களின் "பாக்கெட் மனி"யில் செலவழிக்காத பணம், ஆகியவற்றில் இருக்கும் பணம் சராசரியாக ஆளுக்குப் 10 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இந்த வகையில் கணக்கிட்டால், புழக்கத்தில் தேங்கி இருக்கும் பணம் 1000 கோடி ரூபாய். மிச்சப் புழக்கப் பணம் வங்கிகிக் கணக்குகளில் இருந்து வெளியே சென்று சிறிது உலாவி விட்டு வங்கிக்கே வருகிறது. இந்த உலாவலில்தான் நாட்டில் வேலை நடக்கிறது.

பணத்திற்கு இன்னொரு தன்மை உண்டு. அதைச் செலவு செய்யாத வரை அதன் மதிப்பை மனிதன் நுகர முடியாது. செலவு செய்யாமல் பையில் வைத்துக் கொண்டிருக்கும் பணம், அதன் மதிப்பிற்குப் பொருள் வாங்கும் திறனையும், ஒரளவிற்கு பத்திர எண்ணத்தையும் அளிக்கிறது. அதைச் செலவு செய்தால் தான் "மிளகாய் பஜ்ஜி" போன்ற வாழ்க்கையின் இன்பங்களை நுகர முடிகிறது!

"வங்கிக் கணக்குகளில் இருந்து பெருமளவில் எடுக்கப் படும் பணம் கணக்கில்லாமல் மறைந்து போகிறது" என்றால் என்ன அர்த்தம்? சிறிதளவு பணம், அரிசிப் பானைக்குள் தேங்குகிறதைத்தான் பார்த்தோமே? என்ற கேள்விகள் எழுகின்றன.

கணக்குக் காட்டப் படும் பணத்தை மக்கள் தைரியமாகச் செலவு செய்கிறார்கள் அல்லது சேமிக்கிறார்கள்.

கணக்குக் காட்டப் படாத பணத்தைத்தான் அதை வைத்திருப்பவர்கள் செலவு செய்யத் தயங்குகிறார்கள். ஏன்? சுற்றியிருப்பவர்கள் "இவனுக்கு எப்படி இதற்குப் பணம் வந்தது?" என்று உடனே சந்தேகப் படுவார்கள். ஆக கணக்கில் வ்ராத பணம் சம்பாதிப்பவர்கள், அதைப் பாதாள அறைகளில் பூட்டுவது, மெத்தைக்குள் வைத்து தைப்பது, இரும்புப் பெட்டியில் பூட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடத் தலைப் படுவார்கள். வங்கியில் கட்ட மாட்டார்கள். நேரடியாகச் செலவு செய்ய வெகுவாகத் தயங்குவார்கள். இவர்கள் செலவு செய்வதற்கென்றே சில பாதாள பொருளாதார அமைப்புக்கள் இயங்குகின்றன. அவற்றில் செலவு செய்வார்கள்.

இப்படிக் கணக்கில் வராமல் போகும் பணம்தான் கறுப்புப் பணம். வெள்ளைப் பணம் வைத்திருப்பவர்கள்தான் லஞ்சம் கொடுப்பது, பில் இல்லாமல் பொருள் வாங்குவது (பலர் அறியாமையிலும், பலர் தெரிந்தும்) போன்ற செயல்களால் கறுப்புப் பணம் ஏற்பட உதவுகிறார்கள். கறுப்புப் பணம் தீசல் காரியங்களுக்கே பெரிதும் உதவுகிறது. பணவீக்கம் ஏற்படக் காரணமாகிறது. ஒரு இணையான கறுப்புப் பொருளாதாரம் நடக்கக் காரணமாகிறது. சில சமயம் தேசத்தின் பாதுகாப்பிற்கே பங்கம் விளைவிக்கக் கூடிய செயல்களுக்குத் துணை போகிறது.

இந்தக் கருப்புப் பணம் ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு வகையில் அறிவுக் கூர்மை உள்ளவர்களால், சலவை செய்யப் பட்டு திரும்ப வெள்ளைப் பணமாகிறது. கடந்த சில வருடங்களில், இந்த ஓட்டைகளையெல்லாம் அரசு அடைத்துக் கொண்டே வருகிறது.

இப்படிப் பட்ட கறுப்புப் பணம் உதிக்கக் கூடிய இடத்திலேயே வரித் தடயம் அமைப்பது ஒரு சிறந்த யோசனைதான். மற்ற எந்த நாட்டிலும் இல்லாத யோசனை இந்தியாவிற்கு ஏன் என்ற கூவலில் அர்த்தம் இல்லை.

ஆனால் தமிழ்சசி கூறியது போல், வரி கட்டி வெள்ளைப் பணம் வைத்திருப்பவன் பணம் எடுக்கும் போது அவனிடம் மற்றொரு முறை வரி வாங்குவது, தீமையை ஒழிக்க நல்ல்வனுக்குத் தண்டனை கொடுப்பதற்கு ஒப்பாகிறது,

அதே நேரத்தில் வங்கிக் கணக்கில் சராசரி சட்டத்தை மதிக்கும் இந்தியன் எத்தனை முறை 10000 ரூபாய்க்கு மேல் எடுக்கிறான் அல்லது எடுக்கும் தேவை உருவாகிறது என்று யோசித்துப் பார்த்தால், அதிகம் வாய்ப்புகள் இல்லைதான். ஆகவே நாடு முன்னேற வேண்டும் என்று நினைக்கும் இந்தியன் இந்தப் பத்து ரூபாயைப் பெரிய சுமையாகக் கருதத் தேவையில்லைதான்.

மதிப்பிற்குரிய அமைச்சர் சிதம்பரம் அவர்கள், கிளம்பிய எதிர்ப்புகளைப் பார்த்து விட்டு, "நான் பிடிவாதக்காரன் அல்ல. இந்த யோசனை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், இன்னொரு யோசனை செய்வோம்" என்று கூறியிருக்கிறார். அவரது உறுதியைப் பாராட்ட வேண்டும்.

3 comments:

dondu(#11168674346665545885) said...

நாம் ஒருவருக்குக் காசோலையாக 10,000 ரூபாய்கள் அளித்தால் அதற்கு வரி உண்டா? இன்னும் வேறு மாதிரியாகக் கேட்கிறேன். ஒரே நாளில் ஒருவர் கணக்கில் ரொக்கப் பணம் எடுத்தல், கொடுத்தக் காசோலைக்கானத் தொகை கணக்கில் டெபிட் செய்தல் சேர்ந்து 10,000 ரூபாயைத் தாண்டினாலும் வரி உண்டா?
அன்புடன்,
டோண்டு ராகவன்

era.murukan said...

The F.M has indicated the threshold amount for this withdrawal tax may be raised (Rs 50,000 I understand from the market grapewine). As an AML (anti money laundering) measure, this is welcome.

rgds,
era.mu

ந. உதயகுமார் said...

காசோலைகளை இரண்டு வகையாக எழுதலாம்.

முதல் வகை: காசோலையில் பெறுபவர் பெயரை எழுதி அக் காசோலையை cross செய்யாமல் கொடுத்தல்.

இரண்டாம் வகை: காசோலையைக் cross செய்தல். இரண்டாம் வகைக் காசோலைப் பரிவர்த்தனையில் பணம் எங்கே செல்கிறது என்று தொடர முடியும். ஏனென்றல் அக் காசோலையை ஒரு வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த முடியும்.

முதல் வகைக் காசோலை பணத்திற்கோ அல்லது இன்னொருவர் பெயருக்கோ மாற்றத்தக்கது. முதல் வகை காசோலை பரிவர்த்தனைகள் பணப் பரிவர்த்தனைகளாகக் கணக்கிடப் பட்டு அவற்றின் மீதும் 0.01% வரி விதிக்கப்படும் என்று நான் புரிந்து கோன்டுள்ளேன்.

Blog Archive