Saturday, February 26, 2005

இந்தியப் பொருளாதார மதிப்பீட்டு அறிக்கை 2004-05

இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு 6.9 சதவிகிதம் வளரும் என்று இந்த அறிக்கை மதிப்பிடுகிறது. வளர்ச்சி விகிதமும், முந்தைய ஆண்டுகளில் இருந்த 6 சதவிகிததை ஒட்டிய நிலையிலிருந்து, வரும் ஆண்டுகளில் 7 சதவிகிதத்தை ஒட்டியே இருக்கும் என்ற கணிப்பை இந்த அறிக்கை அளிக்கிறது. முந்தைய சில அறிக்கைகளிலிருந்து மாறுபட்டு, இந்த அறிக்கை நாடு எதிர் நோக்கியுள்ள முக்கிய பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிக் கூறுவதோடல்லாமல், சில தீர்வுகளைப் பற்றியும் கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தை விவசாயம், தொழில்கள், சேவைகள் என்ற மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இதில் விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதம் 1.1 சதவிகிதத்தினை ஒட்டியே இருக்கிறது. நாட்டில் சேவைகள் வளர்ச்சிவிகிதம் முந்தைய ஆண்டுகளில் ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டிய போதும், கடந்த ஆண்டில் சற்றுத் தேக்க நிலையைக் கண்டது. இந்நிலையில், அரசு எதிர்பார்க்கும் 8 சதவிகிதத்திற்கும் அதிகப் பொருளாதார வளர்ச்சியை எட்ட தொழில் துறை 10 சதவிகிததிற்கும் மேல் வளர வேண்டும் என்று கூறப் பட்டிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு உதவக் கூடிய தற்போதைய சில நிலைகள்:

  • கச்சா எண்ணை போன்ற இறக்குமதிப் பொருட்கள் விலை அதிகரித்தது, நாட்டில் பணப் புழக்கம் சிறிது மிகையாக இருந்தது, பருவமழை சற்றுக் குறைந்ததால் நிலவிய அச்சம் போன்ற காரணங்களால் சற்று உயர்ந்த பணவீக்க விகிதம் இப்போது கட்டுப் பாட்டில் உள்ளது
  • மொத்த மக்கள்தொகையில், வேலைக்குச் செல்லும் வயதில் இருப்போர் தொகை அதிகரித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் இந்நிலை தொடரும். ஊதியங்களும் செலவுகள் போக சேமிக்கும் வகையில் அதிகரித்திருப்பதால், நாட்டில் சேமிப்புகள் அதிகரித்துள்ளன
  • நிதிகளைக் கையாள்வதில் பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மையைக் கட்டுப்படுத்தும் (Fiscal Responsibility and Budget Management Act) சட்டத்தை அமல்படுத்துவதால் நிதிப் பற்றாக்குறையை அரசு கட்டுப் படுத்த முனையும், இதனால் சேமிப்புக்களும் முதலீடுகளும் அதிகரித்து வளர்ச்சிக்கு உதவும் வாய்ப்புகள் அதிகம்
  • பங்குச் சந்தையில் கடந்த சில வருடங்களாக செய்திருக்கும் மாற்றங்களால் (T+2 சுழலும் தீர்வு முறை - rolling settlement, மின் பங்கு பத்திரக் கணக்குகள்) சந்தையில் சாதாரண மக்கள் கூட தங்கள் முதலீடுகளை அதிகரித்திருக்கிறார்கள். நம்பிக்கைக்குரிய, ஆரோக்கியமான பங்குச்சந்தை பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும்

பொருளாதாரம் ஆரோக்கியமான வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், மேலும் அதிக வளர்ச்சியை அடையவும் செய்ய வேண்டிய முக்கியமான பணிகள் என்று அறிக்கை கூறுபவை:


விவசாயம் மற்றும் பண்ணைத் தொழில் சீரமைப்பு

  • உணவுப் பதப்படுத்தும் வசதிகள் அமைத்தல், இந்தப் பொருளாதாரப் பிரிவின் தேவைகளுக்கேற்ற போக்குவரத்து வசதிகள் அமைத்தல், உற்பத்தியாகும் இடங்களில் இருந்து விற்பனையாகும் இடம் வரை விளைபொருட்கள் அழுகாமல் காக்கும் வகையில் குளிர்பதன வசதிகள் உள்ளக் கொள்கலன் சங்கிலிகள் அமைத்தல்
  • விவசாயப் பிரிவின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தற்போதைய மான்யங்களைச் சீரமைத்தல், மின் வசதிகளைப் பெருக்குதல்
  • பருவமழையை பெரிதும் சார்ந்திருக்கும் இந்தப் பொருளாதாரப் பிரிவில், அதிக நிலங்களை விளைநிலங்களாக்குதல் மற்றும் நீர் உபயோக நிர்வாகத்தை மேம்படுத்துவதன் மூலம் பருவமழையைச் சார்ந்திருக்கும் நிலையைக் கட்டுப்படுத்துதல்

