Friday, March 06, 2009

உலகம் உருண்டை (The World is Curved) புத்தக ஆய்வு


டேவிட் ஸ்மிக் என்ற புகழ் மிக்க பொருளாதார வல்லுனர் 'உலகம் உருண்டை' புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்த ஆங்கிலப் புத்தகம் தாமஸ் ஃப்ரீட்மன் எழுதிய 'உலகம் தட்டை' (The World is Flat) என்ற புத்தகத்தைத் தொடர்ந்து எழுதப் பட்டிருக்கிறது. அதைத் தழுவி அல்ல. 'உலகம் தட்டை' உலகமயமாக்கல் பற்றியும் இணையத் தொழில் நுட்பம் தூரம் மற்றும் கலாச்சார வித்தியாசங்கள் ஏற்படுத்தும் தளைகளை உடைத்தெறிந்து செய்திருக்கும் அதிசயம் பற்றி பேசியது. 

டேவிட் ஸ்மிக் தன் புத்தகத்தில் உலகத்தில் நிதி (பணம்) ஆதாரங்கள் இணையத்தால் இணைக்கப் பட்டு ஒரு மாபெரும் கடலைப் போல் இன்று மாறியிருப்பதை எடுத்துக் காட்டுகிறார். இந்த ஆபத்தான மாக்கடலில்தான் இன்றைய அரசாங்கங்கள் தங்கள் பொருளாதாரங்களை வழி நடத்துகின்றன. 
நிதி ஓடைகள் எங்கிருந்து எங்கு பாய்கின்றன, எதனால் அப்படிப் பாய்கின்றன, எப்போது அவற்றின் திசைகள் திரும்புகின்றன என்று தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் அமைப்புகள் இந்த நிதி மாக்கடலில் இன்னமும் ஏற்படுத்தப் படவில்லை. 

இந்த சிக்கல்களால் பெரும்பாலான நேரம் குருட்டுத்தனமாகவே பல அரசுகள் கொள்கை அமைத்துச் செயல் படுகின்றன. அதே போல ஒவ்வொரு நாட்டுக்கும் அவர்களின் மக்கட் தொகை விகிதங்களைப் பொறுத்து பொருளாதார வளர்ச்சித் தேவை அமைகிறது. உதாரணமாக சீனா தன் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால் வருடத்திற்கு 10 சதவிகிதம் என்ற அளவில் அவர்கள் பொருளாதாரத்தை இன்னமும் பல வருடங்களுக்கு அவர்கள் வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதே நேரத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் பொருளாதாரத்திற்கு துரித கதியில் வளர்ச்சி தேவையில்லை என்று முடிவு செய்து விட்டார்கள் போலத் தெரிகிறது. 

மேற்கூறிய காரணங்கள் ஏற்படுத்தும் வெளிச்சமின்மையால் இன்றைய நிதிச் சந்தைகள் காற்றுப் போன போக்கில் அலைக்கழிக்கப் படுகின்றன என்று உண்மையைச் சொல்லி பயமுறுத்தியிருக்கிறார் ஆசிரியர். மாலுமியால் சரியான பாதையில் வழிநடத்தப் படாத கப்பல்கள் சூழலில் சிக்கி அழிந்து போவது போன்ற ஆபத்துகள் நிதிக் கடலில் பயணிக்கும் அரசாங்கங்ளைப் பற்றியுள்ளதை இவர் தெளிவு படுத்துகிறார்.

பொருளாதாரத்தில் ஈடுபாடும், யானைப் பொறுமையும் இருந்தால் மட்டுமே இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியும். பல கலைச் சொற்களையும் பொருளாதாரக் கோட்பாடுகளையும் அள்ளித் தெளித்து எழுதப் பட்டிருக்கும் புத்தகம் இது. உதாரணமாக அரசாங்கம் அல்லது மத்திய வங்கிகள் வட்டித்தொகையை மாற்றுவதால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் படிப்பவருக்குப் புரியும் என்ற நிலைப்பாட்டுடன் கருத்துகளை அல்லது முடிவுகளை அள்ளி வீசியிருக்கிறார் ஆசிரியர். என்னைப் போன்ற பாமரனுக்குப் புரிவது கடினமாகத்தான் இருந்தது. அதே சமயத்தில் பொறுமைக்கும், முயற்சிக்கும் பரிசு கண்டிப்பாகக் கிடைக்கிறது. 

உலக நிதி மாக்கடலில் உள்ள ஆபத்துகள் மற்றும் சூழல்கள் சிலவற்றை நான் இந்தப் புத்தகம் மூலம் புரிந்து கொண்டேன். உதாரணத்திற்குச் சுவாரசியமான சில கீழே:

