Saturday, November 20, 2004

யாசர் அரா·பாத்

பாலஸ்தீனத்தின் தேசத்தந்தை என்று அழைக்கப்படும் இந்த மனிதர், சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகள் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடியவர். பாலஸ்தீனிய மக்கள் பலரின் பேரன்பைப் பெற்றவர். அவர் இறந்த போது, பல பாலஸ்தீனக் குழந்தைகளும், பெண்களும், பெரியவர்களும், அவர் இழப்பிற்காக மெழுகுவர்த்தி ஏற்றி, மெளனமாகக் கண்ணீர் சிந்தி நின்ற காட்சியைக் கண்டோம். மிகவும் எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்டவர் என்று அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறக் கேட்டோம். 1994ம் வருடம் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். 1974ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உலகிற்கு சமாதானத்தின் சின்னமாக ஆலிவ் மரத்தின் கிளையை காண்பித்தவர்.

அதே நேரம், அவர் ஒரு கொரில்லா போர் முறைத் தலைவர். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பல பொது மக்கள் கையில் துப்பாக்கி இருந்ததும், அவற்றை வைத்து அவர்கள் கூட்டத்தில் சிலர் காயப்படுவதையும் பொருட்படுத்தாமல் துக்கத்தை வெளிப்படுத்த வானத்தை நோக்கி சுட்டதும், அமைதியும், சமாதானமும், அவர்கள் மனத்தில் இல்லாததைக் காட்டியது.

ம்யுனிச்சில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடந்த சமயம் பல இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதை நாம் மறப்பது கடினம். இத்தகைய சில பல செயல்கள் அவரைத் தீவிரவாததிற்குத் துணையிருப்பவராகச் சித்தரிக்கக் காரணமாயின.

அவர் விட்டுச் சென்ற பாலஸ்தீனியப் பொருளாதாரம் வலிமையற்றதாக இருப்பதையும், அங்கு லஞ்சம் வழக்கில் இருப்பது மற்றும் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இல்லாமல் இருப்பதையும் வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அவரது இறுதிச் சடங்கில், சுமார் நாற்பது நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டது, பாலஸ்தீனிய மக்களின் நியாயமான உரிமைகளுக்கு உலகின் ஆதரவு இருப்பதையே காட்டுகிறது.

No comments:

Blog Archive