Saturday, February 12, 2005

சுனாமி நிவாரணம்

மத்திய மாநில அரசுகளிடம் சேர்க்கப்பட்டிருக்கும் சுனாமி நிவாரணப் பணத்தின் பின்னணியில் கோடிக்கணக்கான இந்தியர்களின் சமூக நலச்சிந்தனையும், சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கான உண்மையான அனுதாபமும், பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்கள் விரைவில் நன்னிலை திரும்ப அந்தப் பணம் உதவ வேண்டும் என்ற கவலையும், தன்னலம் கருதாத் தியாகமும் உள்ளன.

இரு அரசுகளும் மக்களின் எண்ணங்களை புரிந்து செயல் படும் பக்குவம் பெற்றவை என்பதில் நமக்குச் சந்தேகமில்லை.

மத்திய அரசும் மாநில அரசும் சுனாமி தாக்கிய உடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியளிப்பதில் பாரட்டும் விதத்தில் நடந்து கொண்டன.

அதே போல், சீரமைப்புப் பணிகளிலும் விரைந்து செயல் பட வேண்டும் என்ற அவசரத்தில் சில குளறுபடிகள், அபிப்பிராய பேதங்கள் ஏற்படும் போது, அவற்றை மூட்டை கட்டி ஓரத்தில் வைத்து விட்டு, பாதிக்கப் பட்ட குடும்பங்களின் நிலமை மற்றும் பொருளாதாரம் விரைந்து சீரடையப் பாடுபடுவதில் மத்திய, மாநில மக்கள் பிரதநிதிகள் அனைவரும் இணைந்து செயல் புரியவேண்டும்.

அனைத்தையும் இழந்து நிற்கும் ஏழை மீனவர்கள் அரசு தரும் கடனைப் பெரும் சுமையாகப் பார்ப்பது இயற்கையே. காப்பீட்டு வசதிகள் இல்லாமை மற்றும் மக்களின் அறியாமை போன்ற காரணங்களால் தொழிலுக்குண்டான மூலதனங்களை இழந்து தவிப்போருக்கு இத்தகைய எதிர்பாராத இழப்புகளுக்குக் காப்பீடு வழங்கும் பொறுப்பை அரசு மட்டுமே ஏற்க முடியும்/வேண்டும்.

ஏழை மீனவர்கள் புதுப் படகுகள் வேண்டும் என்று எண்ணாமல், அரசு படகுகள் வாங்குவதற்காக அறிவித்த உதவிப் பணத்தைத் தானமாகத் தங்களுக்கு அளித்தால் தங்கள் உடைந்த படகுகளைச் சீர் செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளது அரசு கவனிக்க வேண்டிய விஷயம். அதே சமயம், பசையுள்ள மீனவர்களுக்கு இலவசமாகப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

இரு அரசுகளும் இணைந்து செயல் புரிந்து பாதிக்கப் பட்ட மக்களின் தேவையறிந்து விரைந்து சீரமைப்புப் பணிகளை செவ்வனே முடித்து மக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற வேண்டும்.

No comments:

Blog Archive