Saturday, April 30, 2005

ஏறுமுகமாக இருக்கும் கச்சா எண்ணெய் விலை இறங்குமா?

கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெயின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது. (கருப்புத் தங்கம் என்று அழைக்கப் படும் கச்சா எண்ணெய் பற்றிய ஒரு சிறப்பான பதிவை காண இங்கே சொடுக்கவும்.)

இதற்கு முக்கியக் காரணங்களாக நாம் காணக் கூடியவை:
  • இந்தியா மற்றும் சீனப் பொருளாதாரங்கள் முறையே 6 முதல் 9 சதவிகித வளர்ச்சி விகிதத்தை இலக்காகக் கொண்டுள்ளன.
  • சீனப் பொருளாதாரத்தில் உற்பத்தித் தொழிலின் பங்கு 40 % க்கு மேல் உள்ளது. சக்தியை திறமையாக உபயோகிக்கும் முறைகளில் சீனத் தொழில்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் என்று சமீபத்தில் படித்தேன். உற்பத்தித் துறையில் அதீதப் பொருளாதார வளர்ச்சி, திறமையற்ற சக்தி உபயோகம் முதலிய காரணங்களால் சீனாவின் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது.
  • இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயத்தின் (agricultural sector) பங்கு அதிகம். தகவல் தொழில் நுட்பம், இன்னும் மற்ற பல சேவைகளுக்கும் தேவை அதிகரிப்பதால் சேவைகள் சார்ந்த பொருளாதாரம் (services sector) அதிக அளவில் வளருகிறது. உற்பத்தித் தொழில் (industrial sector) சிறப்பாக வளர்ந்தாலும், இந்த வளர்ச்சியால் சீனா அளவிற்கு இந்தியாவின் எண்ணெய் தேவை அதிகரிக்காது. ஆனால் பொருளாதார வளர்ச்சியால் எரிபொருள் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. மேலும் இந்தியாவில் வாகன விற்பனை சக்கை போடு போடுகிறது. வருடத்திற்கு இந்தியாவில் 9,000,000 வாகனங்கள் விற்பனையாகின்றன. இதில் 150,000 வாகனங்கள் எரிபொருளைக் குடிக்கும் பெரிய ஆடம்பர ரக வாகனங்கள். இந்தக் கணக்கில் வியாபாரத்திக்குப் பயன்படும் கனரக வாகனங்களான பேருந்துகளும் (bus) , சிற்றுந்துகளும் (van), சரக்கு உந்துகளும் (lorry), விவசாய உந்துகளும் (tractors) அடங்காது. இந்திய நகரங்களில் பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதிகள் சிறப்பாக அமையாததால் மக்கள் சொந்த வாகனங்களை வாங்கத் தலைப் படுகிறார்கள். வாகன வளர்ச்சியால் இந்தியா இறக்குமதி செய்யும் எரிபொருளின் மதிப்பு வருடா வருடம் எக்கச்சக்கமாக ஏறிக்கொண்டு வருகிறது.
  • இது போதாதென்று வளரும் போக்குவரத்தின் அளவிற்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு சாலைகள் அமைக்கப் படாததால், வாகன நெரிசல் ஏற்பட்டு எரிபொருள் உபயோகிக்கும் திறன் குறைகிறது
  • கச்சா எண்ணெய் சீனாவின் சக்தி ஆதாரங்களில் மிக முக்கியப் பங்கு வகிப்பதால், சீனா அமெரிக்கா செய்வதைப் போலவே, என்றாவது எதிர்பாராமல் வரக்கூடிய கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் 35 முதல் 40 நாட்களுக்கு நாட்டுக்குத் தேவையான எண்ணெயை வாங்கித் தேக்கி வைக்கத் தலைப் பட்டிருக்கிறது. இந்தச் செய்கை எண்ணெய்த் தேவையை அதிகப் படுத்தியிருக்கிறது
  • அமெரிக்காவின் தினசரி உபயோகம் மற்றும் நெடுநாள் சேமிப்புக்கான எரிபொருள் தேவைகள் வருடத்திற்கு வருடம் அதிகரித்த வண்ணமாகவே உள்ளன
  • பில் க்ளிண்டன் ஆட்சியில், உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை இருந்த போது, இடர்கால சேமிப்பாக வாங்கி அடுக்கப் பட்ட மில்லியன் கணக்கான பீப்பாய்களின் மதிப்பு எண்ணெய் விலை இறங்கினால் வீழ்ந்து அமெரிக்காவிற்கு ஏகப்பட்ட பொருள் இழப்பு ஏற்படக் கூடும். இந்த ஆபத்தைத் தவிர்க்க அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து உற்பத்தி வளங்களைத் தன் கையில் போட்டுக்கொண்டு, எண்ணெய் உற்பத்தி அளவை (பாதுகாப்பு என்ற பெயரில்) செயற்கையாகக் குறைத்து வைத்திருக்கிறது என்றொரு காரணம் சொல்கிறார்கள். சதாம் காலத்தில் ஈராக் உற்பத்தி செய்து வந்த கச்சா எண்ணெய் அளவில் பாதியளவுதான் இப்போது அந்த நாடு உற்பத்தி செய்கிறது என்பது உண்மையான ஒரு தகவல்
இப்படித் தேவைகள் அதிகரிக்கும் நோக்கிலும் உற்பத்தி அளவு குறைந்திருக்கும் நிலையிலும் உள்ள ஒரு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையப் போகிறதென்றால் ஏதாவது கனவில் நடந்தால்தான் உண்டு!! இல்லையென்றால் பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்பாராத இடர்பாடுகள் ஏதாவது வர வேண்டும்.

