Sunday, June 19, 2005

சபைக்கு வந்தனம்!

இயல், இசை, நாடகம் வளர்த்தது சங்க கால மதுரை முத்தமிழ் மன்றம். பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டா இல்லையா என்று பாண்டிய மன்னனும், தருமியும், இறையனாரும், நக்கீரரும் தமிழ் விவாதித்த சங்கப் பலகை. இன்றைய மின் தமிழ்ப் பலகையான தமிழ் மணத்தில் அதற்கு இணையான முக்கியமான கருத்துகளான "வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் மனிதனுக்குத் தெரியும் நாள்", "பெண்ணின் மார்பகம் அழகா, அவஸ்தையா?" என்று 'தமிழை' இங்கேயும் தீவிரமாக விவாதிக்கிறார்கள்.

உலகெங்கும் வேவ்வேறு நாடுகளில் குடியேறி வாழ்ந்து, அந்தந்த நாட்டுப் பண்பாடுகளைய்ம் பழக்க வழக்கங்களையும் மனிதத்தின் மேல் அவை ஏற்படுத்தும் தாக்கத்தையும் கண்டவர்கள் தமிழ் மக்கள். அவர்கள் தமிழ் மணத்தில் பகிர்ந்து கொள்ளும் எண்ணங்களும் நோக்குகளும் தமிழறிவின் விளிம்புகளை விரிவு படுத்த நாளடைவில் பெரிதும் உதவும் என்று நான் நம்புகிறேன்.

அக்டோபர் 2004 முதல் நானும் இங்கே உலாவிக் கொண்டிருக்கிறேன். நான் படித்த வரை விவாதங்களில் பெரும்பாலானோர் முற்போக்கு சிந்தனையும், கண்ணியமும், மற்றும் சக வலைப்பதிவர்களுக்கு மரியாதையும் காத்து சிறந்த முன்னுதாரணத்துடன் திகழும் ஒரு களம் தமிழ்மணம். தேவையற்ற, கண்ணியமற்ற சிந்தனைகளைத் தடை செய்ய அவற்றைப் புறக்கணித்தல்/ தவிர்த்தலை சக்தி வாய்ந்த ஆயுதமாக உபயோகிக்க அமைதியுடனும் முதிர்வுடனும் அறிவுறுத்துவோர் உலாவும் களம்.

இங்கே அருமையான கதை, கவிதை, சமையல் குறிப்பு, இறைவணக்கம், தேசபக்தி, சுத்த தமிழ், மதுரைத் தமிழ், பேட்டைத் தமிழ், அறிவியல், பொருளாதாரம், புகைப்படங்கள், வாழ்க்கைச் சிந்தனைகள்... இன்னும் பற்பல திறமைகளைப் பார்க்கலாம். எழுத்துப் பிழைகளும், இலக்கணப் பிழைகளும் இங்கு பெரிதும் மன்னிக்கப் படுகின்றன. இலக்கியம் உண்டா இல்லையா என்று விஷயம் தெரிந்தவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தீர்ப்புக்குக் காத்திருப்போம்.

தனிப்பட்டவர்கள் தங்கள் திறமைகளைத் தேவையற்ற தடைகளின்றி வெளிக்காட்ட வாய்ப்பு தரும் மேடை இது. தன் வலைப்பதிவிற்கு வாசகர்களைச் சுண்டியிழுக்க கடைப்பிடிக்கப்படும் வியாபார தந்திரங்களுக்கும் இங்கு குறைவில்லை.

சிறப்பான தொழில் நுட்பத்துடன் இந்த மின் பலகை அமைக்கப் பட்டிருக்கிறது. தமிழில் தட்டச்சுவதை சுலபமாக்கித் தருவதிலிருந்து, பதிவுகளை வெவ்வேறு வகையாக வகைப்படுத்திக் காட்டுவது, மற்றும் அவற்றிற்கு மதிப்பீடு அளிக்க வாய்ப்பளிப்பது வரை நவீனத் தொழில் நுட்பத்தின் தாக்கம் இங்கு அதிகம். தமிழன் தொழில்நுட்பத்தைப் புரிந்து உபயோகிப்பதில் எவருக்கும் சளைத்தவனல்ல என்பதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு.

திறமைகள் நிறைந்த தமிழ்மணத்தில் எனது ஆக்கங்களுக்கும் நட்சத்திர மதிப்பு கொடுக்க விழைந்ததற்கு முதலில் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

இந்த வாரம் என் பதிவுகளுக்கு நீங்கள் ஒதுக்கப் போகும் நேரத்திற்கும், கூறப் போகும் கருத்துகளுக்கும் முன் கூட்டியே என் வரவேற்பையும், பணிவான வந்தனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது வலைப்பதிவுகள் 1. கற்றதும் சிந்தித்ததும் 2. தமிழ் குட்டிக் கதைத் தொகுப்பு

வாய்ப்புக்கு நன்றி!

11 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

வருக உதயகுமார். உங்களின் இந்த வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள். முதல் பதிவே நன்றாக இருக்கிறது. வழக்கமாய் உங்கள் பதிவுகளில் உணர்ச்சி (emotions) சற்று குறைவு என்று நினைத்ததுண்டு. இன்னும் கொஞ்சம் இருக்கலாமே என்று நினைத்ததுண்டு. அது இந்தப் பதிவில் இருக்கிறது என்று நினைக்கிறேன். நன்று. தொடர்க.

ந. உதயகுமார் said...

செல்வராஜ். நீங்கள் தந்திருக்கும் உற்சாகத்திற்கும், உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி. எனது சிறப்பான முயற்சியை இந்த வாரம் எனது பதிவுகளுக்கு அளிப்பேன். - உதயகுமார்

Vijayakumar said...

முதல்ல இந்த வார தமிழ்மணம் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்.நிறைய விசயங்களை போட்டுத்தாக்குங்கள். இனிமே தான் பதிவே படிக்கப் போகிறேன். வணக்கம்

Thangamani said...

வாங்க உதயகுமார். இந்த வாரம் நீங்கள் உங்கள் நிதானமான, நதிபோன்ற நடை கொண்ட பதிவுகளால் சுவை கூட்ட வாருங்கள்!

contivity said...

வருக உதயகுமார்..

விண்மீனானதற்கு வாழ்த்துக்கள்.. பல நல்ல படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...

நன்றி..

துளசி கோபால் said...

வாங்க உதயகுமார் வாங்க!!!!

வாழ்த்துக்கள்.

ந. உதயகுமார் said...

நண்பர்கள் விஜயகுமார், தங்கமணி, contivity, துளசி கோபால், உங்கள் உற்சாகமான வரவேற்பிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. - உதயகுமார்

வசந்தன்(Vasanthan) said...

வருக வருக!
ஆவலோடு பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
-வசந்தன்-

இராதாகிருஷ்ணன் said...

இந்த வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

கிஸோக்கண்ணன் said...

எனது வாழ்த்துக்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் உதயகுமார்.

ந. உதயகுமார் said...

அன்புள்ள வசந்தன், ராதாகிருஷ்ணன், கிஸோக்கண்ணன்,

உங்கள் வரவேற்பிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

- உதயகுமார்

Blog Archive