ஸ்டெம் செல் (stem cell) என்ற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ் இணைய பல்கலை கழகம் "முதல் நிலை உயிரணு" என்று தமிழ்ப் பதம் பரிந்துரைத்திருக்கிறது. குருத்துத் திசுள் என்றும் சொல்லலாமே என்று எனக்குத் தோன்றுகிறது.
கருவுறும் முன் தாயின் கருப்பையில் இருக்கும் முட்டைக்குப் பெயர் ஊசைட் (Oocyte). விந்து சேர்ந்து கருவுற்றபின் அது சைகோட் (Zygote) என்று அழைக்கப் படும். இந்த சைகோட்டில் ஒரே ஒரு திசுள்தான் (cell) இருக்கும். பிறகு இந்த திசுள் பிரிந்து இரண்டாகும். அடுத்து நான்காகும், அடுத்து எட்டாகும். திசுள்கள் இப்படியே இரட்டித்துப் பல்கிப் பெருகி குழந்தை வடிவத்தை அடைந்து வளரத்தொடங்கும். இப்படிப் திசுள்கள் பிரியும் ஆக முதல் நிலையில் இருக்கும் முட்டையை நாம் சினை முட்டை என்று அழைக்கிறோம். சுமார் 1000 திசுள்களுக்குக் குறைவாக உள்ள சினை முட்டையில் இருக்கும் திசுள்களே குருத்துத் திசுள்களாகும் (Stem cell).
குருத்துத் திசுளில் மனித மரபு கையொப்பம் (DNA) இருக்கிறது. இந்தக் கையொப்பம்தான் மனிதனின் நிறம், முகவெட்டு, உடல்வாகு போன்ற மனிதனுக்கு மனிதன் ஏற்படும் வித்தியாசங்களைத் தீர்மானிக்கிறது. ஒரு சினை முட்டையில் குருத்துத் திசுளில் உள்ள மரபுக் கையொப்பத்தை நீக்கி விட்டு, வேறு மனிதனின் மரபுக் கையொப்பத்தை அதில் செலுத்திவிட்டால் அந்த கையொப்பம் கொடுத்த இரண்டாவது மனிதனை நகலெடுக்க (cloning) முடியும் என்று ஆராய்ந்து இந்தக் கூற்றை உறுதி செய்ய பரிசோதனைகள் பலவும் உலகில் செய்து வருகிறார்கள். பெரும்பாலும் இத்தகைய பரிசோதனைகள் மிருகங்களின் மேல் செய்யப் பட்டன.
ஆட்டுக் குட்டி ஒன்றை வெற்றிகரமாக நகலெடுத்து அதற்கு 'டாலி' (Dolly) என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தனர். அது அற்பாயுசில் போய்விட்டது. நகலெடுக்கப் பட்ட வேறு சில மிருகங்கள் உலகில் வெற்றிகரமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வாழ்ந்து வருவதாகக் கேள்வி.
மனிதனை நகலெடுப்பதால் சமுக வளர்ச்சிக்கு வேண்டிய முக்கிய திறமையுள்ள, அறிவாற்றலுள்ளவர்களை நகலெடுத்து சிறப்பான மனித சமூகங்களை உருவாக்க இயலும் என்று மனித நகலெடுப்பு ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள்.
உலகின் அனைத்து உயிர்களும் ஒரே அளவில் முக்கியத்துவம் பெற்றவை; ஆகவே இப்படி திட்டமிட்டுத் தீர்மானிக்கப் படும் சமூகத்தால் ஏற்படப் போகும் சீர்கேடுகளையும், இயற்கையை மாற்றியமைப்பதால் விளையக் கூடிய அழிவுகளையும் இன்னொரு சாரார் சுட்டிக்காட்டி கடுமையாக எதிர்க்கிறார்கள். உலகில் மனித நகலெடுப்பிற்கு எதிர்ப்புதான் அதிகம் கிளம்பியிருக்கிறது.
குருத்து திசுளுக்கு ஒரு சிறப்புத் தன்மை உண்டு. அது உடலில் உள்ள எந்தத் திசுவில் உள்ள திசுளாகவும் மாறும் வல்லமை படைத்தது. அதாவது, அது மூளைத்திசுக்களை உண்டாக்கும் திசுள்களாகவோ, கண்ணின் ஓளிபுகும் குவி ஆடி (convex lens) திசுக்களை உண்டாக்கும் திசுள்களாகவோ, நரம்பு மண்டலத்தை உருவாக்கும் திசுள்களாகவோ அல்லது மனித உடலில் உள்ள எந்தவொரு வகைத் திசுவையும் உண்டாக்கும் திசுள்களாகவோ உருவெடுக்க முடியும்.
