Tuesday, July 05, 2005

சேதுசமுத்திரம் கால்வாய்த் திட்டம்

சேது சமுத்திரத் திட்டம் செயலாக்கப் படும் போது கப்பல்கள் இலங்கையைச் சுற்றிப் போக வேண்டிய தூரமும், அதற்கு ஆகப் போகும் நேரச் செலவும் குறையும். இது 160 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் ஒரு திட்டம்.

தூத்துக்குடியில் ஆரம்பித்து, ராமேசுவரம் அருகிலுள்ள ஆதம் பாலம் வழியாக வங்காள விரிகுடாவிற்கு இந்தியா - இலங்கை நாடுகளுக்கு நடுவே தெற்கு-வடக்காக அமைக்கப் படப் போகும் கால்வாய் இது.

தற்போதைய மத்திய அரசு வெகு மும்முரமாக இந்தத் திட்டத்தை பல எதிர்ப்புகளுக்கு இடையில் செயல் படுத்தத் தொடங்கி விட்டது. இந்தத் திட்டம் செயலாக்கப் பட்டால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படாது, தென் தமிழ் மாவட்டங்களில் வாணிபம் செழிக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படாது, மீனவர் வாழ்க்கை பாதிக்கப் படாது, சுற்றுலாத் தொழில் வளம் பெறும் என்று தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்.

இத் திட்டத்தைப் பற்றி எழுந்துள்ள கீழ்க்கண்ட கவலைகளுக்கு ஆதார பூர்வமான பதில்கள் எதையும் நான் தேடிய வரை என்னால் இணையத்தில் கண்டு பிடிக்க இயலவில்லை.
  • கால்வாயினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகளைப் பற்றி மத்திய அரசின் ஆணையின் பேரில் ஆராய்ந்த NEERI யின் ஆய்வறிக்கை ஒரு கண் துடைப்பு வேலை என்று பலரும் குறிப்பிட்டிருக்கின்றனர்
  • NEERI அகழ்ந்தெடுக்க வேண்டிய மண்ணின் அளவை சரியான முறையில் மதிப்பிடவில்லை. ஆகவே இந்தத் திட்டத்தின் செயல்பாட்டில் திட்டமிட்டதற்கு மேல் பெருமளவு அகழ்விற்காக செலவு செய்யப் படவேண்டியிருக்கும்
  • தூர் வாரப் படும் மண்ணை என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள பவளப் பாறைகள் சூரிய ஒளியைப் பெற்று கரியமில வாயுவை பிராணவாயுவாக மாற்றும் வல்லமை பெற்றவை. இவற்றின் மேல் தூர் வாரப் படும் மண் கொட்டப் பட்டு மூடப் பட்டால் இந்தப் பாறைகள் அழிந்து போகும். அந்தப் பகுதியிலுள்ள மீன் வளம் பாதிக்கப் படும்
  • அகழ்ந்தெடுத்த மண்ணைக் கொட்ட பாதுகாப்பான இடங்களை NEERI அதன் அறிக்கையில் கண்டு சொல்லவில்லை. மன்னார் வளைகுடாவில் 21 கடல் வாழ் உயிரின பாதுகாப்புப் பகுதிகள் உள்ளன. அகழ்வு செய்த மணல் இந்தப் பகுதியில் கொட்டப் பட்டால் என்ன ஆகும்?
  • கால்வாயின் ஆழத்தை பராமரிக்க தொடர்ந்து கால்வாய்ப் பகுதியில் அகழ்வுகளைத் தொடர வேண்டியிருக்கும். தெற்கு வடக்காகச் செல்லும் கால்வாயில் திட்டப் படி இரண்டு குறுகிய வளைவுகள் உள்ளன. செயற்கைக் கோள் அனுப்பிய படங்களின் படி இந்தப் பகுதியில் கடல் அலைகள் தெற்கு வடக்காக நகர்கின்றன என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அலைகள் கால்வாயின் குறுகிய வளைவைத் தாக்கும் போது அங்கே குவியக் கூடிய மணலின் அளவு அதிகமாக இருக்கும். NEERI யின் பராமரிப்பிற்கான அகழ்வு மதிப்பீடுகள் இதைக் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. மேலும், சுனாமி மற்றும் புயல் வீசும் காலங்களில் அலைகள் பாக் வளைகுடாவிற்குள் சென்று அங்கே நீரின் கலங்கல் தன்மையை அதிகரித்து, கடல் தளத்தை மேடாக்கும் ஆபத்து உள்ளது
  • தோண்டப்படும் கால்வாய் எண்ணெய் மற்றும் நிலக்கரி எடுத்துச் செல்லும் அளவில் ஆகப் பெரிய கப்பல்களுக்கு உதவாது. அவை இலங்கையைச் சுற்றித்தான் செல்ல வேண்டியிருக்கும். அவற்றுக்கு 400 நாடிகல் மைல் அதிகப் பயண தூரமும், 24 முதல் 36 மணி வரை அதிகப்படி நேரச் செலவும் குறையப் போவதில்லை
  • இத்தகைய கப்பல்கள் இந்த வழித்தடத்தில் 40 சதவிகிதத்திற்கும் அதிகம். ஆகவே மிச்சமுள்ள 60 சதவிகிதக் கப்பல்களே இந்தக் கால்வாயின் பயனை அனுபவிக்க முடியும்
  • எரிபொருள் சிக்கனத்திற்கு உத்தமமான வேகத்தில் கப்பல்களைச் செலுத்த வேண்டியது அவசியம். கால்வாயில் உத்தமமான வேகம் சாத்தியமில்லை என்று வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள்
  • கப்பல்களின் இயக்கத்தில் இருந்து வெளிப்படும் எண்ணெய் கசிவுகளால் சுற்றுச் சூழல் மாசு படும்
  • கால்வாயில் கப்பல் போக்குவரத்து அதிகரித்து விட்டால் அந்தப் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாது. அதனால் அவர்கள் வருவாய் பாதிக்கப் படும்
  • கால்வாய் செல்லும் பாதை நாளடைவில் மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப் படும் எல்லைக் கோடாக மாற்றப்படும் என்று மீனவர்கள் பயப்படுகிறார்கள். அதனால் கால்வாயை தாண்டிச் சென்று மீன் பிடிக்க முடியாமல் போகும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்
  • கால்வாயில் விபத்துகள் ஏற்பட்டு கப்பல்கள் (குறிப்பாக எண்ணெய் கப்பல்கள்) சேதமடைந்தால் எண்ணெய் கசிவு ஏற்பட்டு சுற்றுச் சூழல் மாசு படும்

