இன்று சென்னை 'சத்யம்' திரையரங்கில் காலை காட்சிக்கு மகள் மற்றும் மனைவியுடன் போனால் அங்கே இது பெரியவர்களுக்கு மட்டும் என்று மகளை கதவில் நிறுத்தி விட்டார்கள். சரியென்று அம்மாவும் மகளும் டிக்கட்டை விற்று விட்டு 'மாடகாஸ்கர் 2' பார்க்கச் சென்று விட்டனர். நான் மட்டும் உள்ளே போய் உட்கார்ந்தால் பக்கத்துச் சீட்டில் (மனைவி விற்ற சீட்டில்) ஒரு அம்மாவும் அவர் கூட்டி வந்த 'பெரியவரும்' வந்து உட்கார்ந்தார்கள். படம் முழுக்க பெரியவர் அம்மாவிடம் 'அம்மா எனக்குப் பாகூன் (பாப் கார்னாம்!) வேணும், சாக்கி வேணும் என்று கேட்டு நம்மையும் அவ்வப்போது பிஞ்சுக் காலால் இரண்டு உதை உதைத்து மகிழ்வித்தார்.
சத்யம் நிறுவனத்தில் ஆளுமை பிரச்சினை என்று உலகமே பேசிக் கொள்கிறார்கள். இந்தச் 'சத்யம்' கூட 'அது' சேர்ந்ததுதானோ என்று யோசித்துக் கொண்டே படம் பார்த்தோம். இனி படம்:
ஜமால் மற்றும் அவன் அண்ணன் பற்றிய படம். இருவரும் பம்பாய் சேரியைச் சேர்ந்த சிறுவர்கள். ஒரு கலவரத்தில் அம்மா செத்துப் போக அனாதையாகி விடுகிறார்கள். நம் பள்ளிக் கரணை குப்பைக்காடு போன்ற பிரம்மாண்டத்தில் குப்பை பொறுக்கித் திரிகிறார்கள். குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பலிடம் பிடிபட்டுத் தப்பிக்கிறார்கள். ஒடும் ரயிலில் வடை விற்றுப் பிழைக்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் வேலை செய்து அவர்களிள் பலரை ஏய்க்கிறார்கள். டாலர் சுருட்டுகிறார்கள். அவர்களில் ஒருவன் வளர்ந்தவுடன் பி பி ஓ (BPO) நிறுவனத்தில் காபி பாய் ஆகிறான். பிறகு அங்கேயே பி பி ஓ பணி செய்கிறான். ஒரு நாள் 'கௌன் பனேகா கரோர்பதி' ஆட்டம் ஆடுகிறான்.
ஏறக்குறைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டான். கடைசிக் கேள்வி கேட்க வேண்டிய வேளையில் நேரம் முடிந்து போய் சங்கு ஊதி விடுகிறார்கள். கடைசிக் கேள்வியை நாளைதான் விளையாட வேண்டும். இந்த நிலையில் விளையாட்டை நடத்துபவருக்குச் சந்தேகம். சேரிப் பையனுக்கு இவ்வளவு மதியா? ஒருவேளை 'ராமலிங்க ராஜூ' வகையறாவாக இருக்குமோ என்று சந்தேகப் பட்டு போலிஸிடம் அனுப்புகிறார். அவர்களும் முட்டிக்கு முட்டி தட்டி விசாரிக்க ஒவ்வொரு கேள்விக்கும் தன் வாழ்க்கைப் போக்கிலேயே பதில் கிடைத்ததை ஜமால் இன்ஸ்பெக்டருக்கு விளக்குகிறான். அடுத்த நாள் விளையாட அனுமதிக்கிறார்கள். இங்கேதான் க்ளைமாக்ஸ்.
இடையில் ஜமாலின் அண்ணன் மும்பை தாதாவிடம் சேர்வது, அண்ணனின் துரோகம், ஜமால் - லத்திகா காதல் என்று சுவாரசியங்கள் புத்திசாலித்தனமாகப் பிணைக்கப் பட்டுள்ளன. மும்பை தாதாவிடம் சிக்கிய லத்திகாவும் ஜமாலும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்று திரையில் காண்க.
சேரியின் அடித்தரத்திற்கும் கீழான வாழ்க்கை தரம், அனாதைக் குழந்தைகளை குருடாக்கிப் பிச்சைக்கும், அழகாக்கி விபச்சாரத்திற்கும் உபயோகிப்பது போன்ற இந்திய அவலங்கள் மிகத் தத்ரூபமாகக் காட்டப் பட்டிருக்கின்றன. சில காட்சிகள் அப்படியே நம்மை உறைய வைக்கும். மற்றபடி 'ஏ' முத்திரைக்கு வேறு காரணங்கள் ஏதும் இல்லை (மனைவி மற்றும் மகளுடன் 'ஏ' என்று தெரியாமல்தான் போனேன் என்பது நினைவில் இருக்கட்டும்).
முக்கால் வாசிப் படத்தில் பின்னணி இசையே இல்லை. தேவையும் இருக்கவில்லை. ரஹ்மான் 'ஜெய் ஹோ' பாடலில் கலக்கி விட்டார்.
பார்க்க வேண்டிய படம். ஆனால் படம் சீக்கிரம் பெட்டிக்குள் போய் விடும். ஆஸ்காருக்குப் பரிந்துரைத்திருப்பது மகிழ்ச்சி. பரிசு வாங்க வேண்டும் என்பது நம் ஆசையும் கூட. ஆனால் சந்தேகம்தான்.
3 comments:
ரசித்தேன். பம்பாய் படத்தில் இருந்து இரு சிறுவர்கள் நாட் உருவப்பட்டது. சலாம் பாம்பேவின் ஸ்லம் நிகழ்ச்சிகள், சூறை. இந்த நாவலின் ஆசிரியர் லவ்லீன், படத்தின் கோ டைரக்டர். சில இண்டர்வியுஸ் பார்த்தேன், சொதப்பல். எதோ ஒரு அதிர்ஷ்டம். ரஹ்மானின் முயற்சி பாரதலுக்கு உரியது, படத்தின் பாதி நேரம், கோன் பனேகா கரோர்பதி லைப்ரரி மூசிக் இருந்தாலும்.
i liked the movi very much
cheranin autograph latika pola inga oru latika :)
great movie
sarva sadharanama vimarsanampaniyirukeenga
ரமேஷ், கார்த்திக்,
கருத்துகளுக்கு மிக்க நன்றி
Post a Comment