முக்தார் மாயியைப் பற்றி இன்று "ஹிந்து"வில் எழுதியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் "கரோ-கரி" (karo-kari) என்று ஒரு பழங்குடி வழக்கம் உண்டாம். அதன்படி கௌரவக் கேட்டை விளைவித்ததாகக் காரணம் காட்டி ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொல்ல முடியும். அப்படிக் கொன்ற பின் அந்தப் பெண்ணின் சுற்றத்திடம் அந்த மனிதன் மன்னிப்புக் கோரி அவர்கள் மன்னித்து விட்டால் அந்தக் கொலை நியாயப்படுத்தப் படுகிறது. சட்டத்திற்குக் கூட அப்படி மன்னிக்கப் பட்ட ஒரு கொலையாளியைத் தண்டிக்கும் உரிமை இல்லையாம்.
"கரோ-கரி"யால் கடந்த ஆறு வருடங்களில் மட்டும் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப் பட்டிருக்கிறார்களாம்.
இவையெல்லாம் இணையத்தில் உள்ள பல்வேறு விவாதக் குழு விவாதங்களில் இருந்து திரட்டிய செய்திகள். கரோ-கரி மூலம் ஆண்களும் கொல்லப் படுகிறார்கள் என்கிறது பாகிஸ்தான் அரசு முகவரியைத் தாங்கிய ஒரு இணையப் பக்கம். ஆனால் பலியான பெண்கள் எண்ணிக்கை ஆண்கள் எண்ணிக்கையை விட மிக அதிகமாகத் தெரிகிறது.
சமீபத்தில் "கரோ-கரி"க்கு எதிராக ஒரு மசோதா மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டு, அது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்று பெரும்பான்மை வாக்களிக்கப் பட்டு தோற்றுப் போனது.
ஜப்பானில் "ஹரா-கிரி" என்று ஒரு வழக்கம் இருந்தது. இப்போது உண்டா என்று தெரியவில்லை. அதன் படி அந்தச் சமூகத்தில் கௌரவக் கேட்டை விளைவித்ததாகக் கருதப் படுபவர்கள், தம் வயிற்றை தாமே கத்தியால் அறுத்துக் கொண்டு இறந்து போவார்கள்.
இந்தியாவும் பெண்களுக்கெதிராக இழைக்கப் படும் கொடுமைகளில் பின் தங்கித்தான் இருக்கிறது என்று "சூர்யநெல்லி" விவகாரத்தை மேற்கோள் காட்டியிருக்கிறது "ஹிந்து".
2 comments:
நல்ல பதிவு!
நன்றி தங்கமணி! -உதயகுமார்
Post a Comment