இந்தியத் தனியார் விமானங்களும் அயல் நாட்டிற்குப் பறக்கலாம் என்று அரசு அனுமதியளித்த பிறகு ஜெட், ஏர் ஸஹாரா போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று பறக்க ஆரம்பித்து விட்டன.
கடந்த ஏப்ரல் 14 ம் தேதி, மதிப்பிற்குரிய இந்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ப்ர·புல் படேல் இந்திய வான்வெளியை அமெரிக்க விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு திறந்ததன் மூலம் இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் அமெரிக்காவிற்குத் தடையற்ற சேவைகள் இயக்க வகை செய்யும் ஒரு 'திறந்த வான்வெளி' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதே வாரத்தில், பிரிட்டன், சீனா, குவாட்டார் தேசங்களுடன் இதே போல் ஒப்பந்தங்கள் செய்து கொண்டார்.
அதரப் பழசான விமானங்களை வைத்து வியாபாரத்தை ஓரளவு ஒட்டிக் கொண்டிருந்த அரசு சார்ந்த ஏர்-இந்தியா நிறுவனம் கூட சமீபத்தில் விழித்துக் கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற பன்னாட்டு பட்ஜெட் விமான சேவை தொடங்கப் போவதாக அறிவித்தது. புதிய ஜெட் விமானங்கள் வாங்குவதைப் பற்றி சில நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தது. போயிங் நிறுவனமும், ஏர் பஸ் நிறுவனமும் போட்டா போட்டியில் இருந்தன.
போயிங் நிறுவனம் அதிபர் புஷ் வரை சென்று இந்திய அரசுக்கு 'போயிங்' வாங்கச் சொல்லி நிறையப் 'பிரஷர்' கொடுத்ததாகக் கேள்வி!
நேற்று ஏர் இந்தியா 50 போயிங் விமானங்களை சுமார் 30,000 கோடி ரூபாய்கள் செலவில வாங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இதில் போயிங் 777, மற்றும் புதிய வெளியீடான 787 விமானங்களும் அடங்கும்.
ஏர் டெக்கான் நிறுவனம் நிறுவப்பட்ட போது அதன் நிறுவனர் ஜி. ஆர். கோபிநாத் ஜெட் விமானங்கள் வாங்க சந்தைக்குப் போனார். அப்போது உலகின் இரண்டு பெரிய விமான நிறுவனங்களான போயிங் மற்றும் ஏர் பஸ் அவரைத் திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. கடைசியில் ·பிரெஞ்சு ஏ டி ஆர் விமானங்கள் இரண்டை வைத்து சேவை ஆரம்பித்தார்.
இன்று அவரது மகத்தான வெற்றிக்குப் பிறகு ஏர் பஸ் நிறுவனம் அவரது ஆர்டருக்குக்கு அவர் நிறுவன வாசலில் காத்திருந்தது. ஏர் டெக்கான் தனது ஏர் பஸ் விமானங்களைச் சடுதியில் பழுது நீக்கி சேவையில் தடையில்லாமல் நடத்தும் வகையில் மூன்று விமானப் பொறியாளர்களை நிரந்தரமாக ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு அளித்தது.
சமீபத்தில் கோபிநாத் 30 ஏர் பஸ் A 320 ரக விமானங்ளை சுமார் 8750 கோடி ரூபாய் செலவில் வாங்க முடிவு செய்துள்ளார்.
இன்னும் கிங் ·பிஷர், ஸ்பைஸ் என்று பல தனியார் விமான சேவைகள் இந்தியாவில் விரைவில் தொடங்கப் பட இருக்கின்றன. அவையெல்லாம் விமானம் வாங்க இருக்கின்றன. ஜெட் மற்றும் ஏர் சஹாரா நிறுவனங்கள் கூட புதிய விமானங்கள் வாங்க யோசிப்பதாகக் கேள்வி.
இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தை வருடத்திற்கு சுமார் 25% என்ற அளவில் வளரும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.
போயிங் மற்றும் ஏர் பஸ் நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்.
இதற்கு ஈடான முதலீடுகளை அரசு இந்திய விமான நிலையங்களை விரிவாக்குவதில் விரைந்து செய்யவில்லையானால் விமானங்களை ஒன்றன் பின் ஒன்றாய் நிறுத்தி வைத்து நாம் வேடிக்கை பார்க்கலாம்!!
5 comments:
//இதற்கு ஈடான முதலீடுகளை அரசு இந்திய விமான நிலையங்களை விரிவாக்குவதில் விரைந்து செய்யவில்லையானால் விமானங்களை ஒன்றன் பின் ஒன்றாய் நிறுத்தி வைத்து நாம் வேடிக்கை பார்க்கலாம்!!//
:-}
அதெல்லாம் சரி. ஆனால், இன்னமும், இந்தியாவில் உலகத்தரதிலமைந்த விமான நிலையங்கள் இல்லையே அதற்கு என்ன செய்யப் போகிறது அரசு. சென்னையில் கோயம்பேட்டில் நிறைய இடம் இருக்கிறது. வேண்டுமானால் பரிசீலனை செய்யலாம் ;)
இப்படி ஆயிரக்கணக்கான கோடிகளை விமானங்களின் பொருட்டு அடுத்த நாட்டுக்குக் கொடுக்கிறோமே, இந்தியாவில் என்றைக்கு நாம் விமானங்களைத் தயாரித்து யன்படுத்த/சந்தைப்படுத்தப்போகிறோம் ?.
அதெல்லாம் சரி. ஆனால், இன்னமும், இந்தியாவில் உலகத்தரதிலமைந்த விமான நிலையங்கள் இல்லையே அதற்கு அரசு என்ன செய்யப் போகிறது?