சரக்குகளுக்கான எதிர்காலச்சந்தையில் (futures market) 2008 ஆம் ஆண்டில் வாங்கக்கூடிய கச்சா எண்ணெயை இன்றைக்கு பீப்பாய்க்கு 58 டாலர் கொடுக்கத் தயாராக இருந்தால் உறுதி செய்து கொள்ளலாம்.

இன்னும் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அதிகரிக்கும் எரிபொருள் விலை பணவீக்கத்தையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். பணவீக்கம் சரியான முறையில் சமயத்தில் கட்டுப்படுத்தப் படாவிட்டால், அது வளர்ச்சியைப் பலவிதத்தில் பாதிக்கும். வளர்ச்சி குறைந்தால் எரிபொருள் தேவையும் குறையும் ஒரு இயற்கை முட்டுக்கட்டையும் பொருளாதார அமைப்பில் உள்ளது.

இப்படி விலை ஏறுமுகமாகவே இருக்கும் ஒரு எரிபொருளை அதிகம் சார்ந்திருப்பது எந்த நாட்டிற்கும் ஆரோக்கியமானதல்ல. உலக நாடுகள் என்ன செய்யப் போகின்றன?

5 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

முக்கியமான பதிவு எழுதி இருக்கீங்க. இது சம்பந்தப்பட்டு ஒரு பதிவைச் சில மாதங்கள் முன்னால் எழுதி இருந்தேன்.

ந. உதயகுமார் said...

நன்றி செல்வராஜ். சிறப்பான பதிவு. எனது பதிவிலிருந்து உரிமையுடன் சுட்டி அமைத்து விட்டேன். - உதயகுமார்

Anonymous said...

provides good reading on a contemperory issue.such articles are rare in tamil.keep up the good work.unggal sinthanai intha thalathil thodara vendum.samakala vivaharangal patri suvaiyana katturaikaql thamizhukku thodarnthu kidaithu vara vendum.vazhthukal.rama kuala lumpur malaysia

Anonymous said...

provides good reading on a contemperory issue.such articles are rare in tamil.keep up the good work.unggal sinthanai intha thalathil thodara vendum.samakala vivaharangal patri suvaiyana katturaikal thamizhukku thodarnthu kidaithu vara vendum.vazhthukal.rama kuala lumpur malaysia

ந. உதயகுமார் said...

நீங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்க்கு மிக்க நன்றி rama அவர்களே! - உதயகுமார்

Blog Archive