  • இன்றைய 'சப் ப்ரைம்' பிரச்சினை கடலில் மூழ்கியிருக்கும் ஒரு மாபெரும் பனி மலையின் கண்ணுக்குத் தெரியும் உச்சியைப் போன்றது
  • முதலீட்டாளர்களில் 'பிரம்ம குரு' என்று உலகால் புகழ்ந்து போற்றப் படும் 'வாரன் பஃப்பெட்' நம் ஆசிரியர் கண்ணோட்டத்தில் தேவையில்லாமல் பீதியைக் கிளப்பி விடும் ஆசாமி (!?!)
  • அமெரிக்காவிற்கு 2 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு வெளிக் கடன் இருந்த போதிலும் அவர்களின் 57 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஒப்பிட்டால் இது கொசு. ஆகவே வெளிக் கடனால் அமெரிக்கா மூழ்கிப் போகப் போவதில்லை
  • அமெரிக்க டாலர் இன்னமும் உலகின் சேமிப்பு நாணயமாக இருக்கிறது. அதனாலேயே டாலரின் தேவை எப்போதும் இருப்பதாலும், சீனா போன்ற நாடுகள் தங்கள் சேமிப்பின் மதிப்பை சடுதியில் இழக்க அனுமதிக்க மாட்டார்கள் என்பதாலும் டாலர் அவ்வளவு சீக்கிரமாகச் சரியாது
  • அமெரிக்கா எண்ணை உற்பத்தி நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து அவர்கள் எண்ணை வாணிபத்தை டாலரில் நடத்த வேண்டும் என்று என்றோ போட்டுக் கொண்ட ஒப்பந்தம் இன்றும் உலக நாடுகள் (குறிப்பாக வளரும் நாடுகள்) எண்ணை வாங்க டாலருக்கு அலையும் நிலையை உருவாக்கி இருப்பதால் டாலருக்கு எப்போதும் தேவை அதிகமாகவே இருக்கிறது. தேவையின் அளவும் ஒரு நாணயத்தின் மேல் மக்கள் வைக்கும் நம்பிக்கையுமே நாணயத்தின் மதிப்பை நிர்ணயிக்கிறது. இரண்டாம் விஷயம் (நம்பிக்கை) குறைந்து கொண்டே வந்தாலும், அமெரிக்கர்க சூத்திரதாரிகள் தந்திரமாக டாலர் நாணயத் தேவையை அதிகரிக்கும் சூட்சுமங்களைச் ஏற்கெனவே செய்து வைத்திருக்கிறார்கள்.
  • ஈரான் போன்ற நாடுகள் எண்ணை வியாபாரம் செய்ய டாலர் கேட்கும் போக்கிலிருந்து மாற ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் போக்கு அமெரிக்காவிற்கு கவலைக்கிடம்
  • உலகின் ஒரே உற்பத்திக் கூடமாகப் போவதாகக் கனவுடன் இன்று சரக்குகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் சீனா தன் குமிழி உடைந்தால் இருப்பில் உள்ள சரக்குச் சேமிப்பை 'கிடைத்ததை அள்ளு' என்று காசாக்க முயற்சிக்கும் போது பல பொருளாதாரங்கள் உடைய வாய்ப்பிருக்கிறது
  • சீனாவில் இளைஞர்கள் இருக்கும் அளவிற்கு ஏகக் குறைந்த எண்ணிக்கையில் இளைஞிகள் உள்ளனர். அதே போல் இளைஞர்கள் அனைவருக்கும் கொடுக்க சீனாவில் வேலை இல்லை. வயசுப் பையன்கள் பெண்ணுக்கு அடித்துக் கொள்ளாமல் இருக்கவும் அவர்கள் வேலையில்லாத பிரச்சினையால் கலவரத்தில் இறங்காமல் இருக்கவுமே சீனா ஒரு மாபெரும் ராணுவத்தை நடத்தி வருகிறது. இந்த ராணுவம், அவர்களின் வளமான சில மாநகரங்களுக்கும் வளமில்லாத ஏகப்பட்ட கிராமப் புறங்களுக்கும் இடையே பெரும் செயற்கை அரணாகச் செயல் படுத்தப் படுகிறது.
  • கொடுத்த கடன் வராக் கடனாகப் போனால் இருக்கும் மொத்தக் கடன்களில் வராக் கடன் விகிதத்தைக் உடனே குறைக்க வேண்டுமல்லவா? இதற்கு என்ன வழி? இன்னமும் கொஞ்சம் கடனை உடனைக் கொடுத்து மொத்தக் கடன்களின் அளவை அதிகரித்து விட்டால் வராக் கடன் விகிதம் குறைந்து விடப் போகிறது! சிம்பிள்! இது சீனாவின் 'தனி' வழி!!
  • ஜப்பானிய அரசு சில வருடங்களுக்கு முன் வைப்புகளுக்கான வட்டியை 0 சதவிகிதமாகக் குறைத்தது. அப்போது ஜப்பானிய இல்லத்தரசிகள் அரிசிப் பானைக்குள் பணம் வைப்பதும், ஜப்பானிய வங்கியில் பணம் வைப்பது ஒன்றுதான் என்று புரிந்து போய் நேரடியாக வெளிநாடுகளில் இணையம் மூலம் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். அவர்கள் இன்று கட்டுப் படுத்தும் உலக நிதியின் அளவு சுமார் 11 ட்ரில்லியன் டாலர். தினசரி ஜப்பானிய நிதிச் சந்தைகள் திறந்திருக்கும் நேரத்தில் உலக நிதிப் பரிவர்த்தனைகளில் 20 விழுக்காடு ஜப்பானிய வீடுகளிலிருந்து தொடங்குகின்றன. இவற்றில் பெரும்பாலோர் இல்லத்தரசிகள். மீன் பொரியல் செய்து கொண்டே ஜப்பானியப் பெண்மணி சந்தைகளைக் கட்டுப் படுத்துகிறாள். முக்கால் வாசி நேரம் லட்சக் கணக்கில்  தனி நபர் முடிவுகள் மிகுந்த இந்த செயலமைப்பை எந்த ஒரு மத்திய வங்கியோ அல்லது அரசாங்க அமைப்போ இன்று கட்டுப் படுத்த இயலாது. இவர்கள் கட்டுப் படுத்தும் நிதி அளவோ சக்தி மிகுந்தது. இவர்களில் யார் எப்போது எந்தப் பக்கம் பாய்வார்கள் என்று எந்தக் கொம்பனாலும் கட்டியம் சொல்ல இயலாது

ஆர்வம் மிகுந்தவர்கள் மற்றவை புத்தகத்தில் காண்க.

1 comment:

சதுக்க பூதம் said...

According to US,
"Dollar is our money
Your Problem"
They will print as much as they can.
It is up to other country to msintsin the vslue of dollar

Blog Archive