என்பது மட்டுமா பிரச்சனை?
தற்போது Chennai-Colombo-Chennai, Chennai-Singapore-Chennai, Chennai-Kualalumbur-Chennai வான்தடங்களில் பிரயாணம் செய்யும் போது, நாம் ஒரு சர்வதேச பயணம் செய்கின்றோம் என்ற உணர்வே இல்லாமல், "குருவிகள்" செய்கின்ற செயல்கள், ஏதோ நாம் காஞ்சிபுரத்திற்கும்-உருத்திரமேரூருக்கும் இடையில் பயணிக்கும் உணர்வே மிஞ்சுகிறது, Colombo தீர்வையற்ற கடைகளில் தலைக்கு 50kg அளவிற்கு மதுபானங்களை கைப்பாரமாக வாங்கிக்கொண்டு வரும் "குருவிகளுக்குத்தான்" சென்னை விமான நிலைய அதிகாரிகள் முதல் மரியாதை கொடுப்பது மட்டுமல்லாது, உண்மையான பிரயாணிகளுக்கு தரும் சோதனைகள் சொல்லி மாளேலாது.
இந்நிலை மற்றைய வான்தடங்களுக்கும் வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சொல்கிறீர்கள்
//"குருவிகளுக்குத்தான்" சென்னை விமான நிலைய அதிகாரிகள் முதல் மரியாதை கொடுப்பது மட்டுமல்லாது, உண்மையான பிரயாணிகளுக்கு தரும் சோதனைகள் சொல்லி மாளேலாது.//
தூரம் குறைந்த வழித்தடங்களில் (கட்டணம் குறைவாக இருப்பதால்) இந்தப் பிரச்சனை வருகிறது. சிங்கப்பூர் சென்று வரும் குருவிகள் (Couriers இப்படி தமிழ் படுத்தப் பட்டு விட்டது என்பது என் யூகம்) இப்போதெல்லாம், தகவல் சேமிப்பு சில்லுகளைத்தான் (memory) அள்ளிக் கொண்டு வருகிறார்கள். பட்ஜெட் சேவைகளில் ஒரு வேளை நீங்கள் சொல்லும் நிலை வந்தாலும் வரலாம். இந்தியச் சந்தையிலேயே தவணை முறையில் ஸோனி, பானஸானிக், தரமான டிஜிட்டல் காமிராக்கள், அலைபேசிகள் முதலியவற்றை உத்தரவாதத்துடம் வாங்க முடியும் போது குருவிகள் கூட்டம் கடத்தி வந்து லாபமீட்டும் வாய்ப்புகள் பெருமளவு ஏற்கெனவே குறைக்கப் பட்டு விட்டன என்று சொல்லலாம்.
// அதற்கு என்ன செய்யப் போகிறது அரசு. சென்னையில் கோயம்பேட்டில் நிறைய இடம் இருக்கிறது. வேண்டுமானால் பரிசீலனை செய்யலாம் //
தற்போதைய சென்னை விமான நிலையத்திற்கு கோயம்பேடே சவால் என்று கேள்வி. சரியான முறையில் நீக்கப் படாத காய்கறிக் கழிவுகளை உண்ண ஏராளமான பறவைகள் வருவதால் (அந்நிய நாட்டுப் பறவைகள் கூட) விமானங்கள் தரையிறங்கும் போதும், பறக்க ஆரம்பிக்கும் போதும் பறவைகள் விமானத்தில் அடிபட்டு விமானங்களுக்குப் பெருஞ் சேதம் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். கழிவுகளை நீக்கும் முறையை மேம்படுத்தாமல் பறவைகளை சத்தம் போடாமல் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று சில நாட்களுக்கு முன் படித்ததாக ஞாபகம்.
விமான நிலையங்கள் விரிவாக்கத்திற்கு நிலம் ஒரு பிரச்சினை என்று எனக்குத் தோன்றவில்லை. தேவையான நிதி, மற்றும் அரசியல் திடமின்மைதான் விரிவாக்கத் திட்டங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்ல முக்கியக் காரணம் என்பது என் சொந்தக் கருத்து.
// ஆயிரக்கணக்கான கோடிகளை விமானங்களின் பொருட்டு அடுத்த நாட்டுக்குக் கொடுக்கிறோமே, இந்தியாவில் என்றைக்கு நாம் விமானங்களைத் தயாரித்து யன்படுத்த/சந்தைப்படுத்தப்போகிறோம் ?. //
அப்படிப் பார்க்கப் போனால், வருடா வருடம் கச்சா எண்ணெய் வாங்க இன்னும் அதிகமான கோடிகளை அந்நிய நாடுகளுக்கு அள்ளிக் கொடுக்கிறோம். கச்சா எண்ணெய் மூலாதாரங்களைப் பெருக்கிக் கொள்வதில் சீனா காட்டும் முனைப்பை இந்தியா காட்டவில்லைதான்.
விமானக் கட்டமைப்புத் தொழிலில் ஆய்வுகள் மற்றும் கட்டமைப்புக்கான (Research & Devalopment) முதலீட்டுச் சுமைகள் அதிகம். சிந்தனையில் இருக்கும் புது விமானம் செய்யும் திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வரத் தேவையான காலமும் மிக அதிகம். கருத்திலிருக்கும் விமானத் திட்டத்தை விமானமாக்கிப் பறக்கவிட சில பல வருடங்கள் பிடிக்கும். அதிபர் புஷ் 'பிரஷர்' போட்டாரனால் அமெரிக்கக் கம்பெனி ஆர்டரை அள்ளிக் கொண்டு போய் விடும். நமக்கு வீண்வேலை? :)
Post a Comment