ஆகவே குருத்து திசுள்களை சிகிச்சைக்கும் பயன் படுத்தலாம். அவற்றிற்கு உடலின் எந்தவொரு திசுவாகவும் மாறும் சிறப்புத்தன்மையுள்ளதால் உடலில் நோயுற்று அழிந்து போகும் அல்லது விபத்துகளில் சிதைந்து போகும் பாகங்களைத் திரும்பப் பழைய நிலைக்கு வளர்க்க அவற்றை உபயோகிக்கும் வகையில் பல ஆராய்ச்சிகளும் உலகில் நடந்து வருகின்றன.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இனப்பெருக்கம் மூலம் மனித நகல் எடுக்கும் ஆராய்ச்சிகளுக்கும், சிகிச்சைக்காக குருத்து திசுள்களை உபயோகப் படுத்தும் ஆராச்சிகளுக்கும் ஒட்டு மொத்தத் தடை விதிக்கும் படி உறுப்பு நாடுகளை அறிவுறுத்தும் தீர்மானம் ஒன்று நிறைவேறியது.
இனப்பெருக்கம் மூலம் மனித நகலெடுக்கும் முயற்சியை எதிர்ப்பது புரிகிறது. ஆனால் சிகிச்சைக்காக குருத்துத் திசுள்களை பயன் படுத்தும் ஆராய்ச்சிகளையும் ஏன் எதிர்க்கிறார்கள்?
குருத்துத் திசுள்களை சினை முட்டையிலுருந்து எடுக்கும் போது சினைமுட்டை அழிக்கப் படும். அப்படி அழியும் போது அது ஒரு உயிரையே அழிப்பதற்குச் சமானம் என்பது இந்த எதிர்ப்பை முன் வைப்பவர்கள் வாதம். அப்படிப் பார்க்கப் போனால் இயற்கை முறையில் கருத்தரிக்க இயலாதவர்களுக்கு கருத்தரிக்க வைக்க இப்போது மருத்துவர்கள் கருப்பையிலிருந்து பல சினைமுட்டைகளை வெளியே எடுத்து மருத்துவம் செய்கிறார்கள். அதில் உபயோகமாகும் சினைமுட்டைகளைத் தவிர மற்றவை அழிக்கப் படுகின்றன. இதை மட்டும் ஒத்துக் கொள்ளலாமா என்று எதிர் கேள்வி கேட்கின்றனர் மற்றொரு சாரார்.
தமிழ் நாட்டில் சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவ வல்லுனர், பிரசவத்தில் தேவையில்லாதது என்று வெட்டி எறியப் படும் தொப்புள் கொடியில் குருத்து திசுள்கள் கோடிக்கணக்கில் இருப்பதாகக் கண்டு சொன்னார். ஆனால் இவை ஏற்கெனவே முதிர்ந்து காணப்படுவதாகவும், சினைமுட்டையில் கிடைக்கும் குருத்துத் திசுள்களை மிஞ்சும் திறன் வேறு எதற்கும் கிடையாதென்றும் சொல்லப் படுகிறது.
இந்தியர்கள் சிகிச்சைக்கான குருத்துத் திசுள் ஆராய்ச்சிகள் தொடரும் என்று கூறியுள்ளனர்.
10 comments:
நல்ல பதிவு உதயகுமார். இதை விக்கி பீடியாவில் இணைக்க முடியுமா? அறிவியலுக்கென்று ஒரு வலைபதிவு வந்தது அதிலும் இணைக்க முடியுமாவெனப்பார்க்கமுடியுமா?
நன்றி!
uthayakumar:
You have written very wel. Stem cell research, i belief is not going to be very beneficial.
1. Even if the cells can cure some defects as expected, the success rate will not be so great, expensive an dpeople fear some wrongdoings. I am not sure wht Hindu religion says on this, but America has a strong catholic support to protest anything that is not said Bible and we have their supporters ruling as of now. The debates are still on even this presidential election and neither party takes a strong hold on the issue.
well done
உதயகுமார்,
Stem cell ஐ 'தண்டு செல்' என்று நேரடியாக மொழிமாற்றி 'திண்ணை'யில் ஒரு கட்டுரை வந்தது. 'முதல் நிலை உயிரணு' என்பது தேவையில்லாத நீட்டிப்பாக உள்ளது. இரண்டையும் விட உங்கள் மொழிபெயர்ப்பான 'குருத்து அணு' நன்றாக உள்ளது. சாதாரண அணு(atom) விலிருந்து cell வரை நுண்பொருட்கள் அனைத்தையும் 'அணு' என்றழைப்பது சரியல்ல. எல்லா ஆங்கிலப் பெயர்களையும் மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. மொழியோடு ஒத்திசையக் கூடிய சொற்களை ஒலிபெயர்ப்பதும் நல்ல முயற்சியே. அந்த வகையில் stem cell ஐ நீங்கள் 'குருத்து செல்' என்றே அழைக்கலாம்.
