Sunday, November 30, 2008

குருத்துத் திசுள் ஆராய்ச்சியில் புதிய சாதனை

உலகில முதல் முறையாக நுரையீரலுக்குள் புகும் காற்றுக் குழாயை குருத்துத் திசுள் மூலம் பரிசோதனைச் சாலையில் வடிவமைத்து ஒரு பெண்மணிக்கு வெற்றிகரமாகப் பொருத்தி விட்டார்கள். பெண்மணி நலமாயிருக்கிறார்.

க்ளாடியா காஸ்டில்லோ என்ற 30 வயது பெண்மணி கொலம்பியாவில் பிறந்தவர். தற்போது பார்ஸிலோனாவில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு காச நோயால் காற்றுக் குழாய் பாதிக்கப் பட்டு நுரையீரலில் சேருமிடத்தில் சுருங்கி இற்றுப் போய் விட்டது. இதனால் இவரால் படியேற முடியவில்லை. வீட்டு வேலைகள் பலவற்றை செய்ய இயலவில்லை. சில மருத்துவர்கள் இவரது ஒரு நுரையீரலை முழுவதும் நீக்கி விட வேண்டும் என்று யோசனை சொன்னார்கள்.

க்ளாடியா துணிகரமான ஒரு காரியத்துக்கு ஒத்துக் கொண்டார். அவரது காற்றுக் குழாயில் ஒரு பாகத்தையும், எலும்புமச்சையில் (bone marrow) இருந்து குருத்துத் திசுள்களையும் ஆராய்ச்சி சாலைக்குக் கொடுத்தார். இந்த உடல் பாகங்களைக் கொண்டு பிரிட்டன், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த சூரப் புலி மருத்துவர்கள் அவரது காற்றுக் குழாயை சோதனைச் சாலையில் வளர்த்து அவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தி விட்டார்கள்.

இப்போது க்ளாடியா நடனம் கூட ஆடுகிறாராம். இவரது உடல் பாகங்களைக் கொண்டு செய்த திசுக்கள் என்பதால், ஒவ்வாமை ஏற்பட சாத்தியங்கள் மிகக் குறைவு. சாதாரணமாக வெளியிலிருந்து உடல் பாகம் பொருத்தப் படும் போது ஒவ்வாமையால் உடல் அந்தப் பாகத்தை எதிர்த்து அழித்து விட முனையும். இதைத் தடுக்க வாழ்நாள் முழுவதும் தானம் பெற்றவர் சக்தி மிக்க மருந்துகள் பலவற்றை விழுங்கிக் கொண்டிருப்பது மருத்துவ அவசியம். க்ளாடியாவிற்கு இந்தப் பிரச்சினை எதுவும் இல்லாமல் ஜாலியாக இருப்பதாகக் கேள்வி.

இந்த சிகிச்சை முறை இன்னமும் பரிசோதனைச் சாலையில்தான் உள்ளது. அத்துடன் இல்லாமல் இந்த சிகிச்சைக்கு ஆகும் செலவும் மிகவும் அதிகம். சராசரி மனிதருக்கு எட்டாக் கனிதான். க்ளாடியா இந்த விஷயத்தில் உலகின் முதல் பரிசோதனைப் பெண். முடிவு தெரியும் வரை கொஞ்சம் உதைப்பாகத்தான் இருந்தது என்று கூறியிருக்கிறார்.

'ரிஸ்க் எடுப்பதை ரஸ்க்கு சாப்பிடுவது' போல் செய்திருக்கும் க்ளாடியாவையும், முனைந்து பரிசோதனையில் வெற்றிபெற்ற மருத்துவர்களையும் முந்திரி பக்கோடா சாப்பிட்டுக் கொண்டே நாம் பாராட்டுவோம். மருத்துவத் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு நல்லது செய்திருக்கிறார்கள்.

No comments:

Blog Archive