தொழில் துறைச் சீரமைப்பு

  • முதலீட்டாளர்கள் தொழில்களை அமைக்கவோ அல்லது அவற்றிலிருந்து விலகவோ உள்ள தடைகளைக் (தொழில் அமைக்க அரசின் பல துறைகளில் ஒப்புதல் பெறவேண்டிய நிலை, தொழிலாளர்களுக்குப் பெரிதும் சாதகமான இந்தியத் தொழிலாளர் சட்டங்கள்) குறைத்து முதலீடுகள் அதிகரிக்க வகை செய்தல்
  • சிறு தொழில் ஒதுக்கீடுகள், சில துறைகளில், முதலீடுகளுக்கு முட்டுக் கட்டையாக அமைந்துள்ளன. உதாரணம்: பின்னப் படும் துணிகள் துறை (knitwear). பொதுவாகத் துணிகள் வர்த்தகத்தில் உலக அளவில் கட்டுப் பாடுகள் (quota system) தளர்த்தப் பட்டுள்ள நிலையில், இத்துறை ஓங்கி வளரத் தேவையான சீரமைப்புகளைச் செய்தல்

நாட்டில் நிதி நிர்வாகத்தைச் சீரமைத்தல்

  • மதிப்புக் கூட்டு வரியை (VAT) சீராக அமல் படுத்துவதன் மூலம், தேவையற்ற வரிகளைக் குறைத்து, இந்திய மாநில அளவிலான சந்தைகளை ஒருங்கிணைக்க வழி செய்தல்
  • இறக்குமதி வரிகளை ஆசியான் (ASEAN) நாடுகள் விதித்துள்ள அளவிற்குக் குறைத்தல்
  • விவசாயிகளுக்கு நியாயமான வட்டிவிகிதத்தில் நுண்கடன்கள் கிடைக்க வழி செய்தல்
  • வங்கிகள் வராக்கடன்களைக் குறைத்துக்கொள்ளும் திறன் வளர்த்தல், மற்றும் கடன்களை வழங்கும் போது, கடன் பெறுபவர் திரும்பச் செலுத்தக் கூடியவரா என்று மதிப்பீடு செய்யும் திறன் வளர்த்தல்
  • தொழில்கள் அமைய நிதியுதவி செய்யும் வங்கிகள், லாபம் ஈட்டக்கூடிய தொழில்களை இனம் கண்டு, அவற்றிற்கு முதன்மை அளிக்கும் திறன் வளர்த்தல்
  • பங்குச் சந்தையில் ஏறபடுத்திய (மேலே கூறிய) சீரமைப்புக்களைக் கடன் பத்திரச் (debt market) சந்தைக்கும் அளித்தல்
  • ஓய்வூதிய நிதிகளும், ப்ராவிடெண்ட் நிதிகளும், பங்குச் சந்தையில் விவேகமான முறையில் முதலீடு செய்ய வழி வகுத்தல்

நாட்டின் ஆதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்

  • இத்துறையில் தனியார் முதலீடுகளை அனுமதித்தல், முதலீடு செய்வதில் தனியாருக்கு இருக்கும் தடைகளையும் தயக்கங்களையும் விலக்க வழி செய்தல், மற்றும் தனியார் முதலீடுகள் திறம்பட உதவாது என்று தெரியும் துறைகளில் அரசு முதலீட்டை அதிகரித்தல்
  • சாலைகள் துறையில் நிர்வாகத்தை மேம்படுத்தவும், சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கவும் வழிசெய்யும் திசையில் சிந்தனைமையத்தைத் திருப்புதல்
  • நாட்டின் சக்தி ஆதாரங்களின் பாதுகாப்பைப் பெருக்குதல்
  • இந்தியத் துறைமுகங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியை வளர்த்தல்
  • நமது விமான நிலையங்களின் வளர்ச்சியில் வேகம் காட்டுதல்

நாட்டில் அந்நிய முதலீடுகள் அதிகரிக்க வழி செய்தல்

  • அந்நிய முதலீடுகளால் நாட்டிற்குச் சிறந்த தொழில் நுட்பம், ஏற்றுமதித் திறன், மனிதவள மேம்பாடு, வியாபாரத் துணிவுள்ள நிறுவனங்கள், ஆரோக்கியமான போட்டியால் மக்களுக்கு தரம் மிக்க சரக்குகள் கிடைக்கும் நிலை, ஆகியவை வளரும் நிலையைத் தோற்றுவித்தல்

பொருளாதார வளர்ச்சி மேம்பட்டால் ஏழ்மை குறையும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஆகவே அரசு, வேலைக்கு உத்தரவாதமளிக்கும் சட்டம் முதலிய ஏழ்மையை ஒழிக்கும் முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது

No comments:

Blog Archive