பி. எஸ். என். எல் இப்போது ஒரு ரூபாய்க்கு இணைப்பு தருகிறார்களாம். பத்திரிக்கைகளில் பெரிய எழுத்தில் செய்தி போட்டு மாய்ந்திருக்கிறார்கள்.
சந்தையில் (நகரங்களில்) இப்போது தனியார் துறை தொலைபேசிக் கம்பெனிகள் உள்ளன. எனக்கு இரண்டாம் இணைப்பு தேவையான போது தொலைபேசியில் அவர்களை அழைத்துப் பேசினேன். தொலைபேசியை கீழே வைக்குமுன் வாசலில் கம்பெனி ஆள் இருந்தார். (சிறிது மிகைப்படுத்தியிருக்கிறேன் என்றாலும், தனியார் துறை காரியத்தில் மிக வேகம் காட்டுவது உண்மை). 24 மணி நேரத்தில் இணைப்புக் கொடுக்கக் காத்திருந்தார்கள்.
ஒரு காலத்தில் பி. எஸ். என். எல் இணைப்புக்கு விண்ணப்பம் வாங்குவதே பலருக்கு ஒரு மலையைப் பிரட்டும் வேலை. நல்ல நாள் பார்த்து, ஆபீஸில் லீவு கேட்டு, பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பதாய் வேண்டி ஆரம்பிக்க வேண்டிய விஷயம். அத்துடன் மறக்காமல், சுயமரியாதையையும், ego வையும், வீட்டில் விட்டுச் செல்ல வேண்டும். Gazetted officer ஐத் தேடி அலைந்து, கையெழுத்தெல்லாம் வாங்கி, ஒரு வழியாக சாமி (பி. எஸ். என். எல்) வரம் கொடுத்த பின்னும், பூசாரியைக் (line man) கவனிக்க வேண்டும். "நான் மந்திரி வீட்டு இணைப்பில் காரியமாக இருக்கிறேன். உனக்கு என்ன செத்துப் போகிறது" என்று கேட்பார். நுகர்வோரிடம் (consumer) பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே எவரிடமும் தெரியாது. ஏதோ அவர்கள் உங்களுக்காகக் காரியம் செய்வது, நீங்கள் செய்த பெரிய பாக்கியம் என்ற எண்ணப்பாடு மிக வெளிப்படையாகத் தெரியும்.
தனியாருக்கு நுகர்வோர் திருப்தியைப் (customer satisfaction) பற்றிச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. எனக்கு முதல் bill வந்த போது, கூப்பிட்டார்கள். "ஏன் free call ஐ விரயம் செய்திருக்கிறாய்" என்று, அந்த விஷயத்தை என் கருத்துக்குக் கொண்டு வந்து, செல்லமாய்க் கடிந்து கொண்டார்கள்! இணைப்பில் பிரச்சனை வந்தால் தலை போகிற விஷயமாய்க் கருதி (வேலை செய்யாத தொலைபேசி நிறுவனத்தின் வரவுக்குக் கேடு) வந்து சரி செய்கிறார்கள்.
இது போல் போட்டி இருக்கும் போது, பி. எஸ். என். எல் ஒரு ரூபாய் தொலைபேசி இணைப்பு ஒரு பெரிய விஷயமே அல்ல. மற்ற விஷயங்கள் மாறுகிறதா என்று பார்க்க வேண்டும்.
1 comment:
போப்பா எங்க வீட்டுக்கு (திருச்சி க்கு பக்கத்துல) தொலைபேசி இனைப்புக்கு 1000 ரூபாய் கட்டி மாசம் அகுது 3. இன்னும் இனைப்பும் வரல.கேட்டா மேல இருந்து ஆர்டர் வரலனு கடுப்பேத்துறான். தனியார் தனியார் தான்னு சொல்ல வச்சுட்டாங்க.
Post a Comment