வியாபாரம் செய்பவர்கள், மூலப் பொருட்களைச் சந்தையில் வாங்கி அதன் மதிப்பைக் கூட்டி விற்று லாபம் ஈட்டுகிறார்கள்.
உதாரணமாக நமக்கெல்லாம் மிகப் பழக்கமான இட்லி வியாபாரத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த வியாபாரத்தில் மூலப் பொருள் அரிசி, உளுந்து, தேங்காய், மிளகாய், பொட்டுக் கடலை முதலியவை. இப் பொருட்களை "மல்லிப் பூ" போன்ற இட்லியாகவும், கெட்டிச் சட்னியாகவும் மாற்றி, அதன் மதிப்பைக் கூட்டி விற்பதன் மூலம் இட்லி வியாபாரிகள் லாபம் ஈட்டுகிறார்கள்.
தற்போதைய வ்ரி முறை மூலம், வியாபாரத்திற்கு மூலப் பொருள் வாங்கும் வியாபாரிகள் அதற்கான விற்பனை வரியையும் சேர்ந்தே கட்டுகிறார்கள். ஆகவே, அவர்களின் அடக்க விலையில் கட்டிய வரியும் அடங்கும். இந்த அடக்க விலையுடன், மதிப்புக் கூட்டத் தான் செய்த செலவுகளையும், ஈட்ட வேண்டிய லாபத்தையும் சேர்த்து இவர்கள் விற்பனை விலையை நிர்ணயிக்கிறார்கள். இந்த விலையில் ஏற்கெனவே கட்டிய வரி அடங்கும் என்பதை கவனத்தில் கொள்வோம்.
மதிப்புக் கூட்டிய பொருளை விற்கும் போது, விற்பனை விலையில் குறிப்பிட்ட சதவிகிதம் விற்பனை வரியாக சேர்க்கப் பட்டு வாங்குவோரிடம் வசூலிக்கப் படுகிறது.
ஆம்! ஏற்கெனவே கட்டிய வரியின் மீதும் இன்னொரு முறை வரி கணக்கிடப் பட்டு ஏற்றப் படுகிறது. இத்தனை வரிச் சுமையையும், மதிப்புக் கூட்டப் பட்ட பொருளைச் சந்தையில் வாங்கும் நுகர்வோராகிய நாமே ஏற்கிறோம். இதற்கு மேல் நம்மிடம் சேவை வரி, உபரி வரி என்று மேலும் வரிகளை வசுலிக்கிறார்கள்.
இதனாலேயே நம்மில் பலர் "பில் வேண்டாம்பா!!" என்று விலையைக் குறைத்து வாங்க விழைகிறார்கள். இது வரி ஏய்ப்பு மட்டுமல்லாமல், பல விதமான பொருளாதாரக் குற்றங்கள் நாட்டில் நிகழ வழி செய்கிறது. அரசுக்கு வரி மூலம் வரும் வருமானம் குறைய ஏதுவாகிறது.
மதிப்புக் கூட்டு வரி அமல் படுத்தப் படும் போது, ரசீது கொடுப்பது கட்டாயமாக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், மதிப்புக் கூட்டி சரக்குகள் விற்கும் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும், ஒரு மாதத்தில் சரக்குகள் விற்கும் விலைக்குக் கட்ட வேண்டிய வரியிலிருந்து பொருள்கள் வாங்கிய போது கட்டிய வரியைக் கழித்துக் கொண்டு மீதியைக் கட்டலாம்.
- ஒரு வியாபாரி ஒரு மாதத்தில் வாங்கிய பொருட்களின் விலை ரூ 1,00,000/= என்று வைத்துக் கொள்வோம்.
- அதற்கு 4% வரிச் சுமை என்றால் அவர் கட்டிய வரித் தொகை ரூ 4,000/=
அவர் அந்த மாதத்தில் விற்பனை செய்த சரக்குகளில் வந்த வரவு ரூ 2,00,000/= - 10% வரி விகிதத்தில் அவர் கட்ட வேண்டிய வரித் தொகை ரூ 20,000/=
அந்த மாதத்தில் வரி கட்டும் போது அவர் ரூ 20,000 த்தில் ரூ 4,000 த்தைக் கழித்துக் கொண்டு மிச்சத்தை அரசுக்குக் கட்டினால் போதும்.
ஆகவே மதிப்புக் கூட்டி விற்போர், பொருள் வாங்கும் போது ரசீது கேட்கப் போவது நிச்சயம். அந்த ரசீதுதான் வாங்கிய பொருளுக்கு அவர்கள் கட்டிய வரித் தொகைக்கான அதிகாரப் பூர்வ ஆதாரம்.
மதிப்புக் கூட்டப் பட்டதானதற்கான வரி ரூ 4,000 த்தை ஒரு வேளை தாண்டவில்லை என்றால் துண்டு விழும் வரிப்பணத்தை அடுத்த நிதியாண்டின் இறுதியில், கட்ட வேண்டிய வரிப் பணத்தில் கழித்துக் கொள்ளலாம். அப்படியும் கழித்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் அரசுக்கு விண்ணப்பித்து அத் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
- மதிப்புக் கூட்டு வரியினால் வரிக்கு வரி கட்டும் நிலை அகற்றப் படுகிறது.
- "பில் வேண்டாம்பா!!" என்ற நிலையை வியாபாரிகளும், உற்பத்தியாளர்களும் எடுக்க வேண்டியதில்லை. ரசீதுதான் அவர்கள் கட்டவேண்டிய வரிக்கணக்கை (வரிக் கழிவுக்கான ஆதாரத்தை) சரியாகக் காட்டும் ஒரே ஆதாரம்.
- அரசுக்குப் போய்ச் சேர வேண்டிய வரிப் பணம் சரியாகப் போய்ச் சேரும்.
- அனைவரும் கட்ட வேண்டிய வரியைச் சரியாகக் கட்டினால் அரசு உபரி வரிகளைப் போட வேண்டிய தேவை இல்லை.
- வரி ஏய்ப்பவர் ஏற்படுத்தும் வரிச் சுமை நேர்மையான வியாபாரிகள் மேல் ஏறாமல் தடுக்கலாம்.
- அரசு மதிப்புக் கூட்டு வரியை அமலுக்குக் கொண்டு வரும் போது ஏனைய பல வரிகளை நீக்கிக் கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது.
இந்தக் காரணங்களால், சரக்குகளுக்கு மேலுள்ள வரித் தொகை குறைந்து விலை குறைய வாய்ப்பிருக்கிறது என்று அரசு கூறுவதை நம்பத்தான் வேண்டியிருக்கிறது.
மதிப்புக் கூட்டு வரி நடப்பு நிலையிலிருந்து மிகப் பெரிய மாற்றம். மாற்றங்களை சரியாக நிர்வகிக்காவிட்டால் குழப்பங்கள் மிகுந்து தடுமாற்றமாக வாய்ப்புகள் அதிகம்.
இந்த மாற்றத்தைப் பற்றி வியாபாரிகளிடையே இன்னும் வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அரசு மேற்கூறிய வெள்ளை அறிக்கைக்கு மேல் விளக்கங்களும், உதாரணங்களும் வழங்கினால் வசதியாக இருக்கும்.
2 comments:
நல்ல பதிவு!
(எழுத்துருவின் அளவும், பின்புலத்தின் நிறமும் வாசிப்பதற்கு வசதியாக இல்லை,கொஞ்சம் கவனிக்கவும்; நன்றி!)
Post a Comment