Sunday, September 10, 2006

சென்னையில் ஹெச் சி எல் கச்சேரித் தொடர் (HCL Concert Series)

ஹெச் சி எல் இந்திய மண்ணில் பிறந்து ஒரு புகழ் மிக்க பன்னாட்டு நிறுவனமாக சிறப்புடன் வளர்ந்திருக்கிறது. இன்றைய தேதியில், ஆண்டொன்றுக்கு 3.5 பில்லியன் டாலர் அளவிற்குத் தகவல் தொழில் நுட்பத் துறையில் வியாபாரம் செய்யும் நிறுவனம் இது.

ஹெச் சி எல் கடந்த சில ஆண்டுகளுக்காகவே தம் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய சமூகத்திற்குத் திருப்பிச் செய்யும் நோக்குடன் தில்லி நகரில் சங்கீதம் மற்றும் நாட்டியக் கச்சேரித் தொடர்களை நடத்தி வந்துள்ளனர். இளைஞர்களுக்கு இத் தொடர்களில் வாய்ப்பளிப்பதில் முன்னுரிமை வழங்கப் படும் என்று தெரிகிறது.

ஹெச் சி எல் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், இந்த ஆண்டு முதல் சென்னையிலும் ம்யூஸிக் அகாதமியுடன் இணைந்து இத்தகைய கச்சேரித் தொடரைத் தொடங்கி வைக்கும் விழா இன்று ம்யூஸிக் அகாதமியில் நடந்தது.

ஹெச் சி எல் இன்·போஸிஸ்டம் நிறுவனத் தலைவர் திரு அஜாய் சௌத்திரி இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, 30 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தான் அலுவலகம் தொடங்கியதையும் முதல் தெற்கிந்தியப் பயனர்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

முதல் முதலாக இந்தத் தொடரில் சுதா ரகுநாதன் கச்சேரி. வெகு அருமையாக இருந்தது. பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று பத்மஸ்ரீ விருதும் பெற்ற இந்த அசத்தல் மங்கை இரண்டு மணி நேரம் கர்நாடக சங்கீதத்தில் கச்சேரி செய்து அரங்கை அசத்தி விட்டார்.

அமைதியாகவும் கம்பீரமாகவும் அமர்ந்து கணீரெனப் பாடினார். தமிழ்ப் பாடல்கள் புரிந்ததால் இனிமை அதிகம். இத்துணைப் புகழுடன் அவர் காட்டிய மரியாதை அவர் மேல் மரியாதையை உயர்த்தியது.

அரங்கம் நிறைந்திருந்தது. வந்திருந்தவர்களின் சராசரி வயதைக் கணக்கிட்டால் 50ஐ த் தாண்டி விடும். இளைய தலைமுறைக்கு கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லாதது, இந்தப் பாரம்பரியக் கலை அழிந்து விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்தியது.

ஒலி அமைப்பு மிகத் துல்லியம். ம்யூஸிக் அகாதமியில் போஸ் ஒலிப் பெருக்கிகளும் டெனான் ஒலி அமைப்பும்.... அடடா... இந்தியா எங்கேயோ போய் விட்டது ஐயா!

அரங்கத்தில் கேட்பவர்களுக்கு பின் புறத்தைக் காட்டிக் கொண்டு மேடையை மறைக்கும் வீடியோக்காரனின் வெகு அலட்சியப் போக்கை ஒழிக்க தொழில்நுட்பம் ஏதாவது கூடிய விரைவில் கண்டு பிடித்தே தீரவேண்டும்.

மொத்தத்தில் சென்னையில் இன்று ஒரு வித்தியாசமான உலகத் தரமான மாலைப் பொழுது.

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செய்தி" தேனாய்வந்து பாய்ந்தது காதினிலே"! இளைஞர்களையும் இந்த இசைப்பக்கம் இழுக்க ஆவன செய்யவேண்டும். இங்கே பாரிசிலும் மாநகரசபை வருடாவருடம் உலக இசைக்கலைஞர்களைக் அழைத்து ;நிகழ்ச்சி நடத்துவார்கள். பிரான்சிய இளைஞர்கள்;வருவார்கள்.
நம்மவர்கள் "ம்" அந்தப் பக்கம் திரும்பவே மாட்டார்கள். நல்லதை நாடுவாரில்லை.
யோகன் பாரிஸ்

ந. உதயகுமார் said...

அன்புள்ள யோகன் பாரிஸ்,

உங்கள் பெயரிலிருந்து, நீங்கள் ஒரு ·ப்ரென்ச் பிரஜை என்று யூகிக்கிறேன். இது உண்மையானால் உங்கள் தமிழார்வமும் நீங்கள் கர்நாடக சங்கீதத்தில் காட்டும் ஆர்வமும் என்னை மலைக்கச் செய்கிறது.

அன்புடன்

உதயகுமார்

Blog Archive