அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தைச் சேர்ந்த ப்ளாக் ராக் (Black Rock) பாலைவனத்தில் ஒவ்வொரு வருடமும் நம்ம ஊர் திருவிழாக்கள் போலவே நாட்டின் பல பகுதிகளிலிருக்கும் மக்கள் கூடி திருவிழா ஒன்றைக் கொண்டாடுகிறார்கள்.
நம் ஊரில் சொக்கப்பானை எரிப்பது போலவே ஒரு மாபெரும் மனித உருவத்தைக் ஏற்படுத்தி, அதைக் கொளுத்தி, அதைச் சுற்றி ஆடியும் பாடியும் கொண்டாடி திருவிழாவை இனிதே முடித்துக் கொள்கிறார்கள்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சிறிய கும்பலுடன் தொடங்கிய இந்தத் 'திருவிழா' இப்போது சுமார் 25000 மக்கள் பங்கேற்கும் ஒரு பிரம்மாண்டமான நிகழ்வு.
ஆச்சரியம் என்னவென்றால் இந்தத் 'திருவிழா' நடக்கும் நகரம் ஒரு தற்காலிக நகரம்.
சற்றேறக் குறைய ஒரு மாத காலம் நடக்கும் இந்தத் 'திருவிழா'விற்கு வரும் மக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசியத் தேவைகளை தங்களுடனேயே கொண்டு வந்து ஒரு ஏரியின் படுகையில் இந்தத் தற்காலிக நகரத்தை அமைக்கிறார்கள். அனைவரும் திரும்பச் சென்ற பிறகு அவர்கள் ஏற்படுத்திய தற்காலிக நகரத்தின் சுவடே தெரியாது என்பது மற்றொரு சுவையான விபரம்.
இன்னமும் உண்டு, இங்கு மற்றவரின் பத்திரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பங்கம் விளைவிக்காத வரையில் தனிமனித நடத்தைக்கு கட்டுப்பாடுகள் கிடையாது, ஆணும் பெண்ணும் தங்களைச் சுதந்திரமாக வெளிப் படுத்திக் கொள்ள வகை செய்யும் ஒரு வித்தியாசமான சமூக அமைப்பாக இது அமைவது இதன் தனித்துவம். இந்தத் தற்காலிகச் சமுகத்தில் பொருள்கள் வாங்குவதும் விற்பதும் (வியாபாரம்) முற்றிலும் தடை செய்யப் படுகிறது. நகரத்தின் நடுவில் இருக்கும் ஒரு காப்பிக் கடையில் மட்டும் காப்பி அல்லது டீ வாங்கி குடிக்கலாம் !
இதற்காக ஒரு தனி வலைத் தளமே அமைத்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment