தொழில் நுட்பத்தின் அடுத்த புரட்சி டிஜிட்டல் (இந்தச் சொல்லைத் தமிழ் படுத்தத் தெரியவில்லை. ஆகவே டிஜிட்டல்..) திரைப்படம்.
சாதாரணமாக இந்நாள் வரை, பெரும்பாலான திரைப்படங்கள் வண்ண ஒளிப்பதிவு நாடாவில் (negative or positive film) படம் பிடிக்கப் பட்டு, படத்தின் நிழல் ஒளிச்சுருளில் நிரந்தரப் பதிவு செய்தல் (developing), கதாபாத்திரங்களின் வாயசைப்புக்கு குரல் கொடுத்தல் ( dubbing) , காட்சிகளை வெட்டி ஒட்டி முழுத்திரைப்படத்தை உருவாக்குதல் (editing) போன்ற காரியங்கள் செய்யப் பட்டு, தணிக்கை (film certification) முடிந்ததும் பல பிரதிகள் எடுக்கப் பட்டு திரையரங்குகளுக்கு படப் பெட்டிகளில் படச்சுருள்களாக (film) வினியோகிக்கப் படுகின்றன.
கடந்த வருடம் Digital Intermediate (இனிமேல் DI) என்ற தொழில் நுட்பத்தை சோதித்துப் பார்த்து வெற்றி கண்டுள்ளனர். DI முறையில் படச்சுருளின் ஒவ்வொரு சட்டத்தையும் (photo frame) டிஜிட்டல் படமாக மாற்றி வரிசைப்படுத்தி சேமித்துக் கொள்கிறார்கள். இது கேட்பதற்கு சாதாரணமாகத் தோன்றினாலும் சிக்கலான விஷயம்.
ஒரு திரைப்படத்தில் சாதாரணமாக 1,50,000 முதல் 2,00,000 சட்டங்கள் உள்ளன. படம் திரையரங்கில் துல்லியமாகத் தெரிய வேண்டுமென்றால் ஒவ்வொரு ஒளிச்சட்டமும் உயர்ந்த resolution ல் சேமிக்கப் பட வேண்டும். ஒரு திரைப்படத்திற்கு ஏறக்குறைய 12 டெராபைட் (terabyte) சேமிப்புத் திறன் தேவை.
பழைய ஒளிச் சுருள் தொழில் நுட்பத்தில் ஒரு காட்சிக்கு (shot) இவற்றை ஓரளவுக்கு மாற்றியமைக்க முடியும். அப்படி மாற்றியமைக்க முடியாமல் காட்சியின் ஒளி அமைப்பில் கோளாறு (over exposure, under exposure), அல்லது ஒளிப்பதிவு நாடாவிலேயே கோளாறு ஆகிய தவறுகள் ஏற்படும் போது, காட்சியைத் திரும்பவும் ஒளிப்பதிவு செய்ய வேண்டி வரும்.
DI தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு ஒளிச்சட்டத்திலும் வண்ணம், வண்ணச் சமன்பாடு (color balance), contrast ஆகியவற்றை கணினி உதவியுடன் துல்லியமாக மாற்றியமைக்க முடியும். படம் பிடிக்கப் படும் போது ஏற்படும் தவறுகளை சட்டத்திற்கு சட்டம் திருத்த முடியும்.
கடந்த வருடம் வெளிவந்த ஸ்பைடர் மான் 2 என்ற ஆங்கிலப் படம் DI தொழில் நுட்பம் கொண்டு தயாரிக்கப் பட்டது.
இப்போது ஒளிப்பதிவையும் டிஜிட்டல் காமிரா கொண்டு செய்யத் தொடங்கி விட்டதால், ஒளிச் சுருள் தொழில் நுட்பம் editing முடியும் வரை தேவையில்லை. தணிக்கை (Censor) செய்யவும், படச்சுருள் திரையிடும் இயந்திரங்களைக் கொண்ட திரையரங்குகளில் திரையிடவும் டிஜிட்டல் திரைப்படம் ஒளிச்சுருள் உருவிற்கு (format) மாற்றப் பட வேண்டும். ஒரு திரைப்படம் தயாரிப்பதில் ஆகும் பெரிய செலவுகளில் ஒன்று இப்படி படச்சுருள் பிரதிகள் செய்வது.
