இப்போது நாட்டில் பட்ஜெட் விமான சேவை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. ஜெட், இந்தியன் ஏர்லைன்ஸ், சஹாரா போன்ற நிறுவனங்கள் சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல சாதாரணமாக சுமார் ரூ 8000/- கட்டணம் வசூலிக்கிறார்கள். பட்ஜெட் நிறுவனங்கள் இதே சேவைக்கு ஒரு இருக்கைக்குக் கட்டணம் ரூ 500 இல் இருந்து ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு விமான சேவையிலும் குறிப்பிட்ட அளவு இருக்கைகளே இந்த விலைக்குக் கிடைக்கும். முந்திக் கொள்வோருக்கு இந்த விலையில் பயண இருக்கைகள் கிடைக்கும்.
ஒரு விமானத்தில் 150 இருக்கைகள் உண்டென்றால், சுமார் 5 முதல் 10 இருக்கைகளை இந்த விலைக்குக் கொடுப்பார்கள். ரூ 500/- சென்னையிலிருந்து டெல்லி செல்ல ஆகும் ரயில் செலவை விடக் குறைவு.
இந்த இருக்கைகள் விற்றுத் தீர்ந்த பிறகு மிச்ச இருக்கைகள் அதிக விலை வைத்து விற்கப் படும். இருக்கைக்கான விலை பயண நாள் நெருங்க நெருங்க படிப் படியாக அதிகரிக்கும்.
இவர்களுக்கு எப்படிக் கட்டுப்படியாகிறது? பல வித சிக்கன நடவடிக்கைகளால்தான்.
இத்தகைய பட்ஜெட் விமான சேவைகளில் மற்ற முன் குறிப்பிட்ட சேவைகளில் உள்ளது போல் பல வசதிகள் கிடையாது:
- தவிர்க்க முடியாத காரணங்களால் நாம் பதிவு செய்துள்ள விமானச் சேவை தடைப்பட்டால் விமான நிறுவனம் வேறு பயண ஏற்பாடோ, தங்கும் வசதியோ செய்து தர உத்தரவாதம் தருவதில்லை
- விமானப் பயணத்தின் போது சிற்றுண்டிச் சேவை கிடையாது. வீட்டிலிருந்து தயிர் சாதமும், புளியஞ்சாதமும் தாராளமாகக் கட்டிக் கொண்டு சென்று விமானத்தில் உண்ணலாம். குடிதண்ணிர் கூட காசு கொடுத்துத்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்
- விமான நிலையத்தில் பயணிகளுக்குக் குறைந்த பட்ச உதவிகளே விமான நிறுவனம் அளிக்கும். தன் கையே தனக்குதவி என்ற கொள்கையே பயணிகளுக்குப் பெரும் உதவி
- பயணச் சீட்டில் இருக்கை எண்ணைக் குறித்துத் தர மாட்டார்கள். கிடைக்கும் இருக்கையில் அமர்ந்து கொள்ள வேண்டியதுதான். இதற்கு வேண்டிய மென்பொருளுக்காகும் செலவை விமான நிறுவனம் தவிர்த்து, கிடைக்கும் இருக்கையில் பயணிகள் அமர்ந்து கொள்ளலாம் என்ற கொள்கையைக் கடைப் பிடிக்கின்றது
இந்தச் சேவையில் பயணம் செய்யும் பயணிகள் விமானத்தில் ஏறியதும், கட்டுச் சாதத்தைப் பிரித்து வைத்துச் சாப்பிடத் தொடங்கி விடுகிறார்களாம்.
பயணச் சீட்டில் இருக்கை எண் குறிக்கப் படாததால் ஏற்படும் குழப்பத்தை என் கண்ணால் பார்த்தேன்.
டில்லி விமான நிலையத்தில், விமானத்தின் புறப்பாடு அறிவிக்கப் பட்ட உடன் பயணிகள் விமானத்திற்குச் செல்லும் பேருந்தில் ஏற நீ முந்தி, நான் முந்தி என்று விமான நிலையத்தில் போட்டி போடுகிறார்கள். தரைப் பணியாளர்கள் (ground staff) சிக்கனம் கருதி மிகக் குறைவான அளவில் பணியமர்த்தப் பட்டுள்ளதால், பயணிகளிடையே ஏற்படும் குழப்ப நிலையை அவர்களால் திறம்படச் சீர் செய்ய இயலவில்லை. சில சமயம் தள்ளு முள்ளு (stampede) ஏற்பட்டதாகக் கூட நண்பர்களிடமிருந்து அறிகிறேன். விமான தளத்தில் மக்கள் பேருந்திலிருந்து இறங்கி விமானத்தை நோக்கிப் பந்தயம் கட்டி ஓடுகின்றனர். இவையெல்லாம் பாதுகாப்புக் கேடுகள்.
குறைந்த விலையில் விமானப் பயணம் செய்ய உயிரையும் தன்மானத்தையும் பணயம் வைக்கத் தேவையில்லை.
குறைந்த பட்சம் இருக்கை எண்ணைக் குறித்துக் கொடுக்க பட்ஜெட் விமான நிறுவனங்கள் யோசிக்க வேண்டும்.
2 comments:
Post a Comment