புதிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவியேற்றவுடன் சந்திக்க வேண்டிய பெரும் பொறுப்புகள் பல:
சரிவின் பிடியில் வீழ்ந்து விட்ட அமெரிக்க பொருளாதாரம்
- உயர்ந்து கொண்டே போகும் தேசியக் கடன் சுமையை எப்படி மற்றும் எத்துணைக் காலத்தில் குறைக்கப் போகிறார் ?
- 700 பில்லியன் டாலர் அளவில் வரிப் பணத்தைக் கொண்டு வங்கிகளை சீர்நிறுத்தும் பணியில் அந்த வரிப் பணம் சரியாகச் செலவிடப் படுகிறதா என்பதை எப்படி கட்டுப் படுத்தப் போகிறார்?
- அதிபர் புஷ் அவரது காலத்தில் அறிவித்த வரிச் சலுகைகள் முடிவுக்கு வரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வரிச் சலுகைகள் வரும் பதவிக் காலத்தில் விலக்கிக் கொள்ளப் படுமா?
- அமெரிக்கர்களின் சராசரிச் சம்பளம் சில வருடங்களாகத் தேங்கிக் கிடக்கிறது. இதை எப்படிக் கையாளப் போகிறார்?
- பணம் படைத்தவர்களுக்கும் அது பணமில்லாதவர்களுக்கும் உள்ள விரிசல் அகண்டு கொண்டே போகிறது. இதை எப்படிக் குறைக்கப் போகிறார்?
தடையற்ற வர்த்தகம் பற்றிய கொள்கைகள்
- வங்கிகள் மேலும் தேசிய மயமாக்கப் படுமா அல்லது தற்போதைய சுதந்திரங்கள் தொடருமா?
- அமெரிக்கத் தொழிலாளர்களை அச்சப் படுத்தும் மற்ற நாடுகளுடனான வர்த்தக உடன்பாடுகள் தொடருமா?
எந்த யுத்தம் முக்கியமானது?
- ஈராக்கில் 525 பில்லியன் டாலர்களையும், ஆஃப்கானிஸ்தானில் 140 பில்லியன் டாலர்களையும் செலவழித்தாகி விட்டது. ஈராக்கில் 4000 அமெரிக்கர்கள் செத்துப் போயிருக்கின்றனர். ஆஃப்கானிஸ்தானில் சுமார் 600 அமெரிக்கர்கள் உயிரை விட்டிருக்கின்றனர். 9/11 சமயத்தில் யுத்தத்திற்கு இருந்த அமெரிக்க ஆதரவு ஏகத்திற்குக் குறைந்து விட்டது.
- ஈராக்கில் இருந்து இப்போது வெளியேறினால் அங்கு உள்நாட்டுக் கலகம் வருமா? அப்படி வந்தால் அதற்கு யார் பொறுப்பு?
- இன்னமும் யுத்தத்தைத் தொடர்ந்தால் அமெரிக்கா தற்காப்பிற்காக கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணைத் திறன்களை அதிகரிக்கும் வேகம் மட்டுப் படும், எது சரியான முடிவு?
இதைத் தவிர மேலும் பூதாகாரமான பல பிரச்சினைகள் பராக் ஒபாமாவை எதிர்நோக்கியுள்ளன.
- அமெரிக்கர்களுக்கு கல்வி மேல் உள்ள ஈடுபாடு குறைந்து கொண்டே போகிறது. படிக்கத் தெரிந்த அமெரிக்க சிறுவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. பணமில்லாமல் கல்லூரிப் படிப்பை பாதியில் தொலைத்து விடும் மாணவர்கள் பலர்
- அமெரிக்காவின் சமூக மதிப்புகள் தேய்ந்து கொண்டே போகின்றன. வளர்ந்து வரும் ஓரினத் திருமணங்கள், துப்பாக்கிக் கலாச்சாரம் முதலியவை உதாரணங்கள்
- 9/11 சம்பவத்திற்குப் பிறகு 'நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்' என்றிருந்த அமெரிக்க மனப்பான்மை, தங்களைச் சுற்றி பெரிய வேலிகளை அமைத்துத் தற்காத்துக் கொள்வதை முதன்மையாகக் கருதும் உணர்ச்சிபூர்வமான, தற்காப்பு மனப்பான்மையாக மாறிவிட்டது. இதனால் புது தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்கும் போக்கு, அந்தத் தொழில் நுட்பங்களை சந்தைக்குக் கொண்டு வரும் வேகம் முதலியன மட்டுப் பட்டிருக்கின்றன. சில விஷயங்களில் மற்ற நாடுகள் அமெரிக்காவை முந்த ஆரம்பித்து விட்டனர்
- வீடு, கார், தொலைக்காட்சி, கணினி என்று சாதனங்களை சுற்றி அமைத்துக் கொண்டு வாழ்வில் மகிழ்ச்சியைத் தேடி வரும் அமெரிக்களின் வாழ்க்கை முறையில் எரிபொருள் மற்றும் சக்திச் சிக்கனத்தை முக்கியமாக கருதுவதை ஒரு அங்கமாக்குவது எப்படி?
- பணக்கார நாடான போதிலும் அமெரிக்காவில் அனைவருக்கும் மருத்துவ வசதி என்பது குதிரைக் கொம்புதான். இதைப் பற்றிப் பேசப் போன ஒபாமாவை முதலாளித்துவத்தின் எதிரி, சோஷலிஸ்ட் என்றெல்லாம் சித்தரித்தார்கள்
அமெரிக்க மக்களை தன் கருத்து, சிந்தனை மற்றும் உணர்வுகளால் கவர்ந்த ஒபாமா முன் அனுபவமில்லாதவர் என்பதே உண்மை. எப்படி சமாளிக்கப் போகிறார் என்று காலம் பதில் சொல்லும். 'நம்பிக்கையின் பிடிவாதம்' என்று புத்தகம் எழுதியிருக்கும் இந்த உலகத் தலைவர் மேல் நம்பிக்கை வைப்போம்.
1 comment:
Obama is a Passionate man and I believe, he do have passion over governing.
He may make mistakes, but he will learn.
As you have said, he is not so experienced, but he know that and he keeps Wise men with him.
Nice list of Challenges for Mr.Change
Post a Comment