Sunday, January 16, 2005

கிராம வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா

கிராம வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, முன்பு நாம் கண்ட முன்வரைவில் இரு முக்கியத் திருத்தங்களுடன் தற்போது அமைந்திருக்கிறது.

அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில், இந்தத் சட்டத்தினை முதலில் செயல்படுத்தி, அச் செயலாக்கத்தின் விளைவுகளைக் கண்டறிந்த பின்னரே, மற்ற மாவட்டங்களை அரசு கருத்தில் கொள்ளும் என்பது பரிந்துரைக்கப்பட்டுள்ள முதல் திருத்தம் என்று தெரிகிறது. இதனால் இச்சட்டத்தின் பயன்பாடு அனைத்து மாவட்டங்களுக்கும் கிடைக்காமல் போய்விடும் வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.

வேலைக்கான ஊதியம் அரசால் அவ்வப்போது வேலையின் தன்மைக்கேற்ப நிர்ணயம் செய்யப்படும் என்பது பரிந்துரைக்கப்பட்டுள்ள மற்றொரு திருத்தம். இது தற்போதைய குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தை மீறும் செயல் என்று கருத வாய்ப்பு எழுந்துள்ளது.

அரசுத்தரப்பில், இச்சட்டத்தால் அரசின் மீதுள்ள வழக்குச் சுமைகள் அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுதாக அறிகிறோம்.

சில ஆய்வாளர்கள், இது பத்தோடு பதினொன்றாய் மற்றைய இத்தகைய திட்டங்களைப் போல் ஆகிவிடாதிருக்க என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

1 comment:

ந. உதயகுமார் said...

வரும் பராளுமன்றக் கூட்டத் தொடரில், வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் விவாதிக்கப் பட உள்ளது. வரைவுச் சட்டம் இணையத்தில் தரப்பட்டுள்ளது (http://www.sacw.net/Labour/DraftNEGA_140804.html).

இந்தச் சட்டத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்கள்/விமரிசனங்கள் எழுந்துள்ளன.

1. இது ஏழை மக்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டு வங்கியை பலப் படுத்தும் வழி. பணமின்மை என்பது மட்டுமே ஏழ்மையைக் குறிக்காது. பணத்தால் மட்டுமே ஏழ்மையை ஒழித்து விட முடியாது என்று சிலர் கூறியுள்ளனர்.

பணம் கொடுப்பதால் மட்டுமே ஏழ்மைக் கொடுமைகள் நாட்டில் அழிந்து விடாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் மஹாராஷ்டிராவில், இத்தகைய ஒரு திட்டம் செயல் படுத்தப் பட்ட போது, எழைகளுக்கு சிரமமான காலங்களில் பணம் கிடைத்தது மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தற்காலிக வேலை கொடுத்து வந்தோரிடம், அதிக ஊதியத்தைப் பேரம் பேசக் கூடிய திறனும் கிடைத்தது. கூட்டம் கூட்டமாக நகரங்களுக்குப் படையெடுத்து வாழ்க்கைத்தரத்தைப் பெரும்பான்மையானோர் மேலும் தாழ்த்திக் கொண்டது குறைந்தது. இத்திட்டம் திறமையாகச் செயல் படுத்தப் பட்ட பகுதிகளில் அடிப்படை ஆதார வசதிகள் அதிகரித்ததனால், விவசாய மற்றும் பண்ணை உற்பத்தித் திறன் அதிகரித்து மக்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகரித்தது.

2. இது முதல் நாள் ஒரு இடத்தில் மண்வெட்டி இரண்டாம் இடத்தில் இருக்கும் குழியை அடைத்து பிறகு மறுநாள் இரண்டாம் குழியை வெட்டி முதல் குழியை அடைத்து, இப்படி மாற்றி மாற்றிச் செய்வதால் வீண் விரயம் மட்டுமே மிஞ்ச்ப் போகும் ஒரு கண் துடைப்பு வேலை என்பது ஒரு விமரிசனம்.

புதிய திட்டத்தின் திட்டமிடல் மற்றும் செயலாக்க அதிகாரங்கள், மாவட்ட ஆணையரிடமும், பஞ்சாயத்துத் தலைவர்களிடம் இருக்கப் போவதால், அவர்கள் தம் பகுதிகளின் அடிப்படை ஆதாரத் தேவைகளை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். மக்கள் சக்தியையும், அரசுப் பணத்தையும் விரயமாக்க மாட்டார்கள் என்று நம்புவோம்.

3. பணம் ஏழை மக்களைச் சென்றடையப் போவதில்லை. இடைத்தரகர்களும், சமுதாயத்தில் செல்வாக்குள்ளோரும் அடித்துச் சென்று விடப் போகிறார்கள் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

இதை வலுவாக மறுத்து விட முடியாது. ஆனால், எதிர் கட்சிகள், இத் திட்டதின் செயலாக்கத்தை கண்கொத்திப் பாம்பாகக் கண்காணிப்பது திண்ணம். மேலும், தகவல் பெறும் உரிமை வழங்கும் சட்டத்தை உபயோகித்து தன்னார்வச் சமுகத் தொண்டு நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும், தனியாரும், இச் சட்டத்தின் செயலாக்கத்தை, முன்னை விடச் சிறப்பாகக் கண்காணித்து மக்களுக்குத் தகவல் தெரிவிக்க முடியும்.

தொழில் நுட்பத்தினால், நாட்டில் தகவல்கள் பாயும் வேகமும், உண்மைத் தகவல்களை எளிதாக வேண்டிப் பெற வழிகளும் சற்றே அதிகரித்து விட்ட நிலையில், மக்களிடம் விழிப்புணர்வும் அதிகரித்திருப்பதாலும் மக்களை ஏமாற்றுவதும் சற்றுக் கடினமாகத்தான் இருக்கப்போகிறது.

4. இச் சட்டத்தை அமலாக்க வேண்டிய பொருளாதாரத்தை அரசு எப்படி ஈட்டப் போகிறது?

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 1 முதல் 1.6 விழுக்காடு பணம் இச்சட்டத்தை அமலாக்கத்தேவை என்று தற்போது கணிக்கப் பெற்றுள்ளது. இத்தொகை, 2003-2004 உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் (மூலம்: இந்திய வளர்ச்சி அறிக்கை) படி ரூ. 15000 கோடி முதல் ரூ. 25000 கோடி வரை ஆகும். அரசு ஏற்கெனவே வருடத்திற்கு ஏறக்குறைய ரூ 11000 கோடிக்கு மேல் செலவு செய்கிறது. இந்த அதிகப்படியான தேவை எங்கிருந்து பூர்த்தி செய்யப்படப் போகிறது என்பது இன்னும் விளங்கவில்லை.

Blog Archive