Saturday, January 24, 2009

எ வெட்னெஸ்டே - ஹிந்தி திரைப்படம்

நீரஜ் பாண்டே இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸிருதீன் ஷா மற்றும் அனுபம் கேர் நடித்திருக்கிறார்கள். ஒரு புதன் கிழமை மதியம் இரண்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி நடக்கும் போலீஸ் மற்றும் தீவிரவாதம் சம்பத்தப் பட்ட நிகழ்வுகளைச் சித்தரிக்கும் படம். இந்தப் படம் திரையரங்குகளுக்கு வந்த சூட்டில் டப்பாவிற்குள் போய் விட்டதாம்.

அலுவலக நண்பர்கள் பரிந்துரைத்ததால் லாண்ட்மார்க்கில் ஒளித் தகடு வாங்கி வந்து பார்த்தேன். மோஸர் பாயர் சல்லிசான விலையில் வெளியிட்டிருக்கிறார்கள்.

காவல் துறை உயர் பதவியில் இருக்கும் அனுபம் கேர், தான் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் நரிமன் பாயிண்டில் கடலைப் பார்த்து அமர்ந்து பணியில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களை அசை போடுகிறார். என்றைக்குமே மறக்க முடியாதது என்று இந்த அனுபவத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறார். படம் முழுவதும் ஃப்ளாஷ் பாக். ஃப்ளாஷ் பாக்கிலிருந்து மீளாமலே படம் முடிந்து போகிறது.

படத்தில் ஒரு வயதான (சராசரிக் குடிமகன் தோற்றமுள்ள) மனிதர் மும்பையின் பல பொது இடங்களில் (காவல் நிலையம் உட்பட) ஒரு கறுப்புப் பையைக் கொண்டு போய் யாரும் கவனிக்காத வகையில் விட்டு விட்டு வந்து விடுகிறார். பிறகு கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் வானளவிய கட்டடத்தின் உச்சாணியில் அமர்ந்து கொண்டு செல்பேசியில் அனுபம் கேருக்கு மிரட்டல் விடுகிறார். செல்பேசித் தொழில் நுட்பத்தின் அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு அவர் எங்கிருந்து எப்படிக் கூப்பிடுகிறார் என்பது போலீஸிற்குத் தெரியாத வகையில் செயல் பட்டு அவர்களைத் திணற அடிக்கிறார். சரி, மிரட்டல் என்ன? அவர் குறிப்பிடும் நான்கு தீவிரவாதிகளை மும்பைக் காவலில் இருந்து விடுவித்து அவர் சொல்லும் இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கும்ள் அதைச் செய்யாவிட்டால் மும்பை வெடித்துச் சிதறும். போலீஸ் இவரை நம்ப மாட்டார்கள் என்று தெரிந்து, அனுபம் கேரிடம் எந்தக் காவல் நிலையத்தில் குண்டு வைத்திருக்கிறார் என்று மட்டும் தகவல் கொடுக்கிறார். போலீஸ் அந்தக் குண்டைக் கண்டு பிடித்ததும் கதை சூடு பிடிக்கிறது. குண்டு வைத்து போலீஸை மிரட்டும் பாத்திரத்தில் நஸிருதீன் ஷா சிறப்பாக நடித்திருக்கிறார்.

சந்தையின் உச்சத்தில் இருக்கும் கதாநாயகன், துணிப் பஞ்சத்தில் வாடும் கதாநாயகி, ஆட்டம், பாட்டு, தடவல், காமெடி ட்ராக் எதுவும் இல்லாத இந்தப் படம் ஆரம்பித்தது தெரியவில்லை. முடிந்து விட்டது. அவ்வளவு விறுவிறுப்பு. பல காட்சிகளில் நம்மை இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். நாட்டுப் பற்று, கடமை உணர்ச்சி, குடும்பப் பாசம், துடிப்புடன் கூடிய பொறுப்புணர்ச்சி, நிதானத்துடன் கூடிய தெளிவு போன்றவைகளைச் சிறப்பாகவும் கோவையாகவும் சித்தரிக்கும் படம்.

சராசரிக் குடிமகன் யோசிக்க லாயக்கில்லாதவன், பூச்சி, தப்பைத் தட்டிக் கேட்காதவன், பயந்து வாழ்வதற்கே பிறந்தவன். வெகுண்டால் அல்லது யோசித்தால் அவன் குற்றவாளியாகத்தான் இருக்க முடியும் என்பது போன்ற நம் சமுதாயத்தின் சிந்தனைத் தளைகளை உடைத்தெறியும் படம்.

ஆங்கிலப் படத்திற்கு இணையாக எடுத்திருக்கிறார்கள். 'வில்லு' வெல்லாம் இதனிடம் பிச்சை வாங்கக் கூட லாயக்கில்லாத படம். ஒளித்தகட்டில் காசு கொடுத்து வாங்கிப் படம் பார்த்து படம் எடுத்தவர்களை ஊக்குவித்தால் ஒருவேளை உங்கள் பேரப் பிள்ளைகளுக்கும் எனது பேரப் பிள்ளைகளுக்கும் கிடைக்கவிருக்கும் இந்திய பொழுது போக்குத் தேர்வுகளின் சராசரித் தரம் உயர வாய்ப்புள்ளது.

3 comments:

வடுவூர் குமார் said...

நானும் பார்த்துவிட்டேன்.எனக்கும் பிடித்திருந்தது.

ந. உதயகுமார் said...

மகிழ்ச்சி வடுவூர் குமார்!

shabi said...

kamal intha padatthai thamilil edukka irukkirar

Blog Archive