கடந்த மூன்று தினங்களாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வெளியில் சென்று விளையாட முடியவில்லை என்று குழந்தைகளுக்குக் கவலை.
பள்ளி சென்று வரும் குழந்தைக்கு எலி 'ஒன்று'க்குப் போன நீரை மிதித்து லெப்டோஸ்பைரோஸிஸ் வந்து விடக் கூடாதே என்று அன்னைக்குக் கவலை.
அலுவலகம் சென்ற கணவர் தண்ணீருக்குள் வண்டியை ஓட்டி பள்ளத்துக்குள் விழுந்து விடாமல் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்று மனவிக்குக் கவலை.
தெருவில் போகும் வாகனம் தெருவில் தேங்கி நிற்கும் சேற்றை மேலே இறைக்காமல் தப்பிக்க வேண்டுமே என்று பாதசாரிக்குக் கவலை. வழுக்கி விழாமல் நடக்க வேண்டும் என்று தாத்தாவிற்குக் கவலை.
ஆக்ஸில் உடையாமல் குண்டு குழிகளில் தப்பித்து ஒட்ட வேண்டுமே என்று மாநகரப் பேருந்து ஓட்டுனருக்கும் தண்ணீர் லாரி ஓட்டுனருக்கும் கவலை.
தெருவில் உள்ள பழைய மரம் உடைந்து கார் மேல் விழாமல் தப்பிக்க வேண்டுமே என்று கார் சொந்தக்காரருக்குக் கவலை.
மழை பெய்து ஏரி நிரம்பி விட்டால், தொழில் என்னவாகும் என்று தண்ணீர் லாரி சொந்தக்காரருக்குக் கவலை.
இத்தனை கவலைகளுக்கும் இடையில் அனைவர் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி.
என்ன ஒரே ஒரு குறை. லீவு கிடைத்தால் ஜன்னல் பக்கமாகப் படுத்துக் கொண்டு, சூடாகக் கடலை கொறித்துக்கொண்டே கதைப் புத்தகம் படிக்கலாம்.
இன்னும் வேண்டும் மழை !!!
No comments:
Post a Comment