Saturday, November 27, 2004

கிராமங்களில் வேலைக்கு உத்தரவாதம்

கணினி மென்பொருள் செய்யும் எனக்குத் தெரிந்த EGA (Extended Graphics Adaptor) ஒரு வழக்கொழிந்து போன கணினி பாகம். ஆனால், இன்றைய இந்திய அரசு EGA என்ற சுருக்கத்திற்கு ஒரு வரவேற்கத தக்க புதிய வடிவம் ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளது. அதுதான் இந்திய கிராமங்களில் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் (Employment Guarantee Act). இது இன்றைய மத்திய அரசின் தேர்தல் வாக்குகளின் பயனாய் உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது.

இச்சட்டத்தின் முன்வரைவு தயாரிக்கப் பட்டு இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய முன்வரைவின் படி, ஒரு குடும்பத்தில் கடினமான உடல் உழைப்புக்கு விழையும் ஒரு பெரியவருக்கு ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் 100 நாட்கள் தினக்கூலிக்கு வேலை, அப்படி அரசால் வேலை அளிக்க முடியாத போது இழப்பீட்டுத் தொகை, பெண்களுக்கு வேலை வாய்ப்புக்களில் ஒதுக்கீடு, உறைவிடத்தில் இருந்து 5 கிமீ தொலைவுக்குள் வேலை வாய்ப்பு என்ற அம்சங்களை EGA கொண்டிருக்கிறது.

மண்வளம் பெருக்குதல், காடுகள் வளர்த்தல், அடிப்படை ஆதாரங்களைப் பெருக்குதல் போன்ற நோக்கங்களுக்காகத் திட்டங்கள் தோற்றுவிக்கப் பட்டு வேலை வாய்ப்புகள் அரசின் இயந்திரத்தால் நேரடியாக அளிக்கப்பட வேண்டும், ஒப்பந்தப் பணியாளர்கள் (contractors) பணியமர்த்தப் படக் கூடாது என்பவையும், முன்வரைவு சொல்லும் செய்திகள்.

இது அமலுக்கு வந்தால், கிராமங்களில் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் ஒரு வேலை அல்லது இழப்பீடு என்பதை, நீதிமன்றங்களை மக்கள் அணுகி உரிமைகளைப் பெறும் அளவிற்கு வகை செய்யும்.

இதன் செயல்பாட்டிற்கு மாற்றங்களைப் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் மட்டுமே கொண்டுவர முடியும். வேலைவாய்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவோர், இதன் அம்சங்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மாற்ற முடியாது.

கிராமங்களில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் போது, கிராம மக்கள் வேலை தேடி நகரங்களை நோக்கிக் கூட்டமாகப் படையெடுப்பதும், அதனால் கிராமங்கள் நலிவடைவதும் குறையும். கிராமப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் போது அவர்கள் வாழ்க்கைத்தரமும் பன்மடங்கு உயரப் பெரிதும் வாய்ப்புள்ளது.

கூட்டுக்குடும்பங்கள் நிறைந்த நம் நாட்டில், 'குடும்பம்' என்ற சொல்லிற்குத் மிகத் தெளிவான விளக்கம் தேவை. அதே போல், 'கடின உடல் உழைப்பு' என்பதும் தெளிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

மத்திய அரசின் நிதித்துறை, இதை அமல் செய்யத் தேவையான பணபலம் நம்மிடம் இல்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளது. ஒரு புறம் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள், மற்றொரு புறம் உணவுப்பொருட்கள் தேங்கிக் கிடக்கும் கிடங்குகள் உள்ள நம் நாட்டில், அரசு தீர யோசித்து இச்சட்டம் அமலுக்கு வர வழி செய்ய வேண்டும்.

இந்தியா அதன் கிராமங்களில்தான் வாழ்கிறது. கிராமங்களில் வாழ்க்கைத்தரம் உயர்ந்தால், இந்தியா வளரும்.

2 comments:

Kasi Arumugam said...

இது நல்ல நோக்கத்தில் அமைந்துள்ளதாகத் தெரிகிறது. மிகவும் தேவையான சட்டமே. ஆனாலும் நம் அரசு எந்திரங்களின் செயல்திறன், பெருச்சாளிகளின் ஊழல், ஏழைக்கிரங்காத நீதிபரிபாலனம், இதையெல்லாம் வைத்துப்பார்த்தால் அவநம்பிக்கையே மிஞ்சுகிறது.

ந. உதயகுமார் said...

வரும் பராளுமன்றக் கூட்டத் தொடரில், வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் விவாதிக்கப் பட உள்ளது. வரைவுச் சட்டம் இணையத்தில் இங்கே காண்க.

இந்தச் சட்டத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்கள்/விமரிசனங்கள் எழுந்துள்ளன.

