Saturday, October 23, 2004

ஆயுத பூஜை

ஆயுத பூஜை சமயம், சென்னையில் போன வருடம், வாழைக்கன்று கட்டி மாலையிடாத வண்டிகளை விரல் விட்டு எண்ணி விட முடிந்தது. நேற்றுப் பார்த்த போது, நிலைமை தலைகீழாக மாறியிருந்தது. மழை இல்லாததால், வாழைக்கன்றுகள் விளைச்சல் குறைவு போலும்.

ஒரு படத்தில் நடிகர் விவேக், லாரியின் முன்னால் தொங்கும் எலுமிச்சைப் பழத்தைப் பார்த்து, ஏனென்று ட்ரைவரைக் கேட்க, ட்ரைவர் "வண்டி நல்லா ஒடணும்ணு கட்டியிருக்கு சார்" என்று சொல்வார். அதற்கு விவேக், "வண்டியிலிருக்கிற 750 spare part ல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சம் பழத்தில ஓடப் போகுது?" என்று கேட்பார்.

வண்டியை ஒழுங்காகப் பராமரிக்காதோர் மற்றும் விதிகளை மதிக்காதோர் பலரும், ஆயுத பூஜையன்று, வண்டியைத் துடைத்து, வாழைக்கன்று கட்டி, மாலை போட்டு, பூஜை செய்து காட்டிக் கொள்வதன் மூலம், தன்னுடன் சேர்த்து ஊரையும் ஏமாற்றுகிறார்கள் என்றுதான் கொள்ளவேண்டும்.

நடிகர் விஜய் நேற்று ரேடியோ மிர்ச்சியில் திரும்பத் திரும்ப பின்வருமாறு படித்துப் படித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்: "பூஜை செய்த பிறகு, பூசணிக்காயை நடுத்தெருவில் உடைக்காதே. உன் நன்மைக்காக அடுத்தவன் அடிபட வழி வகுக்காதே". இதையெல்லாம் நம்மவர்களுக்குச் சொல்லித் தெரிய வைக்க வேண்டியிருக்கிறது.

விஜய் effect ஆ அல்லது Onyx கைங்கரியமா என்று தெரியவில்லை. நேற்று தெரு நடுவில் உடைந்து கிடந்த பூசணிக்காய்கள் குறைவுதான்.

No comments:

Blog Archive