2 comments:

ந. உதயகுமார் said...

இங்கே பின்னூட்டம் இட முடியாமல் இருந்தது. சக வலைப்பதிவர்கள் சுட்டியதால் தவறைக் கண்டு பிடித்து திருத்த முயற்சித்திருக்கிறேன். பரிசோதனைக்காக இந்த பின்னூட்டம்.

// பின்னூட்டம் இட முடியாததால் voice on wings மின்னஞ்சலில் அளித்த தகவல்கள் //

சுட்டி 1 : http://www.sethusamudram.gov.in/WhatisSethu.asp##7

கால்வாயின் தூரம் 90 நாடிகல் (nautical) மைல்கள். இலங்கையைச் சுற்றி வர 490 நாடிகல் மைல்கள் பயணிக்க வேண்டும். கால்வாய் 400 நாடிகல் மைல்களைக் குறைப்பதாகச் சொல்வதன் காரணம் இதுதான்.

கால்வாய்க்குள் அனுமதிக்கப் படும் கப்பல்களுக்கு அனுமதிக்கப் படப் போகும் அதிகப் பட்ச வேகம் மணிக்கு 8 நாடிகல் மைல்கள்தான்.

சுட்டி 2: http://www.g2mil.com/fastships.htm

இங்குள்ள தகவல்கள் படி சரக்குக் கப்பல்கள் 20-25 knot வேகத்தில் பயணிக்கின்றன. புதிய வகை கப்பல்கள் மணிக்கு 40 knot வேகத்தில் கூட பயணிக்கக் கூடும். இந்தத் திட்டம் முடிவடையும் காலத்திற்குள் புதிய வகை கப்பல்களால் சராசரிப் பயண வேகம் அதிகரிக்கக் கூடும்.

20 knot வேகத்தில் 490 மைல் பயணிக்க 24.5 மணி நேரம் செலவாகும். கால்வாய் வழியாக 8 knot வேகத்தில் சென்றால் 11 மணி 15 நிமிடத்தில் அடுத்த பக்கம் போய்விடலாம். ஆக பயண நேரச் சேமிப்பு சுமார் 13 மணி நேரம் மட்டும்தான். பதிவில் கூறப்பட்ட படி (அதிகாரிகள் குறிப்பிட்ட படியும் கூட) 24 முதல் 36 மணி நேரம் அல்ல.

இன்னும் துரிதமாகச் செல்லும் கப்பல்கள் வரும் போது நேரச் சேமிப்பின் அளவு இன்னமும் குறையும்.

// voice on wings அளித்த தகவல்களின் சாராம்சத்தின் முடிவு! //

நன்றி voice on wings!

- உதயகுமார்

Voice on Wings said...

எனது மின்னஞ்சலை அருமையாக, சுருக்கமாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் அலசி, அது குறித்த எல்லா கேள்விகளையும்், கவலைகளையும்் ஓரிடத்தில் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். மிக்க நன்றி.

Blog Archive