இணைய தள சீட்டியகத்தில் (குழம்ப வேண்டாம் - 'ட்விட்டரை'த்தான் அப்படி தமிழ் படுத்தியிருக்கிறோம்) ஆறு மணி நேரத்தில் இந்தப் படத்தைப் பற்றி 7000 சீட்டியடித்தார்கள். அப்படியாகத்தானே பிரமாதப் படுத்தப் பட்ட படத்தைப் பார்க்க அம்பா 'ஸ்கைவாக்' சென்றோம்.இன்செப்ஷன் என்றால் ஆரம்பம் அல்லது தொடக்கம் என்று தமிழ் அகராதியில் பொருள் சொல்லியிருக்கிறார்கள். படம் சுமார் 130 நிமிடமே ஓடுகிறது.
கதையில் ஒரு பெரும் வணிகப் பேரரசை உருவாக்கிய கிழவர் சாகக் கிடக்கிறார். அவர் மகனுக்கு ஆட்சிப் பொறுப்பு போகப் போகிறது. எதிர் நிறுவனக்காரர்கள் மகனின் மனத்தில் 'அப்பா வழி நமக்கு உதவாது. வணிகப் பேரரசை உடைப்பதுதான் சரி' என்ற எண்ணத்தை விதைத்து விட்டால் நமக்குப் பிரச்சினை விட்டது என்று யோசிக்கிறார்கள். நமக்குத் தேவையான் எண்ணத்தை அடுத்தவர் மனதில் விதைப்பதுதான் 'இன்செப்ஷன்'. கனவில் புகுந்து குழப்பம் செய்யத் தெரிந்தவர்கள் கையில் அலுமினியப் பெட்டியுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதில் உதவக் காத்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நம்ம ஊர் மெகாசீரியல் கதாநாயகிகளின் திறமை இயக்குனருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
மகன் அப்பாவின் சடலத்தை எடுத்துக் கொண்டு அமெரிக்கா பயணப் படுகிறார். விமானம் அமெரிக்கா சேர்வதற்குள் அவரைத் தூங்கப் பண்ணி கனவை வரவழைத்து, அந்தக் கனவில் நுழைந்து அவர் மூளைக்குள் எண்ணத்தை விதைக்க வேண்டும். அது ஒரு கனவில் முடியாது. கனவுக்குள் கனவு வேண்டும் என்று மூன்று கட்டக் கனவுத் திட்டம் தீட்டி, மூன்றில் முடியாமல் மூன்றரைக்குள்ளும் போகிறார்கள்.
அந்தக் காலத்து விட்டலாச்சார்யா படம் பார்க்க அறிவுத் திறன் தேவையில்லை. இங்கே ஐ.க்யூ (IQ) 160 க்கு கீழே இருந்தால் பிரச்சினை. என் மாதிரி அட்சர குச்சிகளுக்கு மிகவும் சிரமம். நல்ல வேளை எழுத்துப் போட்டு படம் காண்பித்தார்கள். படத்தின் நடுவே தொண்டைக் கமறலாக இருக்கிறது என்று லேசாக ஒருமுறை செருமிக் கொண்டேன். பக்கத்து சீட்டில் துணைவியார் நானும் கனவுக்குள் போய் குறட்டை விடுகிறேன் என்று நினைத்து விட்டார். நீங்களும் எதற்கும் ஒரு முறை கிள்ளிப் பார்த்து விடுங்கள்.
ட்விட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டுகிறது என்று சொல்லியிருந்தார்கள். புரியாததுதான் பிரச்சினை என்று படத்தைப் பார்த்த பிறகுதான் நமக்கே விளங்கியது. பின்னால் சீட்டில் அறிவு ஜீவிகள் சிலர் படத்தை பார்க்கும் போதே ஆராய்ந்து அலசி கோனார் உரை வேறு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