1. இது ஏழை மக்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டு வங்கியை பலப் படுத்தும் வழி. பணமின்மை என்பது மட்டுமே ஏழ்மையைக் குறிக்காது. பணத்தால் மட்டுமே ஏழ்மையை ஒழித்து விட முடியாது என்று சிலர் கூறியுள்ளனர்.

பணம் கொடுப்பதால் மட்டுமே ஏழ்மைக் கொடுமைகள் நாட்டில் அழிந்து விடாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் மஹாராஷ்டிராவில், இத்தகைய ஒரு திட்டம் செயல் படுத்தப் பட்ட போது, எழைகளுக்கு சிரமமான காலங்களில் பணம் கிடைத்தது மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தற்காலிக வேலை கொடுத்து வந்தோரிடம், அதிக ஊதியத்தைப் பேரம் பேசக் கூடிய திறனும் கிடைத்தது. கூட்டம் கூட்டமாக நகரங்களுக்குப் படையெடுத்து வாழ்க்கைத்தரத்தைப் பெரும்பான்மையானோர் மேலும் தாழ்த்திக் கொண்டது குறைந்தது. இத்திட்டம் திறமையாகச் செயல் படுத்தப் பட்ட பகுதிகளில் அடிப்படை ஆதார வசதிகள் அதிகரித்ததனால், விவசாய மற்றும் பண்ணை உற்பத்தித் திறன் அதிகரித்து மக்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகரித்தது.

2. இது முதல் நாள் ஒரு இடத்தில் மண்வெட்டி இரண்டாம் இடத்தில் இருக்கும் குழியை அடைத்து பிறகு மறுநாள் இரண்டாம் குழியை வெட்டி முதல் குழியை அடைத்து, இப்படி மாற்றி மாற்றிச் செய்வதால் வீண் விரயம் மட்டுமே மிஞ்ச்ப் போகும் ஒரு கண் துடைப்பு வேலை என்பது ஒரு விமரிசனம்.

புதிய திட்டத்தின் திட்டமிடல் மற்றும் செயலாக்க அதிகாரங்கள், மாவட்ட ஆணையரிடமும், பஞ்சாயத்துத் தலைவர்களிடம் இருக்கப் போவதால், அவர்கள் தம் பகுதிகளின் அடிப்படை ஆதாரத் தேவைகளை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். மக்கள் சக்தியையும், அரசுப் பணத்தையும் விரயமாக்க மாட்டார்கள் என்று நம்புவோம்.

3. பணம் ஏழை மக்களைச் சென்றடையப் போவதில்லை. இடைத்தரகர்களும், சமுதாயத்தில் செல்வாக்குள்ளோரும் அடித்துச் சென்று விடப் போகிறார்கள் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

இதை வலுவாக மறுத்து விட முடியாது. ஆனால், எதிர் கட்சிகள், இத் திட்டதின் செயலாக்கத்தை கண்கொத்திப் பாம்பாகக் கண்காணிப்பது திண்ணம். மேலும், தகவல் பெறும் உரிமை வழங்கும் சட்டத்தை உபயோகித்து தன்னார்வச் சமுகத் தொண்டு நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும், தனியாரும், இச் சட்டத்தின் செயலாக்கத்தை, முன்னை விடச் சிறப்பாகக் கண்காணித்து மக்களுக்குத் தகவல் தெரிவிக்க முடியும்.

தொழில் நுட்பத்தினால், நாட்டில் தகவல்கள் பாயும் வேகமும், உண்மைத் தகவல்களை எளிதாக வேண்டிப் பெற வழிகளும் சற்றே அதிகரித்து விட்ட நிலையில், மக்களிடம் விழிப்புணர்வும் அதிகரித்திருப்பதாலும் மக்களை ஏமாற்றுவதும் சற்றுக் கடினமாகத்தான் இருக்கப்போகிறது.

4. இச் சட்டத்தை அமலாக்க வேண்டிய பொருளாதாரத்தை அரசு எப்படி ஈட்டப் போகிறது?

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 1 முதல் 1.6 விழுக்காடு பணம் இச்சட்டத்தை அமலாக்கத்தேவை என்று தற்போது கணிக்கப் பெற்றுள்ளது. இத்தொகை, 2003-2004 உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் (மூலம்: இந்திய வளர்ச்சி அறிக்கை) படி ரூ. 15000 கோடி முதல் ரூ. 25000 கோடி வரை ஆகும். அரசு ஏற்கெனவே வருடத்திற்கு ஏறக்குறைய ரூ 11000 கோடிக்கு மேல் செலவு செய்கிறது. இந்த அதிகப்படியான தேவை எங்கிருந்து பூர்த்தி செய்யப்படப் போகிறது என்பது இன்னும் விளங்கவில்லை.

Blog Archive