முதலில் கண்ணை மூடிக் கொண்டு தெருவில் நடப்பவனையெல்லாம் கூப்பிட்டுக் கடன் கொடுத்தார்கள். அவனுக்குக் கடனை திருப்பித் தர வக்கிருக்கிறதா என்று பார்க்கும் பொறுப்பிலிருந்து தெரிந்தே தவறினார்கள்.
பிறகு வரும் கடனையும் வராக் கடனையும் ஒன்றாய் கலந்து கூறு போட்டு கூவிக் கூவி விற்றார்கள். அதன் மூலம் தாங்கள் வலியப் போய் உண்டாக்கிய ஆபத்தையும் கூறு போட்டு வெளியேற்றினார்கள்.
கடன்கள் மூழ்கிப் போன பின் (தன்னிச்சையாக கட்டுப்பாடு ஏதுமில்லாமல் செயல் பட்ட) தனியார் வங்கிகள் அரசிடம் போய் குய்யோ முறையோ என்று அடித்துக் கொண்டார்கள். அமெரிக்கா விழித்துக் கொண்டு வரிப் பணத்திலிருந்து நிவாரண நிதி கொடுக்க வேண்டும் என்று முதலாளித்துவ சிந்தனைகளை மூலையில் வைத்து விட்டு வெட்கமில்லாமல் கெஞ்சினார்கள்.
அரசு முன்னே பின்னே பார்த்து, முகவாயைச் சொறிந்து கொண்டு, அரைமனசுடன் பணம் கொடுத்தவுடன், அதை வைத்துக் கொண்டு மூழ்கிப் போன கடன்களை குறைந்த விலைக்கு அள்ளுவதில் செலவு செய்தனர். பொருளாதார முன்னேற்றத்திற்கு புது முயற்சி என்று யாராவது புது கடன் கேட்டால் 'போடா போ' என்று விரட்டினார்கள்.
இத்தனை கூத்துக்கும் கேலிக்கும் பிறகும் இழி செயல்கள் தொடர்கின்றன. 'சிடிக்ரூப்' என்ற வங்கி நிறுவனம் கடந்த 15 மாதத்தில் சுமார் 15 பில்லியன் டாலர் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் 50 மில்லியன் டாலர் கொடுத்து பளபளவென்று ஜெட் விமானம் வாங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு 345 பில்லியன் டாலர் நிவாரணம் கொடுத்த கருவூலக் காரியதரிசி கூப்பிட்டுக் கடிந்து கொண்டிருக்கிறார். 'மெர்ரில் லிஞ்ச்' என்ற நிறுவனத்தில் பெரிய தலைகளுக்கு 4 பில்லியன் டாலர் ஊக்கத் தொகை கொடுத்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் தலைவர் (பெயர்: ஜான் தைன்) சுமார் 1 மில்லியன் டாலர் செலவு செய்து சமீபத்தில் தனது அலுவலகத்தை அழகு படுத்திக் கொண்டாராம். பிரச்சினை பொதுஜன பஞ்சாயத்திற்கு வந்ததும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டாராம்.
அதிபர் ஒபாமா "இவையனைத்தும் பொறுப்பின்மையின் உச்சம். வெட்கப் பட வேண்டிய விஷயம்" என்று கோபப் பட்டிருக்கிறார்.
'வால் ஸ்ட்ரீட்'டின் புதுப் பெயர் பேராசை தெரு என்று மாற்றி விடலாம்.
திருக்குறள் [44:8]
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
கெடுப்பா ரிலானுங் கெடும்
6 comments:
Well said Uday.
//A CODCian
எது எப்படிப் போனால் நமக்கென்ன என்று நாம் சுகமாயிருக்கத் தேவையானவற்றை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் எனறும் அவர்களது படிப்பில் அந்த உலகம் போற்றும் கல்வி நிறுவனங்களில் கற்றுத் தருகிறார்களோ என்னவோ?
போர் நடக்கும் நேரங்களிலும் பெப்ஸி, ஐஸ், பர்கர் முதலியவை எப்போதும் உள்ள அளவை விட சிறிது குறைந்தாலும் கவச வாகனத்தில் ஏற மாட்டேன் என்று அமெரிக்கர்கள் அடம் பிடிப்பார்கள் என்று கேட்டிருக்கிறேன்.
அன்புள்ள சிங்கம்!
இது உங்கள் இயற்பெயரா அல்லது புனைபெயரா என்று தெரியவில்லை. ஆனால் 'நம்ம' ஆள்! என்று புரிந்து கொண்டேன்.
வருகைக்கு மிக்க மகிழ்ச்சி!!
//
அன்புள்ள சிங்கம்!
இது உங்கள் இயற்பெயரா அல்லது புனைபெயரா என்று தெரியவில்லை. ஆனால் 'நம்ம' ஆள்! என்று புரிந்து கொண்டேன்.
வருகைக்கு மிக்க மகிழ்ச்சி!!
//
புனைபெயர்தான். அந்த பெயரிலாவது வீரம் இருக்கட்டுமே :)
// எது எப்படிப் போனால் நமக்கென்ன என்று நாம் சுகமாயிருக்கத் தேவையானவற்றை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் எனறும் அவர்களது படிப்பில் அந்த உலகம் போற்றும் கல்வி நிறுவனங்களில் கற்றுத் தருகிறார்களோ என்னவோ? //
அப்படியில்லை சுல்தான். அருமையாகத்தான் கற்றுத் தருகிறார்கள். கல்வி நிறுவனங்களைக் குறை கூறிப் பயனில்லை என்பது என் கருத்து.
// போர் நடக்கும் நேரங்களிலும் பெப்ஸி, ஐஸ், பர்கர் முதலியவை எப்போதும் உள்ள அளவை விட சிறிது குறைந்தாலும் கவச வாகனத்தில் ஏற மாட்டேன் என்று அமெரிக்கர்கள் அடம் பிடிப்பார்கள் என்று கேட்டிருக்கிறேன்.//
இது அவர்கள் தன் உரிமை என்று நினைப்பதை நிலைநாட்டும் வழியாகக் கூட இருக்கக் கூடும். சிறு வயதிலேயே தன் உரிமைக்காக எழுந்து நிற்கும் மனப்பான்மையை அமெரிக்கர்கள் அவர்கள் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கிறார்கள். அது சரி என்பதே என் கருத்து. ஆகவே இந்த நிலைப்பாட்டை அப்படிப் பொத்தாம் பொதுவில் நம் இடுகையின் கருவுடன் கோர்த்து விடக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.
வெற்றிப் படியில் ஏறத் தொடங்கும் போது அந்த வெற்றியே கண்ணை மறைப்பதும், தட்டிக் கேட்க ஆளில்லாமல் சுதந்திரம் கொடுக்கும் அமெரிக்காவின் முதலாளித்துவ நம்பிக்கையும், தனிமனிதப் பேராசையும்தான் நாம் பார்க்கும் நிலைக்கு முக்கிய காரணங்கள். இப்பொழுது தட்டிக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். நம்பிக்கையுடன் இருப்போம்.
கருத்துக்கு நன்றி!
too big to fail என்ற எண்ணம் பெரிய வங்கிகளூக்கு வந்து விட்டது.அமெரிக்க பொருளாதாரம் பிழைக்க எப்படியானாலும் தாங்கள் காப்பாற்ற பட்டாக வேண்டும் என்ற நினைப்பு அவர்களுக்கு வந்து விட்டது.
Post a Comment