மற்றபடி நல்ல கட்டுரை. embryoவைத் தான் நீங்கள் சினைமுட்டை என்கிறீர்களா? மனித 'சினைமுட்டை குருத்து செல்' ஆராய்ச்சிக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசின் தடை உள்ளது. கருக்கலைப்பின் மூலம் பெறப்படும் குருத்துச் செல்கள் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்பதால் இந்த தடை. கருக்கலைப்பில் உள்ள அதே அறவியல், அரசியல் கோட்பாட்டுச் சிக்கல்கள் சினைமுட்டை குருத்து செல் ஆராய்ச்சியிலும் உள்ளன. இது அமெரிக்காவைப் பொறுத்தவரை அவ்வளவு எளிதில் தீரக்கூடிய பிரச்சினையாகத் தெரியவில்லை.
நீங்கள் 'சினைமுட்டை' என்பது பெண்ணின் கருப்பையில் மாதாமாதம் உருவாகும் முட்டையையா அல்லது விந்து சேர்ந்து கருக்கட்டிய முட்டையையா?
அன்புள்ள தங்கமணி, தேன் துளி, சுந்தரமூர்த்தி, மகிழன்,
உங்கள் கருத்துகளுக்கும், பரிந்துரைகளுக்கும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.
விக்கிபீடியாவில் இணைக்கும் முறை எனக்கு இதுவரை தெரியாது. தெரிந்து கொண்டு இணைக்க முயற்சிக்கிறேன். அறிவியல் வலைப் பதிவை பார்த்தாக ஞாபகம். அதையும் முயற்சிக்கிறேன்.
சுந்தரமூர்த்தி அவர்கள் கூறிய படி செல்லை அணு என்று அழைப்பது சரியா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது. பரிந்துரைக்கு நன்றி
சினைமுட்டை என்பது சுந்தரமூர்த்தி கூறியது போல் 'embryo'. அதாவது கருப்பையில் உருவாகும் முட்டை. விந்து சேர்த்து கருத்தரித்த முட்டை அல்ல மகிழன்.
- உதயகுமார்
விளக்கத்துக்கு நன்றி.
//சினைமுட்டை என்பது சுந்தரமூர்த்தி கூறியது போல் 'embryo'. அதாவது கருப்பையில் உருவாகும் முட்டை. விந்து சேர்த்து கருத்தரித்த முட்டை அல்ல//
அப்படியானால் உயிர்க்கொலை என்ற வாதம் ஏன் வருகிறது. தானாகவே அழிந்துபோகும் ஒன்றல்லவா?
//அப்படியானால் உயிர்க்கொலை என்ற வாதம் ஏன் வருகிறது. தானாகவே அழிந்துபோகும் ஒன்றல்லவா?//
சுந்தரமூர்த்தி சரியாகத்தான் எழுதியிருக்கிறார். மகிழன், உங்கள் வாதமும் சரியே! சினைமுட்டை (Embryo) என்பது கருத்தரித்த பின்னர் உள்ள நிலையையே குறிக்கிறது. ஆகவே இது ஒரு உயிரைக் கொல்வதற்குச் சமானம்தான். நான் சரியாகப் புரிந்து கொள்ளாமல் குழம்(ப்)பியிருக்கிறேன். குழப்பத்திற்கு மன்னிக்கவும். நன்றி!!
//ஆட்டுக் குட்டி ஒன்றை வெற்றிகரமாக நகலெடுத்து அதற்கு 'டாலி' (Dolly) என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தனர். அது அற்பாயுசில் போய்விட்டது.//
அற்பாயுசு எனுமளவுக்கு அவ்வளவு குறைந்த ஆயுள் அல்ல என்று நினைக்கிறேன். டாலி போனது, நுரையீரல் மற்றும் மூட்டுவாதப் பிரச்னைகள் சிலவற்றால்தான்...
இந்தப் பதிவு எனக்குப் புரிந்த வரை சரியான தகவல்களுடன் இப்போது திருத்தப் பட்டிருக்கிறது. விவாதித்துப் பரிந்துரைகளைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. டாலி இறந்ததில் அதன் உடல் உறுப்புகள் நகலாரய்ச்சியில் பிறந்ததால்தான் சரியாக வளராமல் தோற்றுப் போனதாக ஒரு கருத்தை நான் படித்தேன். ஆகவே டாலியை மட்டும் பதிவில் அப்படியே விட்டு விட்டேன். இக்கட்டுரை விக்கிபீடியாவிற்காகத் தொகுக்கப் பட்டு அங்கும் பதிவு செய்யப் பட்டு விட்டது. எத்தனை பேர் உதைக்க வரப் போகிறார்கள் பார்ப்போம் :) (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D) - உதயகுமார்
Post a Comment