- பெங்களுரின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மின்வினியோகத்தை நிர்வாகம் கட்டுப்படுத்திய போதும், இந்த நகரத்தின் வளரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.
- போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க பெங்களூர் நிர்வாகம் சாலைகளை அகலப் படுத்துவது மற்றும் மேம்பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளைச் செய்திருக்கிறது. இன்னும் செய்து கொண்டிருக்கிறது. இருந்தும் போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்துவது மற்றொரு பெரிய சவாலாக இருக்கிறது.
- பெங்களூரில் இருந்து ஹோசூருக்கு 30 கி.மீ தொலைவில் உள்ள மின்னணு நகரத்திற்கு தினமும் அலுவலகம் செல்வோர், மாநிலப் போக்குவரத்துப் பேருந்துகள், மாநிலங்களுக்கு இடையே சரக்கு எடுத்துச் செல்லும் லாரிகள், சாலை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் சாலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருப்பதால் நெரிசலில் சிக்கி, நேர விரயம், மாசுபட்ட காற்றைச் சுவாசிக்க வேண்டியிருத்தல், போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
- விமான நிலையத்திலிருந்து நகருக்குச் செல்லும் சாலையில் நெரிசல் நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே போகிறது.
- பெங்களுரில் தற்போது ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிகளில், அறைகள் வாடகைக்குக் கிடைப்பது குதிரைக் கொம்பாகியிருக்கிறது. 300 அமெரிக்க டாலர்கள் கொடுத்தாலும், இடம் கிடைப்பதில்லை. காரணம், பெங்களூரில் தொழில் நிறுவனங்கள் அதிகரிக்க அதிகரிக்க, வேலை நிமித்தமாக பெங்களூர் வரும் அயல்நாட்டினர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. ஆனால் தேவைக்கேற்ற அறைகள் இல்லை.
- சமீபத்தில் நடந்த விமானக் கண்காட்சியின் போது 800 டாலர் கொடுத்தாலும் அறைகள் கிடைக்கவில்லை என்றும், சிலர் சென்னை விடுதிகளில் தங்கி விமானம் மூலம் தினமும் பெங்களூர் சென்று வந்தனர் என்றும் கேள்வி.
- பெங்களூரின் விமான நிலையத்தை விரிவு படுத்தும் திட்டச் செயலாக்கம் சில முடக்கங்களைச் சந்தித்து மிகவும் மெதுவாக நகர்கிறது.
(Picture source: The Hindu)
சென்னையில் மூன்று மின்னணு நகரங்கள் கட்டப்படுகின்றன. இரண்டு மகாபலிபுரம் செல்லும் சாலையிலும், ஒன்று செங்கல்பட்டு செல்லும் சாலையிலும் அமைந்து வருகின்றன.
- மகாபலிபுரத்தை நோக்கி நிர்வாகம் விரிவான சாலைகளை அமைத்து வருகிறது. இந்தச் சாலையில் அலுவலகம் செல்வோர், மாநிலப் போக்குவரத்துப் பேருந்துகளையும், சரக்கு லாரிகளையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.
- மேலும், சென்னையில் நகர விரைவு மின்சார ரயில் வசதி உள்ளது. இந்த வசதி இப்போது செங்கல்பட்டு வரையும், திருவான்மியூர் வரையும், இயக்கப் படுகிறது. வேண்டும் போது இந்த வசதியை மகாபலிபுரம் வரை கூட நீட்டிக்க முடியும். பறக்கும் பாதையில் திருவான்மியூர் வரை மின்வண்டிகள் ஏற்கெனவே இயங்கத் தொடங்கி விட்டதால் இத்தகைய திட்டத்தைச் செயல் படுத்துவது எளிதாகிறது.
- தகவல் தொழில் நுட்ப அலுவல் செய்வோர், தேவை ஏற்பட்டால், விரைந்து அலுவலகம் செல்ல வேண்டியது மிக அவசியம். இந்த விரைவான பயணத்திற்கு வகை செய்ய, ஒன்றிற்கும் மேற்பட்ட வழிகள் இருப்பதும் அவசியம். அப்போதுதான் நம்மிடம் சேவை நுகரும் அயல் நாட்டினரின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் தொடர்ந்து பெற முடியும். சென்னையின் தற்போதைய வசதிகளைச் சிறிது மேம்படுத்தினாலே இதற்கு வழி கிடைக்கும்.
- சென்னையும், தமிழகமும் மின்சாரத் தேவையைப் பொருத்த வரை தட்டுப்பாடுகளைக் கடந்த சில வருடங்களாகப் பெரிதும் சந்திக்கவில்லை. அரசின் சிந்தனையில் இருக்கும் திட்டங்களால் இனியும் இருக்காது என்று நம்புவோம்.
- சென்னை விமான நிலையத்தைப் பொருத்த வரை, விமானப் போக்குவரத்தைச் சந்திக்க ஏற்கெனவே திணற ஆரம்பித்திருக்கிறது. இத்தனைக்கும் சமீப காலத்தில்தான் விமான நிலையம் விரிவாக்கப் பட்டது. குறைந்த விலையில் விமான சேவை அளிக்கும் நிறுவனங்களின் துவக்கமும் வளர்ச்சியும், அரசின் திறந்த வானக் கொள்கையும், போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் சவாலை அதிகரிக்கவே போகின்றன. மத்திய அரசினால் சமீபத்தில் அறிவிக்கப் பட்ட விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களில் சென்னையின் பெயரைக் காணமுடியாதிருப்பது கவலைக்குரிய விஷயம்.
- சென்னையின் இன்றைய தண்ணீர்த் தட்டுப்பாடு இன்னொரு கவலைக்குரிய விஷயம். இதில் வரப் போகும் வளர்ச்சியை எப்படி சமாளிக்கப் போகிறோம்?
1 comment:
படத்துக்கு தலைப்பு ஆங்கிலத்தில் வைப்பதா தமிழி வைப்பதா என பல கவலைகள் அவர்கட்கு .இதையெல்லாம் நினைக்க நேரமிருக்காது .
Microsoft -பேர் மாத்தாவிடில் இங்கு வரக்கூடாது என சொல்லாமல் இருந்தால் சரி .
Post a Comment