Friday, April 08, 2005

ஒரு மாமனிதருக்கு அஞ்சலி ....

போப் ஜான் பால் II உலகின் சுமார் 1100000000 கத்தோலிக்கர்களுக்குத் மதத் தலைவர். இவர் போன வாரம் தனது 84 ஆம் வயதில் காலமானார்.

வாழ்வின் சவால்களை தைரியத்துடன் சமாளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வந்த இவர் தன் பேச்சுப் படியே வாழ்ந்து காட்டியவர். பல வருடங்களாக பார்கின்ஸன்ஸ் மற்றும் மூட்டுவலி நோய்கள் அவரது உடல் ஆரோக்கியத்திற்கும், அவர் தன் பணிகளைச் செய்யவும் பெரும் சவாலாக இருந்த போதும், அவற்றை தைரியத்துடன் எதிர் கொண்டு, பேச்சுப் படி வாழ்ந்து, இரும்பு போன்ற மனோதிடம் காட்டி, சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.

உலக நாடுகள் பலவற்றுக்கும் பல முறை பயணம் செய்து அந்நாட்டு மக்களைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டியவர். ஒவ்வொரு மண்ணிலும் தரையிறங்கியவுடன் குனிந்து அந்த நாட்டின் மண்ணை அவர் முத்தமிட்டதை நான் பார்த்திருக்கிறேன்.

அவரைப் பார்க்க பல்லாயிரக் கணக்கான் மக்கள் ஒவ்வொரு முறையும் கூடியிருப்பார்கள். அவர்கள் மத்தியில் அவர்களைப் பார்த்து கையசைத்து சிரித்த வண்ணம் போப் செல்வார். குழந்தைகள் உட்பட கூட்டத்தில் பெரும்பாலோர் போப் தன்னைப் பார்த்து தனிப்பட்ட முறையில் புன்னகைத்து ஆசிர்வதித்ததாக உணர்வார்கள். அத்தனை அன்பும் கனிவும் மிக்க ஒரு மனிதர் போப் ஜான் பால் II.

ஏழைகளின் நண்பராக விளங்கிய போப், ஏழைகளின் துயரங்களை உலகிற்கு எடுத்துக் காட்ட தனது அலுவலகத்தை உபயோகிக்கத் எப்போதும் தயங்கியதில்லை.

சோவியத் கம்யுனிசத்தினை மிக அமைதியாகவும், அழுத்தமாகவும் எதிர்த்தவர். அந்த நம்பிக்கை அமைதியான முறையில் வீழப் பெரிதும் காரணமானார்.

மக்கள் மேல் நம்பிக்கைத் திணிப்புகளும், நிர்ப்பந்தங்களும் ஏற்படுவதை இவர் விரும்பியதில்லை. ஒவ்வொரு முறையும் அமெரிக்கா மற்ற நாடுகள் மேல் ஆயுதம் ஏவிய போது இவர் தலைமையில் வாடிகன் அத்தகைய முயற்சிகளைக் கண்டித்துக் குரல் கொடுத்தது.

யூதர்கள்தான் இயேசுவின் எதிரி என்று நம்பிய கத்தோலிக்கர்களுக்கு மத்தியில், யூதர்களுக்கும் கத்தோலிக்கக் கிருஸ்துவர்களுக்கும் இடையே இருந்த கொலைவெறிப் பிளவைக் குறைக்கப் பாடுபட்டவர். யூதர்களுக்கு இஸ்ரேலை தாயகமாகக் கொள்ளும் உரிமை இருப்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்த மனிதர்.

உலகில் பல மத நம்பிக்கைகள் இருக்கலாம் என்ற ஒரு புது கத்தோலிக்கக் கொள்கையை உறுதிப் படுத்தியவர். எதிர் காலத்தில் கத்தோலிக்க நம்பிக்கைகளுக்கும் ஏனைய நம்பிக்கைகளுக்கும் இடையே நல்லிணக்கம் இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தவர்.

உலகம் ஒரு சிறந்த மனிதரை இழந்து விட்டது.

2 comments:

Anonymous said...

//உலகில் இருக்கலாம் என்ற ஒரு புது கத்தோலிக்கக் கொள்கையை உறுதிப் படுத்தியவர்//

ஆஹா என்ன ஒரு தாராள மனசு. நல்ல வேளை பல மத நம்பிக்கைகள் இருக்கலாம் என்று சொல்லிவிட்டார்.

//புது கத்தோலிக்கக் கொள்கை ?//

அப்ப முதல்ல நீங்க மட்டும் தான் இருக்குனும் உங்க ஏசுநாதர் சொல்லி இருந்தாரா? ஏதாவது ஆதாரம் இருக்குதா?

ந. உதயகுமார் said...

அன்புள்ள Anonymous,

எனது மத நம்பிக்கைகளைப் பற்றி என்னைக் கேட்காமலே முடிவெடுத்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி ! இதை ஆங்கிலத்தில் "Jumping the Gun" என்று சொல்லுவார்கள். தயவு கூர்ந்து இன்னமும் நான் எனது சொந்த நம்பிக்கைகளை தெளிவு படுத்தவில்லை என்ற தெளிவுடன் மேலே படிக்கவும்.

நீங்கள் சுட்டிக் காட்டியதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன். அவர் சில நம்பிக்கைகளை மாற்ற முயற்சி செய்தார். அந்த முயற்சியும் எண்ணமும் சிறந்ததாக் இருந்ததால் அந்தச் செய்கை அவரை நாம் மேல் தூக்கிப் பார்க்கச் செய்கிறது,

ஒரு மனிதனின் செயல்களைச் சீர் தூக்கிப் பார்த்த போது அவரைச் சார்ந்திருந்த சூழலில் அவர் என்ன் செய்தார் என்று பார்ப்பது முறை. நிலவிய சூழ்நிலை பற்றி விவாதம் செய்வது இப்பதிவின் நோக்கம் அல்ல.

- உதயகுமார்

Blog Archive