இப்போது டிஜிட்டல் உருவில் இருக்கும் திரைப்படத்தினை நேரடியாகத் திரையிடக் கூடிய இயந்திரங்களும் வந்து விட்டன. இத்தகைய இயந்திரம் பொருத்தப் பட்ட திரையரங்குகள் இணைய இணைப்பின் மூலம் திரைப்படத்தை server இல் இருந்து இறக்குமதி (download) செய்து கொண்டு திரையிடலாம். படச் சுருள் தேவையில்லை.
கமலுடைய "மும்பை எக்ஸ்பிரஸ்" டிஜிட்டல் உருவில் வெளியிடப் படப் போகிறது என்று அறிகிறோம்.
தமிழ்நாட்டில் இப்போது பல திரைகள் உள்ள அரங்குகள் (multiplex) பலவற்றை புதிதாக அமைத்து வருகிறார்கள். இவர்களால் செலவோடு செலவாக டிஜிட்டல் ஒளியிடும் கருவிகளைப் பொருத்த முடியும். பொருத்தி வருகிறார்கள் என்றும் கேள்வி. சமீபத்தில் அப்படி நூதன தொழில் நுட்பத்துடன் சென்னையில் அபிராமி பல திரை அரங்கு வளாகம் அமைக்கப் பட்டிருக்கிறது என்று செய்தி படித்தேன்.
அமெரிக்காவில் இப்படிப் பட்ட வளாகங்கள் சில வருடங்கள் முன்னர்தான் அமைக்கப் பட்டன. அப்போது டிஜிட்டல் தொழில் நுட்பம் இந்த அளவிற்கு முன்னேற்றம் அடையவில்லை. ஆகவே அமெரிக்கத் திரையரங்குகள் பழைய தொழில் நுட்பத்துடன் அமைக்கப் பட்டன. இவர்கள் புதிய தொழில் நுட்பத்திற்கு மாற ஏகச் செலவு செய்ய வேண்டும். ஆனால் நம் நாடு புதிய தொழில் நுட்பத்தை (அலைபேசித் தொழில் நுட்பத்தைத் தழுவிக் கொண்டதைப் போல) மிக வேகமாகத் தழுவிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
படச்சுருள் கொண்டு திரையிடும் போது சில நாட்கள் திரையிட்ட பின் படச்சுருளில் கோடுகள் விழுந்து படத்தில் மழை பெய்யும். மழை பெய்யும் படத்தைப் பார்க்கக் கூட்டம் வராது. உடனே கொட்டகைகளில் விழித்துக் கொண்டு "புததம் புதிய காப்பி" என்று அறிவிப்பு செய்து புதிய பிரதியைக் கொண்டு படத்தைத் திரையிடுவார்கள். டிஜிட்டல் முறையில் இந்தப் புத்தம் புதிய காப்பிக்காகும் செலவுப் பிரச்சினை கிடையாது.
ஆக, டிஜிட்டல் தொழில் நுட்பம் திரைப்படத் தயாரிப்புச் செலவுகளைப் பெருமளவு குறைக்கும் சாத்தியங்கள் பலவற்றைப் பெற்றுள்ளதால் விரைவில் வெள்ளித்திரையில் நாமெல்லாம் காணலாம்.
3 comments:
நல்ல பதிவு!
'டிஜிட்டல்' என்பதற்குத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தரும் சொல் 'இலக்கமுறை'. 'இலத்திரன்' என்று சொல்வாரும் உண்டு. பின்வரும் சுட்டியில் நிறைய கலைச்சொற்கள் உண்டு, உங்களுக்கு உதவலாம்.
http://www.tamilvu.org/library/o33/html/o3300001.htm
தங்கள் கருத்துக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி திரு. ராதாகிருஷ்ணன்.
-உதயகுமார்
உதய், ஏற்கனவே அந்த அலை ஆரம்பித்துவிட்டது. சென்னையில் சத்யம், உதயம், அபிராமி காம்பெள்க்ஸூகளில் ரியல் இமேஜின் "கியூப் டிஜிட்டல் சினிமா" ப்ரொஜக்டர் இருக்கிறது. இதன்மூலம் ஒரு படத்தினை வன்தகடு மூலம் தர இயலும். இந்த காரணத்தினால் தான் நான் மாற்று சினிமாவினை உருவாக்கும் செலவுகள் குறைவு என்பதையும், வணிக படங்களூக்கு நேர் எதிர்க்கோட்டில் மாற்று படங்களுக்கான சந்தை இருக்கிறது என்பதைப் பற்றியும் பேசி வருகிறேன். பார்க்க என் சுட்டிகள்
சுட்டி 1
சுட்டி 2
Post a Comment